டிசம்பர் 26 -ம் தேதி மாலை சூரியன் ஓய்வுக்கு போனதும், நிலா அதன் வெளிச்சத்தை பாய்ச்சி கொண்டிருந்த நேரம். இரவு மெல்ல மெல்ல பகலை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது.
பாலைவனத்தில் சல்லிசான மணல்களை வீசும் காற்றில் அனல் பறந்தது. அனல் காற்று அடிக்கும் துபாய் நாட்டின் ஒதுக்குப்புறம் உள்ள துபாய் அரச குடும்பத்தின் அரண்மனை கட்டடத்தில் உள்ளே, அளவாக ஐம்பது நபர்கள் மட்டுமே சிறப்பு விருந்தாளிகளாக குழுமியிருந்தனர்.
முகம் தெரியும் பால் வெள்ளை நிறமும், வெண் பளிங்கு நிறமும் கொண்ட உயர் கிரானைட் கற்களால் பார்த்து, பார்த்து செதுக்கிய அந்த கட்டடத்தின் உள்ளே மெல்லிய இசை முழங்க, உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய விருந்தினர்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்து கொண்டு இருந்தது.
அந்த மாளிகையை சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களால், வெளியே ஐந்தடுக்கு காவல் போடப்பட்டு இருந்தது. தவிர அந்த மாளிகைக்கு விண்வெளியில் இருந்து தாக்குதல் நடந்தாலும் கூட பாதிப்பு வராத அளவிற்கு சிறப்பு பாதுகாப்பும் செய்யப்பட்டு இருந்தது.
அமெரிக்காவில் உள்ள சிஐஏ ஏஜென்சி, இந்தியாவின் ‘ரா’ உளவுத்துறை உள்பட பல்வேறு நாடுகளின் ஏஜென்ஸிகள், கழுகுப் பார்வை கொண்டு இந்த நாளை கண்காணித்து வந்தன.
அவர்களுக்கும் இது போன்ற ஒரு சிறப்பு பார்ட்டி நடப்பது தெரியும். ஆனால் எங்கு நடக்கப் போகிறது என்பது மட்டும் தெரியாமல் குழம்பி போய் இருந்தது.
ஆனால் உள்ளே நுழைய மட்டும் முடியவில்லை. அப்படி என்ன சிறப்பு இந்த நாளில் என மண்டையை போட்டு உடைத்துக்கொள்கிறீர்களா? உலகத்தை மிரட்டும் தாதா தாவூத்திற்கு 60 வது பிறந்தநாள் விழா.
வேறு எந்த பிறந்த நாளுக்கு இல்லாமல் இந்த ஆண்டு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்றால், இந்த ஆண்டு நிழல் உலக தாதா பதவியில் இருந்து தாவூத் ஒய்வு(?!) பெறப்போவதாகவும், அவரின் அடுத்த வாரிசை நியமனம் செய்யப்போவதாகவும் உலகம் முழுவதும் உள்ள அண்டர் கிரவுன்ட் உலகத்திற்கு தகவல் பரவி இருந்தது.
அதனால்தான் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது தாவூத்திற்கு. மீடியாக்களும் என்ன நடக்க போகிறது என்று ஆவலுடன் தகவலுக்ககாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இது போன்ற தருணங்களில் மீடியாக்களுக்கு மட்டும் எப்படியாவது தகவல்கள் வந்துவிடும். அன்றும் அப்படிதான் வந்தது.
ஆனால் இந்த விழாவில் பாதுகாப்பு கருதி தாவூத் கலந்து கொள்ளவில்லை. தாவூத், தாவூத்தின் மனைவி மஹஜா பீன், மகன் மொய்ஸ், மகள் மெஹ்ரா ஆகியோருடன் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பாதுகாப்பான உயர் அடுக்கு பங்களாவில் நடந்த பிறந்த நாள் விழாவில், பாகிஸ்தானின் அரசில் உயர் பதவியில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
தாவூத் ஏற்பாடு செய்த போட்டோகிராபர்கள் தவிர வேறு யாரும் அங்கு ஒரு சின்ன புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு, துபாயில் நடந்த பிறந்த நாள் பார்ட்டியை வீடியோ ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் டெக்னாலஜி மூலம் துபாயில் தோன்றிய தாவூத், பல்வேறு விஷயங்களை உணர்ச்சிகரமாக பேசியதாக தகவல்கள் பரபரக்கின்றன.
