தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரே, இத்தகைய ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இன்னமும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் சற்றுக் குறைவான ஆயுளை அது கொண்டிருக்கிறது.

அதற்குள் ஒரு மாகாணசபையைக் கலைப்பதென்பது, எந்தளவுக்குக் கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தும் என்பதை எவரும் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நிரப்பும் முயற்சிகளையும் மீறி, அந்த இடைவெளியைப் பெருப்பித்து பிளவை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக உழைப்பவர்களே அதிகம் பேர்.

வடக்கு மாகாணசபையைக் கலைப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டிருந்தால், அது மிகவும் மோசமானதொரு அரசியல் நகர்வு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சிறிய காயத்தைப் பெரியதாக்கும் முயற்சியில் தான் அது போய் முடியும். எனினும், தலைகீழாக நின்றாலும், வடக்கு மாகாணசபையை அவ்வளவு இலகுவாகக் கலைத்து விட முடியாது என்ற உண்மையை உணராதவர்கள் தான், இத்தகைய செய்திகளைப் பரப்புவதாகத் தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து எப்படியாவது முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தனித்து இழுத்து வந்து, தமக்குத் தலைமை தாங்க வைத்து விட வேண்டும் என்று முனையும் தரப்புகள் தான் இத்தகைய செய்திகளின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே, முதலமைச்சரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவி நீக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் பரப்பப்பட்டன.

முதலமைச்சரைப் பாதுகாப்போம் என்று முகநூல் கணக்குகள் தொடங்கப்பட்டு, சமூக வலைத்தளப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முதலமைச்சருக்கு ஆதரவாகப் பேரணி நடத்தலாம் என்றும் கூட ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. ஆனால், முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து பதவிநீக்கம் செய்வதற்கு, 13ஆவது திருத்தச்சட்டத்தில் இடம் ஏதும் கிடையாது என்று, எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெளிவுபடுத்தியிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அதுபோலத் தான், வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்து ஆராயப்பட்டதாக புதிதாக வதந்திகள் உலாவத் தொடங்கியுள்ளன.

ஒரு மாகாணசபையைக் கலைப்பதற்கு, ஜனாதிபதிக்குக் கூட அதிகாரம் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. மாகாண ஆளுநர் தான் அதனைச் செய்ய முடியும்.

அதுவும், தன்னிச்சையாக ஒரு மாகாணசபையை ஆளுநரால் கலைக்க முடியாது. மாகாண முதலமைச்சரின் பரிந்துரையின் பேரின் தான் மாகாணசபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது.

இது இந்தியாவில் மாநிலங்களைக் கலைப்பதற்கு ஆளுநர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை விட மேலானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

முதலமைச்சரின் ஒப்புதலுடன் தான், ஆளுநர் மாகாணசபையைக் கலைக்க வேண்டும் என்பது மட்டும் தான், 13ஆவது திருத்தச்சட்டத்தில், இருக்கின்ற ஒரே உருப்படியான விடயமாகும்.

இத்தகைய நிலையில், வடக்கு மாகாணசபையைக் கலைப்பது என்பது, இப்போது நடக்கக் கூடிய காரியமன்று. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்தால் கூட, அது நடக்காது.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். அவர்களின் பலரும் சட்டம் தெரிந்தவர்கள் என்பதை விட, அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

நடக்க முடியாத ஒரு காரியம் தொடர்பாக, அவர்கள் கூடி ஆராய்ந்திருந்தால், அது அவர்களின் முட்டாள்தனம். ஆனால், அத்தகையதொரு ஆலோசனையோ பரிந்துரையோ நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எம் கணிப்பு.

அதையும் மீறி அத்தகையதொரு வாய்ப்புத் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டிருந்தால், அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆழமான விரிசலை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்றே கூற வேண்டும்.

அதாவது, கூட்டமைப்பில் இருந்து முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே நகர்வுக்காகவே அத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படுமே தவிர, வேறெந்தக் காரணத்துக்காகவும் இருக்க முடியாது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தை, வெளிப்படையாக கூறியவர் சுமந்திரன் மட்டும் தான்.

சம்பந்தனோ, மாவை சேனாதிராசாவோ அவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திம் கூறவில்லை. அவ்வாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற நினைப்பதாயின், இந்த விடயத்தை இந்தளவுக்கு இழுத்தடித்திருக்கமாட்டார் சம்பந்தன்.

விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவது, கூட்டமைப்பை பலவீனப்படுத்தும், தமிழர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் சிதைக்கும் என்பதை கூட்டமைப்பின் தலைமை நன்றாகவே அறியும்.

அத்தகையதொரு முயற்சி அறவீனமானது என்பதை விட விசப்பரீட்சை என்றே கூறலாம். எனவே கூட்டமைப்பின் தலைமை அத்தகைய முயற்சியில் ஒருபோதும் ஈடுபடாது.

அதாவது, கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், யாரும் யாரையும் திட்டமிட்டு வெளியேற்ற முடியாது. இதுதான் அதன் முக்கியமான சிறப்பியல்பு.

அனந்தி போன்றவர்கள் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக செயற்பட்ட போதும் கூட, அவர்கள் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்படவில்லை.

அவ்வாறு நீக்கப்பட்டால் அவர்கள் அதையே காரணமாக வைத்து பலம் பெற்று விடுவார் என்பதை கூட்டமைப்புத் தலைமை கவனத்தில் கொண்டிருக்கிறது. அதேபோன்று, கூட்டமைப்புக்குள் எத்தனையோ முரண்பாடுகள் வந்த போதெல்லாம், எந்தக் கட்சியையும் வெளியேற்றவுமில்லை.

ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் தாமாகவே வெளியேறிச் சென்றன.

ஆனாலும் அவர்களால் தமது செயலை மக்கள் முன் நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதேவேளை, இந்தக் கட்சிகளை கூட்டமைப்பு வெளியேற்றியிருந்தால், ஒருவேளை அவர்கள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்கலாம்.

தற்போதும் தமிழரசுக் கட்சியுடன் முரண்பாடு விரிவடைந்துள்ள போதிலும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ் அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதற்கு, காரணம் இது தான்.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால், தேர்தலில் இன்னமும் அந்நியப்படுத்தப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இப்படியானதொரு சூழலில், வடக்கு மாகாணசபையைக் கலைப்பது அல்லது முதலமைச்சரை வெளியேற்றுவது உள்ளிட்ட எந்தவொரு செயலிலும் கூட்டமைப்பு ஈடுபடாது.

அவ்வாறு ஈடுபடுவது மடமையான செயல். அதைவிட, வடக்கு மாகாணசபையைக் கலைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரங்கள் இல்லாத அதேவேளை, அவ்வாறு கலைக்க முனைந்தாலும் அதற்கான சரியான நியாயத்தையும் கூற வேண்டும். ஒரு மாகாணசபையைக் கலைப்பதற்குத் தேவையான அத்தகைய அடிப்படை நியாயங்கள் எதுவும் இப்போது இல்லை என்பதே உண்மை.

வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள், அதன் வினைத்திறன் தொடர்பான அதிருப்திகள் அரசியல் மட்டத்திலும் மக்களிடத்திலும் இருப்பது உண்மையே.

மத்திய அரசின் மீது எல்லாவற்றுக்கும் பழிபோட்டு அரசியல் நடத்தும் பழக்கத்திலேயே அது காலத்தைக் கடத்தி வந்திருப்பதான குற்றச்சாட்டு இருக்கிறது.

கிடைத்துள்ள அதிகாரங்களைக் கொண்டு, மாகாணசபையை வினைத்திறனுடன் செயலாற்றச் செய்வதே முக்கியம். அத்தகைய வினைத்திறன் வடக்கு மாகாணசபைக்கு வாய்க்கவில்லை என்றே கூறப்படுகிறது.

தாம் கோரும் நிதியை மத்திய அரசு தருவதில்லை என்பதே, வடக்கு மாகாண அரசின் குற்றச்சாட்டாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கணிசமான நிதி செலவிடப்படாமலேயே திரும்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்டளவு நிதியைக் கூட செலவிடத் தெரியாத ஒரு நிர்வாகமாகவே வடக்கு மாகாணசபை செயற்படுவது, அதன் வினைத்திறனின்மையைத் தான் காட்டுகிறது.

இதற்கு மத்திய அரசின் நிதி ஆணைக்குழு உரிய வேளையில் அனுமதி தராததே காரணம் என்று குற்றச்சாட்டை முதலமைச்சர் முன்வைத்திருக்கிறார்.

அவ்வாறாயின், அதுபற்றிய மத்திய அரசுடன், நிதி ஆணைக்குழுவுடன் எத்தகைய பேச்சுக்களை வடக்கு மாகாணசபை நடத்தியிருக்கிறது என்று தெரியவில்லை. நிர்வாக ரீதியான தடைகளைக் களைய வேண்டுமானால் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். பேச்சுக்களை நடத்த வேண்டும்.

ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் அத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. மக்களின் நலனுக்காக- மாகாணசபையை திறம்பட நடத்துவதற்காக மத்திய அரசுடன் தேவைப்படும் போதேல்லாம் பேசவும், கலந்துரையாடவும் வேண்டிய அவசியம் இருப்பதை அவர் மறந்து விடக்கூடாது.

ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அத்தகையதொரு நெகிழ்வு நிலை ஆரம்பத்தில் இருந்தது, இப்போது இல்லை. விக்னேஸ்வரன் நெகிழத் தயாராக இருந்த போது, மஹிந்த விடாப்பிடியாக இருந்தார். இப்போது, மஹிந்தவை விடவும் நெகிழ்வுத்தன்மை கொண்ட மத்திய அரசு இருக்கின்ற போதிலும், விக்னேஸ்வரன் அதற்குத் தயாரில்லாதவராக இருக்கிறார்.

இந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சிக்கலாகவே இருந்தாலும், மாகாணசபையைக் கலைக்கப் பரிந்துரைக்கும் அளவுக்கு அவர்கள் செல்ல முடியாது.

அது ஜனநாயகமற்ற செயல். அதைவிட, இந்த மாகாணசபை அற்ப ஆயுளில் கலைக்கப்படுவதை இந்தியாவோ, அமெரிக்காவோ கூட விரும்பாது. ஏனென்றால், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு இந்த நாடுகள் முக்கிய பங்காற்றியிருந்தன.

இப்போதைய கொதிநிலையில், வடக்கு மாகாணசபையைக் கலைத்து தேர்தலை நடத்துவது கூட கூட்டமைப்புக்கு பாதகமாகவே அமையும் ஆபத்தும் இருப்பதை அவர்கள் உணராமல் இருக்கமாட்டார்கள்.

எவ்வாறாயினும், கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் மட்டுமன்றி வெளியில் இருப்பவர்களும் கூட எப்படியெல்லாம் கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தலாம் என்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்பதையே, இதுபோன்ற பரப்பப்படும் வதந்திகள் செய்திகள் என்பன உறுதிப்படுத்துகின்றன.

சஞ்சயன்-

Share.
Leave A Reply

Exit mobile version