கண்டணம்
சகல இயக்கங்களும் கொள்ளை நடவடிக்கைகளை கண்டித்தன. கொள்ளைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
கொள்ளை நடவடிக்கைகளை கண்டித்து தமிழீழ இராணுவம் (TEA) ஒரு காரசாரமான துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருந்தது.
அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுதான்:
“வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல மக்களால் போற்றிப் பாதுகாத்து பேணிவளர்க்கப்பட்ட இயக்கங்;கள் இன்று தமிழ் மக்கள் மீதே பாய்ந்துவிட்டன. எமது போராட்டத்தின் மூலவேரையும் ஆட்டம் காணச் செய்து விட்டன.
மக்களே எமது பலம், மக்களே எமது மூச்சு, மக்கள் விடுதலையே எமது இலட்சியம், மக்களே கிளர்ந்தெழுங்கள் என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை மக்கள், மக்கள் என்று கோ~மிட்டவர்கள் இன்று தம் மக்களையே மேயத் தலைப்பட்டுவிட்டனர்.
புத்தூர் கொலை, கொள்ளைகளில் சி.ஐ.ஏயின் கைவண்ணம் தெரியுதென்பர். காரைநகர் வேலை மொசாட்தான் என்பர். இந்த சி.ஐ.ஏ. பூச்சாண்டி எத்தனை நாள்தான் வேலை செய்யும்.
மக்களே! விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்கும் எத்தர்களை இனம்கண்டு நிராகரியுங்கள்.” அதுதான் தமிழீழ இராணுவத்தினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்.
அவர்கள் மறைமுகமாகத் தாக்கியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தை.
இப்பிரசுரம் வெளியான சில நாட்களில் பின்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.
மின்கம்பப்பூசை
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை இரு இளைஞர்கள் வழிமறித்தனர்.
மோட்டார் சைக்கிளை தம்மிடம் தந்துவிடுமாறும், பின்னர் திருப்பித் தருகிறோம் என்றும் சொன்னார்கள்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் புத்திசாலி. அவர் மறுக்கவில்லை. வாருங்கள் தம்பி, வீட்டில் வைத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
வீட்டுக்குப் போனார்கள் இளைஞர்கள். அயலவர்களை திரட்டிவைத்திருந்து மடக்கிப்பிடித்தார் இளைஞர்களை. கடும் பூசைக்குப் பின்னர் அந்த இளைஞர்கள் தமது இயக்கப் பெயரை சொன்னார்கள்.
“நாங்கள் ‘தமிழீழ இராணுவம்” ஒரு மின்கம்பத்தில் அந்த இளைஞர்களை கட்டிவைத்தனர் ஊர்மக்கள்.
சம்பவத்தை கேள்விப்பட்டு ஒரு வேனில் வந்தனர் தமிழீழ இராணுவத்தினர். மக்கள் பார்க்கக்கூடியதாக அந்த இளைஞர்களுக்கு நாலு சாத்துச் சாத்தி விட்டு தமது வேனில் ஏற்றிச் சென்றுவிட்டனர்.
தனியாரிடம் கொள்ளை
புத்தூரில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தழிழீழ இராணுவம் கண்டித்திருந்தது அல்லவா. அக்கொள்ளை நடவடிக்கை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
தனியார் வீடொன்றில் நடைபெற்ற அக்கொள்ளை நடவடிக்கையில் அந்த வீட்டு உரிமையாளரான இராசதுரை ஸ்ரீ இராமச்சந்திரன் என்பவர் கொல்லப்பட்டார்.
தனிப்பட்ட கொள்ளையர்கள்தான் வீட்டுக்குள் வருகிறார்கள் என்று நினைத்து விட்டார் இராமச்சந்திரன். அதனால்தான் எதிர்ப்புக்காட்டினார்.
அதனால் இராமச்சந்திரன் கொல்லப்பட்டார். அதன்பின்னர் காரைநகரில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையிடப்பட்டது. அதுவும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால்தான் மேற்கொள்ளப்பட்டது.
அரியாலையில் உள்ள பிரபல வர்த்தகர் வீடொன்றும் கொள்ளையிடப்பட்டது. பல லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நகைகளோடு ஆயுதம் தாங்கியவர்கள் பறந்துவிட்டார்கள்.
அரியாலை கொள்ளை நடவடிக்கை புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
புலிகள் இயக்கத்திலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திலும் தனியார் கொள்ளைகளில் ஈடுபடுவதற்காக இரகசியமான அணிகள் இருந்தன.
அந்த இயக்கங்களில் இருந்த ஏனையோருக்கு தமது இயக்கத்தினர்தான் கொள்ளையில் சம்பந்தப்படுகிறார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை.
கச்சேரிக் கொள்ளை
யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் ரெலோவின் முகாமுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகளில் ஒரே இரவில் கொள்ளையிடப்பட்டது.
கொள்ளையை நடத்தியவர்கள் புலிகள். கொள்ளை நடவடிக்கைக்கான குழுவை அனுப்பி வைக்கும் போது கிட்டு சொன்னது இது:
“சில நேரங்களில் மொட்டையன் வருவான். சுட்டுப் போடவேண்டாம். துப்பாக்கியைக் காட்டி குப்புறப் படுக்க வையுங்கள்”.
