அது கடந்த புதன்கிழமை நேரம் எப்படியும் அதிகாலை 5.00 ஐ அண்மித்திருந்தது. கொழும்பு–கண்டி பிரதான வீதியின் (ஏ.01) வரக்காபொல, தும்மலதெனிய சந்தியில் ஒரு பாரிய சத்தம். மறுகணமே அல்லோல கல்லோலம்.
அம்பியூலன்ஸ் வண்டிகள், பொலிஸ் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், வேன்கள் என வைத்தியசாலையை நோக்கி படையெடுத்தன.
ஆம், கடந்த வருடத்தின் இறுதி நாட்களில் நடந்த மிகக் கோரமான விபத்தது.
அன்று அதிகாலை 3.30 மணி இருக்கும் அப்போதுதான் பிலியந்தலை, பொல்கஸ் ஓவிட்டவில் இருந்து பொலன்னறுவை சோமாவதியை நோக்கி ஒரு குழு யாத்திரைக்கு புறப்பட்டது.
சுஜித் நிரோஷன் அந்த பஸ்ஸை செலுத்தி பெலியகொடை, களனி, கடவத்தை தாண்டி கம்பஹா பிரதேசத்தில் உள்ள இன்னொரு குழுவை பஸ்ஸில் ஏற்றும் போது எப்படியும் மேலும் ஒரு மணி நேரமாவது சென்றிருக்கும். பின்னர் பொலன்னறுவையை நோக்கிய பயணத்தை அவர்கள் கம்பஹாவிலிருந்து தொடர்ந்திருந்தனர்.
இதனிடையேதான் புனித மக்கா நகருக்கு உம்றா யாத்திரை நிமித்தம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சம்மாந்துறையை சேர்ந்த பலர் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள கடந்த 29 ஆம் திகதி இரவு வேளையில் சம்மாந்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
ஜனவரி 01, 2016 முதல் கடவுச் சீட்டு கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுவதால் 30 ஆம் திகதிக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
அதன் படி சம்மாந்துறையிலிருந்து மூன்று வேன்களில் இந்த குழுவினர் கொழும்பிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் டிசம்பர் 30 -ஆம் திகதி அதிகாலை ஆகும் போது அவர்கள் வரக்காப்பொல நகரை அடைந்தனர். வரக்காபொலவில் தேநீர் அருந்திவிட்டு அவர்கள் மீண்டும் கொழும்பை நோக்கி செல்லலாயினர். எனினும் அவர்களால் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் மட்டுமே நகர முடிந்தது.
ஆம், ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்த வேன்கள் மூன்றில் நடுவில் வந்த வேன், பொலன்னறுவை புனித சோமாவதி யாத்திரைக்காக சென்று கொண்டிருந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியது.
மற்றொரு குழந்தை பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தது.
வேன் சாரதியான சம்மாந்துறை நெசவாலை பகுதியை சேர்ந்த முஹம்மது தம்பி அஹமத் இபாத் (வயது 29), வீரமுனை 03 பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி பாத்திமா பரூஸா (வயது 26), அவரின் 2 வயது மகளான சிராஜ் பாத்திமா சாரா, செந்நெல் கிராமம் 02 பிரிவைச் சேர்ந்த 67 வயதுடைய முஹம்மது இப்றாஹீம் ஹபீலதுல் நிஸா, சம்மாந்துறை 06 ஆம் பிரிவைச் சேர்ந்த உதுமான் லெப்பை நுஸ்ரத் ஜஹானி (வயது 27) மற்றும் 2 வயதான பாத்திமா நுஸ்ரா ஆகியோரே இவ்வாறு கோர விபத்துக்கு பரிதாபகரமாக பலியாகியிருந்தனர்.
இவர்களை விட குறித்த வேனில் வந்த மேலும் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கேகாலை மற்றும் வத்துபிட்டி வல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைவிட பஸ் வண்டியின் சாரதி உள்ளிட்ட 12 பேர் சிறு காயங்களுடன் வரக்காப்பொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர்களில் பலர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
விபத்தையடுத்து ஸ்தலம் விரைந்த வரக்காப்பொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனகாந்த, போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உபாலி ஜயதிஸ்ஸ உப பொலிஸ் பரிசோதகர் ஜயவர்தன சார்ஜன்களான பந்துல, கான்ஸ்டபிள்களான ரணசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன்போது வேன் சாரதியின் அபாயகரமான வாகன செலுத்தல் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை ஆகியனவே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டது.
இது தொடர்பில் 12 வருடங்களாக சாரதியாக தொழில் புரியும் பஸ்வண்டி சாரதி சுஜித் நிரோஷன், இந்த பஸ்வண்டி உரிமையாளரின் உறவினர்களை அழைத்துக் கொண்டே நான் பொலன்னறுவைக்கு சென்று கொண்டிருந்தேன்.
நாம் 4.45 மணியாகும் போது வாரக்காப்பொலயை அண்மித்திருந்தோம். இதன்போது சுமார் 100 மீற்றர் தூரத்தில் வேனொன்று வேகமாக வருவதை அவதானித்தேன்.