எங்கு இருந்தாலும் மும்பை நகரத்தின் வீதிகளையும், மசூதியையும் இன்னமும் மறக்க முடியவில்லை” என்று உருகிய தாவூத், “இனி ‘டி’ கம்பெனியை எனக்கு பின்னால் எனது சகோதரர் அனீஸ் அஹமது தலைமையேற்று நடத்துவார்.
அவரை எனது தளபதியாக இருக்கும் சோட்டா ஷகீல் வழிநடத்தி, முன்னின்றும் பார்த்துக்கொள்ளுவார்” என்று அறிவித்து விட்டு, தாவூத் மேலும் பல்வேறு விஷயங்களை பேசியதாக ஊடகங்களுக்கு தகவல் வந்தது.
இத்தகவலை சோட்டா ஷகீல், தனக்கு நெருக்கமான ஊடவியலாளர்களுக்கு போன் செய்து உறுதிபடுத்தி இருக்கிறான்.
போதை மருந்து பொருட்கள் கடத்தல், ஹவாலா பணப்புழக்கம், ஆயுதங்கள் விற்பனை, இதர பிசினஸ் என்று சுமார் 30 பில்லியன் டாலர்கள் பணம் புழங்கும் தாவூத்தின் ‘டி’ கம்பெனியின் அதிகாரத்தில் தாவூத்திற்கு அடுத்து யார் இருப்பார் என்பதற்கான விழாவாக இருந்தது இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி.
ஆனால் தாவூத் பிறந்தநாள் விழாவை கொண்டாட காவல்துறை இறுக்கம் காட்டியதால் தாவூத்தின் ஆதரவாளர்கள் நடுக்கடல் , பண்ணை வீடுகள் என்று ரகசிய இடங்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
தாவூத் தனது பிறந்தநாளை கொண்டாடும் அதே வேளையில்தான் இந்திய பிரமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு விசிட் அடித்துள்ளார்.
பாகிஸ்தான் போன மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள தனது இல்லத்திற்கு அவரை அழைத்து சென்றார்.
மோடியும் – நவாஸ் ஷெரீப்பும் மதிய உணவை முடித்துக்கொண்டு ஜம்மு காஷ்மீர் பிரச்னை, உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு, போதைபொருள் கடத்தல், இந்து- முஸ்லீம் பிரச்னைகள் என்று பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்கள்.
நவாஸ் ஷெரீப்க்கு டிசம்பர் 25 -ல் 66 -வது பிறந்தநாள் என்பதால், மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, நவாஸ் ஷெரீப் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்ததாக வந்ததாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்புகள் தெரிவித்தன. இந்த சந்திப்பில் தாவூத் குறித்து மோடி பேசினாரா என்பது எல்லோருக்குள்ளும் எழும் கேள்விதான்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள திகார் சிறையில், ஐந்தடுக்கு பாதுகாப்பில் பத்திரமாக இருந்துவரும் சோட்டா ராஜன், தாவூத்தின் பிறந்த நாளன்று இறுக்கமாக இருந்துள்ளான்.
தாவூத்தின் அடுத்த வாரிசாக அனீஸ் அஹமதுவை நியமனம் செய்ததற்கு மௌனமாக இருந்த சோட்டா ராஜன், டி கம்பெனியின் சி.இ.ஓ சோட்டா ஷகீல்தான் என்று ஒரு அதிகாரி சொன்னதற்கு, உரத்த குரலில் கத்தி, அசிங்கமான வார்த்தையால் திட்டி இனி ‘டி’ கம்பெனி ஆட்டம் காணும் என்று சொல்லி இருக்கிறான்.
என் இறுதி ஆசை ‘டி’ கம்பெனியை ஒழித்துக்கட்டுவதுதான் என்று சொல்லி இருக்கிறான் சோட்டா ராஜன் சிறைக்கம்பிகளை இறுக்கிப்பிடித்தபடி.
வெளியே தாவூத்தின் தளபதியான சோட்டா ஷகீல் “இந்த ஆண்டு தாவூத்திற்கு பிறந்தநாள் பரிசு சோட்டா ராஜனின் உயிர்தான்” என்று தான் சபதம் எடுத்ததாக நெருக்கமானவர்களிடம் சீறி இருக்கிறான்.
யார் யாரை வீழ்த்துவார்கள்… நீளுமா பகை?
– சண்.சரவணக்குமார்
எதிர்த்தால் துப்பாக்கி… மறுத்தால் வெடிகுண்டு! ( தாதா தாவூத் இப்ராஹிம்- தொடர்: 15)