அரசியல் அமைப்பு திருத்த ஆலோசனைக்குழுவில் புலிகளின் ஆதரவு உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஒற்றையாட்சி என்ற வார்த்தையானது ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு விஷம் போன்றது எனவும் அவ்வமைப்பு தெரிவித்தது.
பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் இன்றுவரை அந்த மாற்று அரசியல் திருத்தம் குறித்து எந்தவித வரைபுகளையும் முன்வைக்கவில்லை.
ஆனால் எவ்வாறான மாற்றம் வரும் என்பது தொடர்பில் எமக்கு நன்றாகவே தெரியும். இப்போதே இவர்கள் மாற்று அரசியல் அமைப்பு திருத்தத்தை தயாரித்து விட்டனர். இந்த வரைபில் பிரிவினைக்கான அனைத்து கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதும் எமக்கு தெரியும்.
அதேபோல் இப்போது நாடு மேற்கத்தேய நாடுகளின் அடிமையாக மாறிவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் முழுமையான ஆதிக்கம் இன்று நாட்டை ஆக்கிரமித்துவிட்டது.
அதேபோல் எமது இராணுவம் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்ற நிலைமைக்கு இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துவிட்டது. அவ்வாறான நிலையில் நாட்டையும் பிரித்து செயற்பட இவர்கள் தயங்க மாட்டார்கள்.
அரசியல் அமைப்பு திருத்தும் தொடர்பில் ஆராயும் குழுவில் புலிகளின் ஆதரவு உறுப்பினர்களும் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நோர்வே, கனடா நாடுகளை சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலரையும் இந்த ஆலோசனைக் குழுவில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் புலிகளுக்கு தேவையான வகையிலேயே இந்த அரசியல் அமைப்பு அமையும்.
மேலும் ஒற்றையாட்சி இலங்கை என்ற அர்த்தம் தரும் வகையில் இந்த அரசியல் அமைப்பு அமையாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒற்றையாட்சி என்ற வார்த்தை விஷத்தை போன்றதாகவே இருந்தது.
ஆகவே ஆட்சி மாற்றமும் சரியான தலைமைத்துவமுமே நாட்டை பாதுகாக்கும் என்றார்.