நான் பஸ்ஸை பாதையின் விளிம்புவரை ஓரம்கட்டி செலுத்தினேன். எந்தளவுக்கெனில் பாதை ஓரத்தில் இருந்த பஸ்தரிப்பு நிலையத்துக்கு நான் ஓரம் கட்டியதில் சேதம் ஏற்பட்டது.
எனினும் பயனில்லை. அந்த வேன் பஸ்ஸை வந்து மோதியது. எனக்கு அவ்வளவுதான் ஞாபகம். நான் கண்திறக்கும் போது வைத்தியசாலையில் இருந்தேன் என்றார்.
உண்மையில் சம்மாந்துறையில் இருந்து 29 ஆம் திகதி இரவு 9.30 மணிக்கே மூன்று வேன்களில் சுமார் 35 பேர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நோக்கி வந்துள்ளனர்.
இவர்கள் 30 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியாகும்போது உன்னஸ்கிரிய பகுதியை அடைந்துள்ளதுடன் அதன்பின்னரேயே கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர்.
மூன்று வேன்களில் வந்த இந்த குழுவுக்கு சம்மாந்துறை பகுதி பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக கடமையாற்றும் ஆதம்பாவாலாபிர் மெளலவி தலைமையேற்று அழைத்துவந்துள்ளார். இந்நிலையில் விபத்து தொடர்பில் மௌலவி இப்படி கூறுகிறார்.
நான் மௌலவியாக கடமையாற்றும் அதேநேரம் மக்கா யாத்திரை செல்வோருக்கு கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொடுக்கும் முகவர் பணியையும் கடந்த இருவருடங்களாக செய்து வருகிறேன்.
அதன்படியே நாம் 3 வேன்களில் கொழும்பு வந்தோம். நான் முதலாவது பயணித்த வேனில் இருந்தேன். எனினும் அடிக்கடி பின்னால் வந்த இரு வேன்களுக்கும் அழைப்பை ஏற்படுத்தி விசாரித்து வந்தேன்.
அதன்படியே வரக்காப்பொல தாண்டி தும்மலதெனிய பள்ளிவாசல் வரை வந்து வேனை நிறுத்திய நான் தொலைபேசி அழைப்பை எடுத்தேன். அதன்போதே பின்னால் வந்த வேன் விபத்துக் குள்ளாகியுள்ளதை அறிந்தேன்.
உடனடியாக வேனை திருப்பி வரக்காப்பொல பகுதியை நோக்கி செலுத்தினோம். எனினும் விபத்து இடம்பெற்ற இடத்தில் பாரிய வாகன நெரிசல் இருந்ததால் நடந்தே ஸ்தலத்தை அடைந்தோம். விபத்தை பார்த்ததும் பலர் உயிரிழந்திருப்பர் என எனக்கு தோன்றியது என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் நேற்று முன்தினம் சம்மாந்துறை ஜும்ஆபள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த தினம் சம்மாந்துறை எங்கும் ஒரே சோகமயமாகவே காட்சியளித்தது. எங்கும் வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இரு வேறு இறை நடவடிக்கைகளுக்காக பல்வேறு கனவுகளுடன் சென்று கொண்டிருந்த யாத்திரிகர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் வேன் சாரதியின் நடவடிக்கையே விபத்துக்கு காரணம் என குறிப்பிட்டனர்.
உண்மையில் இலங்கையில் என்றுமில்லாதவாறு வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலான 10 வருட காலப்பகுதியில் 22677 பாரிய வாகன விபத்துக்கள் காரணமாக 24261 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
10 ஆண்டு காலப்பகுதியில் மொத்தமாக 363210 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனினும் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த 2015 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் தொடர்பிலான பூரண புள்ளிவிபரத்தின்படி 2007 பாரிய விபத்துக்களில் 2171 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் பிந்திய மூன்று மாதங்களில் பல உயிர்கள் வாகன விபத்துக்கள் ஊடாக காவு கொள்ளப்பட்ட நிலையில் இதன் எண்ணிக்கை சுமார் 2500ஐ எட்டியிருக்கும் என நம்பப்படுகிறது.
கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களின் தரவுகளின் பிரகாரம் 614 பாதசாரிகளும் 641 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் 137 மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றோரும் 156 சாரதிகளும் 404 பயணிகளும் 206 துவிச்சக்கரவண்டி செலுத்துணர்களும் 13 வேறு நபர்களுமாக 2171 பேர் வாகன விபத்துக்களுக்கு இரையாகியிருந்தனர்.
கடந்த வருடம் நிறைவுக்கு வரும் போது இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்ததை அவதானிக்க முடிந்தது. பொலிஸ் தலைமையகம் வருடத்தின் இறுதி நாளன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர்களின் உயிரிழப்பு 1000 என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமர சிறி சேனாரத்னவின் தரவுகளின் படி கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான 2171 விபத்து மரணங்களில் 815 மரணங்களுக்கு மோட்டார் சைக்கிள்களே பொறுப்பாகும்.