கிட்டு மொட்டையன் என்று குறிப்பிட்டது, புலிகள் இயக்க அரியாலைப் பொறுப்பாளராக இருந்த பிரேமை. மொட்டைப்பிரேம் என்று அவர் அழைக்கப்படுவது வழக்கம்.
கொள்ளையை நடத்துவது தமது ஆட்கள் என்று தெரியாமல் பிரேம் தலையிட்டாலும் என்றுதான் அந்த முன்னெச்சரிக்கை.
ரெலோ முகாமுக்கு அருகில் கொள்ளைகள் நடந்தமையால், ரெலோதான் கொள்ளை அடித்திருக்கலாம் அவர்களது சென்றி இருக்கக் கூடியதாக வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று மக்கள் நினைத்துக் கொண்டனர்.
அப்படி நினைக்கட்டும் என்றுதான் ரெலோ முகாமுக்கு அருகில் உள்ள வீடுகள் புலிகளால் தெரிவு செய்யப்பட்டன.
அரியாலைப் பொறுப்பாளராக அப்போதிருந்த ‘மொட்டைப் பிரேம்’ தற்போது கனடாவில் இருக்கிறார். தற்போது அவர் ஒரு கனடா பிரஜை.
சிறுப்பிட்டிக் கொள்ளை
யாழ்ப்பணத்தில் உள்ள சிறுப்பிட்டி பகுதியிலும் ஒரு கொள்ளை நடைபெற்றது. சிறுப்பிட்டி ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் கோட்டையாக இருந்தது.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எஃப். பல போராட்டங்களை நடத்தியது. சிறுப்பிட்டியிலும் அவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் சிறுப்பிட்டியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பலமாக இருந்தது.
சிறுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்கள் புலிகள்.
ஆறு பேர் கொண்ட குழுவொன்று அதற்காக தயாராக்கப்பட்டது. ஆறு பேரும் புலிகளது உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அப்போது உளவுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் வாசு.
ஆறு பேரிடமும் இருந்த சயனைட் குப்பிகளை வாங்கிக் கொண்டார் வாசு. “கொள்ளையடிக்கும் போது ஒருவரோடு ஒருவர் பேசும்போது ‘தோழர்’ என்று அழைத்துக் கொள்ளுங்கள். மறக்க வேண்டாம்” என்று சொல்லியனுப்பினார் வாசு.
‘தோழர்’ என்ற பதம் பாவிக்கப்பட்டால் அது ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது சந்தேகம் வரச்செய்யும் என்று வாசு நினைத்தார்.
கொள்ளைக்குச் சென்று கொண்டிருந்த போது, சிறுப்பிட்டியில் சென்றிக்கு நின்ற புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வாகனத்தை மறித்திருக்கிறார்.
வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் அவரை மடக்கி நல்ல சாத்துப்படி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். தன்னைத் தாக்கியவர்கள் தனது இயக்க உளவுப்பிரிவினர் என்பது அடிபட்டவருக்கு தெரியவே தெரியாது.
தோழர்கள்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் நடத்திய தனியார் கொள்ளைகளில் பங்குபற்றும் குழுவினருக்கு ஒரு கண்டிப்பான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம்.
“எக்கட்டத்திலும் மறந்தும் கூட தேழர் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டாம்.” என்றுதான் அந்த உத்தரவு. அப்படியிருந்தும் கூட அவசரத்திலும், பதட்டத்திலும் பழக்கதோசம் காரணமாக ‘தோழர்’ என்று அழைத்துகத் தொலைத்த சம்பவங்களும் உண்டு.
அதுவும் ஒருவகையில் நல்லதாகப் போனது. எப்படி என்கிறீர்களா?
ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்கு வந்து முறையீடு செய்யப்படும்.
“கொள்ளையிட்டவர்களில் ஒருவர் இன்னொருவரை ‘தோழர்’என்று அழைத்தார்.” என்று சொல்வார்கள் முறையீட்டாளர்கள்.
அதைக்கேட்டுவிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாக பதில் கூறுகிறவர் சொல்வார்: “பார்த்தீர்களா, பார்த்தீர்களா எங்கள் ஆட்கள் என்றால் ‘தோழர்’ என்ற வார்த்தையை இப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் அல்லவா? எம்மை மாடடிவிட நினைக்கும் ஏதோ இயக்கம்தான் செய்திருக்க வேண்டும்.”
மக்களுக்குள் பெரிய குழப்பம். சகல இயக்கங்களும் தனியார் வீடுகளில் நடக்கும் கொள்ளைகளைக் கணடிக்கின்றன.
அப்படியானால் யார்தான் காரணம்?
ஏதோ ஒரு இயக்கம்தான் செய்கிறது என்பது மட்டும் மக்களுக்கு புரிந்தது.
ஆனால் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களாக இருந்தவர்களது வீடுகளில்தான் கொள்ளைகள் நடத்தப்பட்டன.
வடக்கு-கிழக்கில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. இருந்த சில வங்கிகளும் பலத்த பாதுகாப்புடன் இருந்தன.
