சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.
ரக்ன லங்கா பாதுகாப்பு நி்றுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவே, கோத்தாபய ராஜபக்சவிடம், பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது.
பண்டாநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழு செயலகத்துக்கு கோத்தாபய ராஜபக்ச நேற்று காலை 9 மணியளவில் வருகை தந்தார். மாலை 4 மணியளவிலேயே அவர் அங்கிருந்து வெளியேறினார்.
ரக்ன லங்கா பாதுகாப்பு நி்றுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றதாகவும், மேலும் சிலரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணைக் குழுவின் செயலர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
விசாரணைகளை முடித்துக் கொண்டு வெளியேறிய கோத்தாபய ராஜபக்ச, இன்று கறுப்பு கழுத்துப் பட்டி அணிந்து கொண்டே விசாரணைக்கு சமூகமளிக்கப் போவதாக தெரிவித்தார்.