272 மரணங்களுக்கு லொறிகளும் 308 மரணங்களுக்கு முச்சக்கர வண்டிகளும் 159 மரணங்களுக்கு வேன்களும் 171 மரணங்களுக்கு தனியார் பஸ்களும் 138 மரணங்களுக்கு கார்களும் 56 மரணங்களுக்கு கெப் வண்டிகளும் 54 இற்கு இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளும் 28 மரணங்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் 24 மரணங்களுக்கு டாக்டர்களும் 35 மரணங்களுக்கு ஜீப் வண்டிகளும் 6 மரணங்களுக்கு பவுசர்களும் 14 மரணங்களுக்கு கன்டனர்களும் பொறுப்புக் கூறவேண்டும் என அறியமுடிகிறது.
இதனைவிட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் ஆய்வுகளின் படி கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இரவு வேளைகளிலேயே அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதன்படி அக்காலப்பகுதியில் இரவு நேரத்தில் 998 விபத்துக்களும் பகலில் 929 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
2014 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களை எடுத்து நோக்கும்போது பகலில் 892 விபத்துக்களும் இரவில் 803 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதை காண முடிகின்றது. அதன்படி இவ்வருடத்தில் இரவு பகல் என்றில்லாது விபத்துக்களின் சடுதியான அதிகரிப்பை காண முடிகின்றது.
இதேநேரம் நாட்டில் பதிவாகும் விபத்துக்களை மாகாண அடிப்படையில் பார்க்கும் போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான விபத்து மரணங்கள் பதிவாகின்றன.
2015 முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் மேல் மாகாணத்தில் 607 மரணங்கள் பதிவாகியுள்ளன. வடமேல் மாகாணத்தில் 307 உம் தென்மாகாணத்தில் 266 மரணங்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 209 மரணங்களும் வட மத்திய மாகாணத்தில் 214 மரணங்களும் மத்திய மாகாணத்தில் 160 மரணங்களும் கிழக்கில் 143 மரணங்களும் வடக்கில் 159 மரணங்களும் ஊவாவில் 106 மரணங்களும் குறித்த காலப்பகுதியில் விபத்தினால் பதிவாகியுள்ளன.
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் ஆய்வின் பிரகாரம் ஒரு நாளின் மாலை 6.00 மணிக்கும் இரவு 8.00 மணிக்கும் இடைப்பட்ட இரு மணி நேரத்திலேயே அதிகமான விபத்துக்களும் மரணங்களும் சம்பவிக்கின்றமை தெரியவந்துள்ளது.
கடந்த 2015 முதல் 9 மாதங்களில் இந்த நேரப் பகுதியில் 315 பாரிய விபத்துக்களில் 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக மாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையான காலப்பகுதியும் இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையிலான காலப்பகுதியும் அதிக விபத்துக்கள் இடம்பெறும் நேரமாக கண்டறியப்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும் இவ்வாறு ஏற்படும் பல விபத்துக்களுக்கு காரணமாக இருப்பது அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துவதே என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவிக்கிறார்.
புள்ளி விபரங்களின்படி கடந்த 2015 முதல் 9 மாதங்களில் அபாயகரமாக வாகனம் செலுத்தியதன் விளைவாக 1029 பேர் உயிரிழந்துள்ளனர்.
வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் 230 பேரும் அதிவேகமாக வாகனம் செலுத்தியமையால் 287 பேரும் தவறான முறையில் முந்திச் செல்ல முற்பட்டதால் 138 பேரும் உரிய ஒழுங்கையில் பயணிக்காததால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 120 பேரும் பாதுகாப்பற்ற முறையில் பாதையில் வாகனத்தை திருப்பியதால் 87 பேரும்,
குடி போதையில் வாகனம் செலுத்தியதால் 68 பேரும் சாரதிக்கு நித்திரை சென்றதால் 35பேரும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாக 28 பேரும் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வாகனத்தை செலுத்தும் போது 25 பேரும் பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதிக்கு வாகனத்தை செலுத்தும் போது 16 பேரும் இயந்திர கோளாறு காரணமாக 16 பேரும் பாதை சீர்கேடு காரணமாக ஒருவரும் குறித்த காலப்பகுதிக்குள் உயிரிழந்துள்ளனர்.
அப்படியானால் இலங்கையில் இடம்பெறும் அனேக வாகன விபத்துக்கள் பாதுகாப்பற்ற முறையிலும் கவனயீனமான முறையிலும் வாகனம் செலுத்துவதால் இடம்பெறுகின்றமை உறுதியாகின்றது.
எனவே புதிதாய் பிறந்துள்ள இந்த புதுவருடத்திலேனும் பலரின் கனவுகளை சிதைக்கும் இத்தகைய வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த சாரதிகள், பாதசாரிகள் என அனைவரும் உறுதிபூண வேண்டும்.
பாதை ஒழுங்குகளை மதிப்போம் அனர்த்தங்களை தவிர்ப்போம்.