பிறக்­கப்­போ­கின்ற 2016 ஆம் ஆண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வு காணப்­படும் என்­பது தமிழ்த்­தே­சிய கூட்ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் ஆணித்­த­ர­மான நம்­பிக்­கை­யாகும்.

இன்­றைய தமிழ் அர­சி­யலில், அதனை ஒரு தாரக மந்­தி­ர­மா­கவே அவர் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

யுத்தம் முடி­வுக்கு வந்து ஏழு வரு­டங்­க­ளாகப் போகின்­றது. இழு­பறி நிலையில் உள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நீண்ட கால எதிர்­பார்ப்­பாகும்.

யுத்­தத்­திற்கு மூல கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பது சர்­வ­தேச மட்டத்­திலும் உள்ளூர் அர­சியல் மட்­டத்­திலும் பல­வா­றாக வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இன்னும் வலியுறுத்தப்படுகின்­றது.

ஆயினும், ஒரு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான முயற்­சிகள் வெளிப்­ப­டை­யாக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை

இந்தச் சூழலில் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­றத்தைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்ள புதிய அரசாங்­க­மா­னது 2016 ஆம் ஆண்டு நிச்­ச­ய­மாக ஒரு அர­சியல் தீர்வைத் தரும். அல்­லது அர­சியல் தீர்வைக் கொண்டு வரும் என்று கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் அடித்துக் கூறி வரு­கின்றார்.

முள்­ளி­வாய்க்­காலில் ஒரு பெரும் மனித பேர­வ­ல­த்தை ஏற்­ப­டுத்தி யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த போதிலும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணாமல் பிரச்­சி­னை­களைக் கூட்­டு­வ­தற்கே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வழி வகுத்­தி­ருந்தார்.

எனவே, அவரை அரி­ய­ணையில் இருந்து வீழ்த்தி, புதிய ஜனா­தி­ப­தியை ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து புதிய அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும் அதன் தலை­மை­யி­லான தமிழ் மக்­களும் பேரா­த­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.

புதிய அர­சாங்கம் நல்­லாட்­சிக்­கா­னதோர் அர­சாங்­க­மாகக் கரு­தப்­பட்ட போதிலும், தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்சினைக்கு அப்பால், அன்­றாட வாழ்­வியல் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் இந்த நல்­லாட்சி, ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுக்­க­வில்லை.

இது, தமிழ் மக்­களின் அர­சியல் ஆதங்­க­மாகும். நட­வ­டிக்­கை­க­ளைத்தான் எடுக்க முடி­யா­விட்­டாலும் பர­வா­யில்லை. நல்லெண்ண சமிக்­ஞை­க­ளை­யா­வது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் தானே என்­பது அவர்­களின் அர­சியல் ஏக்­க­மாகப் பரிணமித்­தி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யி­லேயே, அர­சியல் பிரச்­சி­னைக்கு, புதிய ஆண்டில் தீர்வு காணப்­படும். எனவே, அமைதி காக்க வேண்டும். பொறு­மை­யா­கவும் பொறுப்­போடும் நடந்து கொள்ள வேண்டும் என்று தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்தி வரு­கின்றார்.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே இரா­ணுவ மேலா­திக்­கத்­திற்கே முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளது, மற்­றும்­படி உப்புசப்பற்றதொரு வரவு –செலவுத் திட்­ட­மாகும் என்று பல­ராலும் விமர்­சித்து, எதிர்க்­கப்­பட்ட அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்­டத்தை சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு புதிய அர­சாங்கம் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை நிச்­சயம் எடுக்கும் என்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே, அர­சாங்­கத்­திற்குத் தொடர்ந்து, எல்லா வழி­க­ளிலும் ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் வழங்க வேண்டும் என்­பது சம்­பந்­தனின் நிலைப்­பா­டாகத் தெரி­கின்­றது.

