கரீம்நகர்: பெற்றோரை மட்டுமின்றி, ரோட்டில் சென்ற, வந்த என்று 22 பேரை ரத்தம் சொட்ட, சொட்ட வாளால் வெட்டிய சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் சுட்டுக்  கொன்றனர்.

தெலங்கானா மாநிலம் கரீம்நகரின் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பல்விந்தர்சிங் என்ற பப்லு (28). சாப்ட்வேர் இன்ஜினியர். பெங்களூருவில் வேலை பார்த்து  வந்தார்.

இவரது தந்தை அம்ருத்சிங். தாயார் பேபி கவுர். பப்லு சமீபத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் மனமுடைந்து  காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் பப்லுவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பப்லு, வீட்டில் இருந்த கைப்பிடியுடன் கூடிய வாளை எடுத்து வந்து பெற்றோரை சரமாரியாக வெட்டினார்.

இதில் இருவரும் ரத்த  வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தனர். ஆனாலும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை. வீட்டை விட்டு வெளியில் வந்த பப்லு, கண்ணில் எதிர்ப்பட்ட 19 பேரை வாளால்  வெட்டினார். இதில் பலருக்கு ரத்தம் பீறிட்டது.

பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அவரை கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து  போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் பப்லுவுக்கு மேலும் வெறி அதிகமாகியது.  இதனால் போலீசாரை நோக்கி ஓடிய அவர், அவர்களையும் வெட்டினார். இதில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

பப்லுவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதை போலீசார் அறிந்தனர். மேலும், அவரால் பலர் பாதிக்கப்படுவதை தடுக்க சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.  சிறிது நேரத்தில் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் பப்லு படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

policeஇச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், ஆட்டோ டிரைவர் உட்பட 22  பேரை பப்லு வாளால் வெட்டியதால், அப்பகுதியே ரத்தக் காடாக காட்சியளித்தது என்றார்.

இந்நிலையில், வாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பப்லூவின் பெற்றோர் மற்றும் ஆட்டோ டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த மற்றவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருவதாக கரிம்நகர் துணை சூப்பரின்டென்ட் ராமாராவ் தெரிவித்தார்.

பெற்றோர், போலீசார் உட்பட 22 பேரை சாப்ட்வேர் இன்ஜினியர் வாளால் வெட்டிய  சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share.
Leave A Reply

Exit mobile version