ஆபாசப் பாடல் விவகாரத்தில் சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று நடிகர் சங்க தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியதாவது:
பீப் பாடலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சிம்புவிடம் தனிப்பட்ட முறையில் பலரும் பேசினோம். ஆனால் சிம்பு தரப்பினர், நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்து விட்டனர்.
இந்த பாடல் வெளியாகிவிட்டதால் மன்னிப்பு கேட்டு விட்டால் பிரச்சனை முடிந்துவிடும்; அதன் பின்னர் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தை கையிலெடுக்க வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறிப் பார்த்தோம்.
அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இது இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏமாற்றியதாக ராதிகா சொல்லியிருக்கிறார். அதுதொடர்பாக ராதிகாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.
பொருளாளர் கார்த்தி பேசுகையில்,
சரத்குமார் இன்னும் முழுமையாக கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக இரண்டு முறை அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.