நல்­லாட்சி நம்­பிக்­கை­யூட்­ட­வில்­லையே

அன்­றாட வாழ்­வியல் பிரச்­சி­னை­க­ளாகத் தோற்றம் பெற்­றுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை, இரா­ணு­வத்தின் ஆக்­கி­ர­மிப்பில் உள்ள காணி­களை விடு­வித்து, இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்­றுதல், காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்­டிய கட­மையை அர­சாங்கம் செய்தல், வட­மா­காண சபை அர்த்தமுள்ள வகையில் செயற்­ப­டு­வ­தற்குத் தேவை­யான சூழலை உரு­வாக்­குதல் போன்ற விட­யங்­களில் நல்லாட்சிக்கான புதிய அரசாங்கம் எந்­த­வி­த­மான அக்­க­றை­யையும் தீவி­ர­மாகச் செலுத்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லை விட­யத்தில் ஜனா­தி­ப­தியும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அளித்­தி­ருந்த வாக்­கு­று­திகள், சட்­டமா அதி­ப­ரு­டைய அதி­காரச் செயற்­பாட்­டுக்குள் ஆர­வா­ர­மின்றி அடங்­கி­விட்­டன.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பது, ஒரு சிலரை பிணையில் செல்ல அனு­ம­தித்­த­தோடு தேங்கி நிற்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நவம்பர் 7 ஆம் திக­தி­யென்ற காலக்­கெ­டு­வுடன் கூடிய உறு­தி­மொழி, முடமாகிவிட்­டது.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு (பிணையில் செல்ல அனு­ம­திக்­கு­மாறு) பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சட்­டமா அதி­ப­ருக்கு விடுத்­த­தாகக் கூறப்­படும் உத்­த­ரவு, நடை­மு­றையில் செய­லற்றுப் போய்­விட்­டது.

இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய பிடியில் உள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் முன்­னைய அரசாங்கத்தின் வேலைத்­திட்­டத்­திற்­க­மை­வா­கவே ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ஏக்கர் காணிகள் கிள்­ளிக்­கொ­டுத்த கணக்கில் விடு­விக்­கப்­பட்­டன.

மேலும் காணிகள் விடு­விக்­கப்­படும் என்ற அறி­விப்பு கவர்ச்­சி­க­ர­மான அரசியல் அறி­விப்­பாக மட்­டுமே வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. நடை­மு­றையில் எந்­த­வொரு அசை­வையும் இதில் காண முடி­ய­வில்லை.

இதனால் புதிய அர­சாங்கம் தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு நிச்­ச­ய­மாகத் தீர்வு காணும். அதற்­கான நட­வ­டிக்­கை­களைத் துணிந்து மேற்­கொள்ளும் என்ற நம்­பிக்கை தமிழ் மக்கள் மனங்­களில் இது­வ­ரையில் துளிர்க்­க­வில்லை.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைமை அரசாங்கத்தின் மீது நம்­பிக்கை வையுங்கள், அர­சாங்­கத்தை நம்­புங்கள் என்று தூண்டி வரு­கின்­றது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான், புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. அந்த அர­சி­ய­ல­மைப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் என்று அர­சாங்கத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டையில் இந்தத் தீர்வுத் திட்டம் அமைந்­தி­ருக்கும் என்ற மற்­று­மொரு தக­வலும் அரச தரப்பில் இருந்து கசி­ய­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்கள் செய்­யாமல் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண முடி­யாது. இதில் இரண்­டா­வது கருத்துக்கு இட­மில்லை.

எனவே, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு, அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் கொண்டு வரு­வதைப் போன்ற நல்­ல­தொரு சந்­தர்ப்பம் அமை­ய­மாட்­டாது என்று வாதி­டவும் இட­முண்டு.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வொன்றைக் கண்டு, அதனை நிரந்­த­ர­மாக்­கு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் கொண்டுவந்தே ஆக வேண்டும்.

