சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழா நிகழ்வில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வுக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, வீரசிங்கம் மண்டபத்தின் வாயிலில் கைலாகு கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, விழாவில் அவர்கள் இருவரும் அருகருகாக ஆசனங்களில் அமர்ந்திருந்ததுடன், விழா முடியும் வரையில் நீண்டநேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகே, சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டு, அதில் அவரது பெயரிடப்பட்ட அட்டை தொங்கவிடப்பட்டிருந்தது.
எனினும், ரணிலுக்கு அருகில் இருந்த அந்த ஆசனத்தில் முதலமைச்சர் அமர்ந்திருந்து, பேசிக் கொண்டிருந்தார். இதனால் முதலமைச்சருக்கு அடுத்த ஆசனத்தில் சந்திரிகா அமர்ந்து கொண்டார்.
வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் வெளியிட்ட கருத்துக்களால் கடந்த ஆண்டு முற்பகுதியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
ஒரு கட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொய் பேசுபவர் என்று ரணில் செவ்வி அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் தமக்குச் சார்பாக கூட்டமைப்பின் தலைவர்கள் கருத்து வெளியிடவில்லை என்ற விசனம் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டதன் விளைவாக, கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் அவருக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டன.
இதற்குப் பின்னர், ரணிலுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலை காணப்பட்டது. இந்த நிலைமை நேற்றைய பொங்கல் விழாவில் முடிவுக்கு வந்திருக்கிறது.
யாழ். பொங்கல் விழாக்களில் பங்கேற்காமல் நழுவிய கூட்டமைப்பு
mavai-ranil-pongal (1)சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நழுவிக் கொண்டுள்ளனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு, நேற்று சிறிலங்கா அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி, இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மற்றும், யாழ். வீரசிங்க மண்டபத்தில் தேசிய பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடந்த பொங்கல் வழிபாடுகளில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மட்டும் பங்கு பற்றினார்.
mavai-ranil-pongal (2)
அதேவேளை, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மட்டும் கலந்து கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தவே, பலாலியில் நடந்த பொங்கல் வழிபாடுகளில் தாம் பங்கேற்றதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தாம் பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை என்றும், வழிபாடுகளில் மாத்திரம் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.