இயக்கங்களுக்கு தனது உறுப்பினர்களை பராமரிக்கவும், ஏனைய தேவைகளுக்கும் பெருமளவு நிதி தேவைப்பட்டது. நிதித் தேவையை நிறைவு செய்ய பெரும் பணக்காரர்கள் குறிவைக்கப்பட்டனர்.
தவறாகப்பட்டாலும் சில நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. என்பதும் மறுப்பதற்கில்லை.
கலைஞர் முழக்கம்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் ஒரு பேரணி நடைபெற்றது.
பேரணியில் ஒரு சித்திரம் காணப்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் கட்டித் தழுவிக் கொண்டிருக்கு எம்.ஜி.ஆர். அதனை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பதுபோல அந்தச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.
பேரணியில் வானைமுட்ட எழுந்த கோஷம் இது: “காப்போம், காப்போம், ஈழத் தமிழர்களைக் காப்போம். மலரட்டும், மலரட்டும், தமிழீழம் மலரட்டும்.”
பேரணியின் முடிவில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார்.
“தமிழீழம் என்ற தனிநாடு அமைக்க வேணடும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை என்று ராஜிவ் காந்தி கூறியிருக்கிறார்.
ஜெயவர்த்தனாவின் வாயில்ருந்து வரவேண்டியது, அவருக்குச் சிரமம் இல்லாமல் ராஜிவ் காந்தியின் வாயிலிருந்து வந்திருக்கிறது.” என்று கூறிய கருணாநிதி, ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு, “இலங்கைத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தவும் தயார்” என்று கூறியபோது மைதானம் அதிர கரகோசம் எழுந்தது.
ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் என்று வே.பாலகுமாரின் பெயரையே பத்திரிகைகள் வெளியிட்டுவந்தன.
ஈரோஸ் சார்பாக பாலகுமார் அடிக்கடி கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் அவர்தான் தலைவர் என்று கருதப்பட்டார்.
அதனால் ஈரோஸ் இயக்கத்திற்குள் சில புகைச்சல் ஏற்பட்டுவிட்டது.
விளைவு, ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
“ஈரோஸ் தனிமனித தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அமைப்பல்ல. ஜனநாயக அடிப்படையில் கூட்டுத் தலைமைத்துவத்தையே நாம் கொண்டிருக்கிறோம். திரு.பாலகுமார் ஈரோசின் அதி உயர் தலைமைப் பீடமான புரட்சிகர நிறைவேற்றுக் குழுவில் இருக்கிறார். அமைப்பின் நிர்வாகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார்.
ஆனால் சில பத்திரிகைகள் அவரை வெறுமனே பேச்சாளராகவும், வேறு சில பத்திரிகைகள் அவரது தனித்தலைமைதான் ஈரோசை வழிநடத்துவதாகவும் கூறிவருகின்றன. இவை தவறான கருத்துக்களாகும்.” என்றது அறிக்கை.
நடைபவணி
1985 இன் பிற்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் நடைபவணி ரோந்துக்களை மேற்கொண்டு வந்தனர்.
கண்ணிவெடித் தாக்குதல்களில் இயக்கங்கள் கூடுதலான தேர்ச்சி பெற்று வந்தமையால், வாகனங்களை தவிர்த்துவிட்டு நடை பவனியை ஆரம்பித்தது இராணுவம்.
எனினும், நடைபவனி ரோந்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் நடைபெற்றது.
இயக்கங்களின் கைகள்தான் யாழ்ப்பாணத்தில் ஓங்கத் தொடங்கியிருந்தன.
யாழ்ப்பாணக்குடாநாடு மெல்ல, மெல்ல படையினரின் கட்டுப்பாட்டை விட்டு விலகியது.
அக்கட்டத்திலும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சொன்னது இது:
“இன்னும் ஒரு வருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முறியடித்து விடுவோம்”
ஜே.ஆர். சொல்லி வாய் மூடுவதற்கு இடையில் மட்டக்களப்பில் கண்ணி வெடிகள் வெடித்தன.
(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-
வை. 8 மீது ‘ஒலிகன்’ தாக்குதல்
பலாலி படைத்தளத்தில் இறங்குவதற்காக கடற்பரப்பின் மேலாக தாழப்பறந்த போதே வை.8 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஒலிகன் ரக சிறு பீரங்கிகளால் கடலில் படகில் இருந்து புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
முல்லைத்தீவுக் கடலில் ஐரிஸ்மோனா கப்பலை பணயமாக வைத்து இரண்டு டோறாப் படகுகளை புலிகள் தாக்கினார்கள் அல்லவா.
அவற்றில் இருந்து நான்கு ஒலிகன் பீரங்கிகளை புலிகள் கைப்பற்றியிருந்தார்கள். அவற்றின் மூலமே வை.8 சுட்டு வீழ்த்தப்பட்டது.
டோறாப் படகில் கைப்பற்றப்பட்ட ஒலிகன் ரக பீரங்கிகளை புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் பார்வையிடும் காட்சி தான் படத்தில் உள்ளது.
(முன்னைய தொடர்களை பார்வையிட…அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை…)