அவ்­வாறு தீர்­வொன்றைக் கண்டு அதற்­கா­கவே அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் கொண்டு வரு­வ­திலும் பார்க்க, புதிய அரசியல­மைப்பைக் கொண்டு வரும்­போது, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை அதில் உள்­ள­டக்­கு­வது சாது­ரி­ய­மான ஒரு செயற்­பா­டா­கவும் கரு­தலாம். அதில் தவ­றில்லை.

ஆனால் இங்கு பிரச்­சினை என்­ன­வென்றால், இனப்­பி­ரச்­சி­னைக்கு எவ்­வா­றான ஒரு தீர்வு காணப்­படும் என்­பது குறித்து, அர­சி­ய­ல­மைப்பை மாற்றம் செய்­வ­தற்கு முன்­ன­தாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் கூடிப் பேசி ஒரு முடி­வுக்கு வந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக இழு­பட்டு, இழு­பட்டு, புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு முற்­கூட்­டியே பேச்சுக்கள் நடத்­தப்­ப­டாமல், எழுந்­த­மா­னத்தில் தீர்வு காணும் வகையில், அர­சி­ய­ல­மைப்பில் விட­யங்­களை உள்­ள­டக்க முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­ரி­யது. விவா­தத்­துக்கும் உரி­யது.

தீர்வு என்ன?

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கும்­போது, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அதில் உள்­ள­டக்­கப்­படும் என்று அர­சாங்கம் கூறி­னாலும், அந்தத் தீர்வு என்ன என்­பது எவ­ருக்கும் தெரி­யாது.

பிறக்­க­வுள்ள புத்­தாண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று மலை­போல நம்­பி­யி­ருக்­கின்ற கூட்டமைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்­கா­வது அந்தத் தீர்வு என்ன என்­பது தெரிந்­தி­ருக்­கின்­றதா என்­பது தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­பி­னரும், இனப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்வு என்ன என்­பது குறித்த ஆலோ­ச­னை­களை இது­வ­ரையில் முன்வைக்க­வில்லை.

வெறு­மனே ஐக்­கிய இலங்­கைக்குள் ஒரு சமஷ்டி முறை­யி­லான ஒரு தீர்­வையே மக்கள் விரும்­பு­கின்­றார்கள். அத்த­கைய தீர்­வொன்றே பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்று சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றதே தவிர, அந்த சமஷ்டி எத்­த­கை­யது, என்­பது பற்­றிய விளக்­க­மு­மில்லை. விப­ரங்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வு என்­பது பல்­லின மக்­க­ளையும் பல்­வ­கை­யான சமூ­கங்க­ளையும் கொண்ட ஒரு நாட்­டிற்குப் பொருத்­த­மா­னது என்­பதில் எந்­த­வி­த­மான ஐயமும் கிடை­யாது.

ஆனால், இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், சமஷ்டி முறை­யி­லான ஒரு அர­சி­ய­ல­மைப்­புக்கு சிங்­கள மக்கள் மத்தியிலும்­சரி, சிங்­கள அர­சியல் கட்­சிகள் மத்­தி­யி­லும்­சரி, ஆட்­சியில் உள்ள அரச தரப்­பி­ன­ரி­ட­மும்­சரி, ஆத­ரவு காணப்ப­ட­வில்லை. சமஷ்டி என்ற சொல்­லா­னது, அவர்­க­ளு­டைய அர­சியல் போக்கில் தீண்­டத்­த­காத ஒரு சொல்­லா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மிகச் சிறிய நாடா­கிய இலங்கைத் தீவில் சமஷ்டி முறையில் ஒரு அர­சியல் தீர்வு காணப்­ப­டு­மே­யானால், அது பிரிவினைக்கு வழி­வ­குக்கும்.

நாட்டை இரண்­டாகத் துண்­டா­டவே வழி­வ­குக்கும் என்ற அர­சியல் அச்சம் அவர்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது.

சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்கள் இந்த நாட்டை இரண்­டாகத் துண்­டாடி, ஈழம் என்ற அவர்­க­ளுக்­கான ஒரு தனிநாட்டை உரு­வாக்கிக் கொள்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான அந்­தஸ்தை சமஷ்டி அர­சியல் முறை வழங்­கி­விடும் என்­பது அவர்­களின் அர­சியல் நிலைப்­பா­டாக உள்­ளது. அவர்­களின் அர­சியல் நம்­பிக்­கை­யா­கவும் அது காணப்­ப­டு­கின்­றது.

ஒற்­றை­யாட்­சியின் கீழ் மிகவும் குறைந்த அள­வி­லான அதி­காரப் பங்­கீட்டைக் கொண்­டதோர் அர­சியல் தீர்வே அவர்களுடைய இலக்­காக, இது­வ­ரையில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்­களைப் பொறுத்தமட்டில், ஐக்­கிய இலங்­கையும், ஒற்­றை­யாட்­சியும் கேள்­விக்கு அப்­பாற்­பட்­டது.

இன்னும் தெளி­வாகச் சொல்­வ­தானால், சிங்­கள பௌத்த மேலா­திக்கம் கொண்ட ஒற்­றை­யாட்சி முறையின் கீழ், சம அந்தஸ்து கொண்ட அதி­கா­ரங்­க­ளற்ற ஒரு அர­சியல் தீர்வே அவர்­க­ளு­டைய மனங்­களில் நிழ­லா­டு­கின்­றது.

ஆனால், ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டி முறை­யி­லான தீர்வு எப்­படி இருக்க வேண்டும் என்­ப­தற்­கு­ரிய மேலோட்­ட­மான வடிவம் குறி த்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது பாரா­ளு­மன்ற தேர்தல் அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

இணைந்த வடக்கு கிழக்கு தாய­கத்தில் சுய­நிர்­ண­ய­முள்ள அதி­காரப் பர­வ­லாக்­க­லுடன் கூடிய ஒரு அர­சியல் தீர்வே வேண்டும் என்­பது கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில், சிங்­கள மக்­களும், சிங்­கள அர­சியல் கட்­சி­களும் அர­சாங்­கமும் கொண்­டி­ருக்­கின்ற நிலைப்­பாடும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கொண்­டுள்ள நிலைப்­பாடும் மலைக்கும் மடுவுக்கும் இடை­யி­லான பாரிய வித்­தி­யா­சங்­களைக் கொண்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கின்­றது.

இந்த நேரெதிர் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள அர­சாங்கத் தரப்­பி­னரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும் ஒரு நேர்கோட்டில் எந்தப் புள்­ளியின் அடிப்­ப­டையில் சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்தி ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வர முடியும் என்­பது சிக்­கல்கள் நிறைந்­த­தொரு கேள்­வி­யாகும்.

இந்தக் கேள்­விக்கு உரிய பதில் இந்த இரண்டு தரப்­பி­ன­ரி­டமும் இருக்கின்­றதா என்­பதே இன்­னு­மொரு கேள்­வி­யாக இருக்­கின்­றது.

முதன் நிலை பேச்­சுக்­க­ளற்ற நிலையில் தீர்வு சாத்­தி­யமா?

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்று சர்­வ­தேசம் இலங்கை அர­சுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­ப­வற்­றுக்குப் பொறுப்பு கூறும் விட­யத்தில் புதிய அர­சாங்­கத்­திற்குக் கால அவ­கா­சத்­தையும், அர­சாங்­கத்தின் விருப்­பத்­திற்­க­மை­வான உள்ளூர் விசா­ர­ணைப்­பொ­றி­மு­றைக்­கு­ரிய இணக்­கப்­பாட்­டையும் வழங்கி சர்­வ­தேசம் ஒத்­து­ழைத்­துள்­ளது.

அந்த ஒத்­து­ழைப்பின் மூலம் சர்­வ­தேசம் இலங்கை அர­சுக்கு ஆத­ர­வான ஒரு நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே, சர்­வ­தே­சத்தின் முகத்தை முறிக்­காத வகையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் அரசாங்கம் செயற்­பட்டே ஆக வேண்டும் என்ற எதிர்­பார்ப்பும் கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே, சர்­வ­தே­சத்தின் அழுத்­தத்­திற்கு அடி­ப­ணிந்தும், அதன் விருப்­பத்தை நிறை­வேற்­றா­விட்டால் எழக்­கூ­டிய பின்விளை­வு­களைக் கருத்­திற்­கொண்டும் அர­சாங்கம் நிச்­ச­ய­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வைக் காணும் என்­பது அந்தத் தலை­மையின் நம்­பிக்கை என்­று­கூடக் கூறலாம்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதே சர்­வ­தே­சத்தின் பொது­வான நிலைப்பாடாகும்.

அந்தத் தீர்­வா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தாக – அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறைவு செய்­யத்­தக்­க­தாக அல்­லது அவர்கள் சந்­தித்­துள்ள உயி­ரி­ழப்­புக்கள், உடமை இழப்­புக்கள், தாயகப் பிர­தேச இழப்புக்கள் என்­ப­வற்றை ஈடு­செய்­யத்­தக்க வகையில் அமைய வேண்டும் என்ற அழுத்­தத்தை சர்­வ­தேசம் அரசாங்கத்திற்குக் கொடுக்­குமா என்­பது சந்­தே­கமே.

வேண்­டு­மானால், பிரச்­சி­னையில் சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­களின் இணக்­கப்­பாட்­டிற்கு அமை­வான ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று சர்­வ­தேசம் வலி­யு­றுத்­தலாம்.

..

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சி­யா­னது, குறு­கிய காலத்தில் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய ஒரு காரியமாகும்.

எனவே, அத்தகைய ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் சிக்கல் நிறைந்த இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு கண்டுவிட முடியுமா என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதுள்ளது.

அது மட்டுமல்லாமல், அரசியல் தீர்வுக்குரிய அடிப்படையான விடயங்கள் ஏற்கனவே ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்தி தீர்வு காணலாம் என்றதோர் இணக்கப்பாடு எதுவுமே அற்ற நிலையில் அரசியல் தீர்வு என்பது எந்த வகையில் சாத்தியமாகும் என்று தெரியவில்லை.

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் இனப்பிரச்சினை விவகாரத்தில் எதிரும் புதிருமான செயற்பாட்டையே இதுவரையில் முன்னெடுத்து வந்துள்ளன.

இப்போதுதான் இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. அதுவும் இரண்டு வருடங்களுக்கே இணைந்து செயற்பட வேண்டும் என்ற இணக்கப்பாடும் உள்ளது. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நல்லதொரு முயற்சி என்றே கூற வேண்டும்.

ஆயினும் தேசிய அரசாங்கமாக இருந்தாலும்கூட, அதனுள்ளே எத்தனையோ பிடுங்குபாடுகளும், முரண் நிலை மோதல்களும் காணப்படுகின்றன.

இத்தகைய ஒரு நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய ஒரு இணக்கப்பாட்டை அவர்கள் தங்களுக்குள்ளேயே எந்த அளவுக்கு விரைவாக எட்ட முடியும் என்று வரையறுத்து கூற முடியாதிருக்கின்றது.

அவ்வாறு எட்டப்படுகின்ற ஒரு இணக்கப்பாடு தமிழர் தரப்புக்கு ஒத்ததாக அமையுமா, அவ்வாறு ஒத்ததாக அமைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றியும் ஊகித்துக் கூற முடியாதுள்ளது.

எனவே, இப்போதுள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று கூறுவது – அதுவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சந்தர்ப்பத்தில் தீர்வு காண முடியும் என்பது வெறும் கையில் முழம் போடுகின்ற முயற்சியின் தோற்றமாகவே தோன்றுகின்றது.

-செல்வரட்ணம் சிறிதரன்-

Share.
Leave A Reply

Exit mobile version