முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்காக அவரது ரசிகர் ஒருவருக்கு பேட்டியளித்தார்.

அதில் தான் வெள்ளைத் தொப்பி அணிவது ஏன், மதுவிலக்கு தடை, சினிமாவில் அறிமுகமாகும் பெண்களுக்கு அறிவுரை, குடும்பக் கட்டுப்பாடு, சிவாஜியுடனான தனது நட்பு, திமுக குறித்து ஆழமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன? மனிதனுக்குரிய லட்சணங்கள் என்ன?

அவன் மற்றவர்கள் தன்னைப் பின் பற்றி நடக்கும் வகையில் ஒரு முன்மாதிரியாக, மனிதத்தன்மையோடு பழகணும், நடக்கணும். தமிழுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கு? அதன் உயர்ந்த இலக்கியங்கள் தான்.

தமிழ் இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு? மனிதன் மனிதனாக வாழ வழி சொல்லப்பட்டிருக்கு. இவை அத்தனையும் ஒண்ணா சேர்த்து சொன்னால்தான் பண்பாடு பற்றி பூரணமாக அறிய முடியும்.

அன்புங்கிறது பலதரப்பட்டது. அந்த அன்பை காட்டுவதிலும் பல விதிமுறை, வரம்பு, அளவு எல்லாம் இருக்கு. குழந்தையா இருக்கும் போது பிள்ளையைத் தூக்கி மடியில வெச்சிக்கிட்டு தாய் கொஞ்சுவா.

அதே பிள்ளை வளர்ந்து வாலிபனாயிட்டா, இப்படிக் கொஞ்சுவாளா? அதனால அவ அன்பு குறைஞ்சிடுத்துன்னு அர்த்த மாயிடுமா?

நீங்க எவ்வளவோ உதவிகளை செஞ்சிட்டு வர்றீங்க. நீங்க தெய்வமா வணங்கிட்டு வரும் உங்க தாயார் பேர்ல, ஏன் ஒரு பெண்கள் கல்லூரியை கட்டக் கூடாது? சேலத்தில் பெண்கள் படிக்க போதுமான கல்லூரி இல்லை. அதனால தான்?

கல்லூரி கட்ட நிதி கொடுத்தா அதுக்கும் வருமான வரி நான் கட்டணும். ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒரு வரி. ஐம்பதாயிரத்து ஒண்ணுலேயிருந்து லட்ச ரூபாய் வரைக்கும் ஒரு வரி.

இப்படி ஸ்லாப் சிஸ்டம் இருக்கு. ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவன், தவறிப் போய் ஐம்பதாயிரத்து ஒண்ணு சம்பாதிச்சிட்டா, லட்ச ரூபாய்க்கான வரிதான் கட்டணும்.

ஒரு கல்லூரி கட்டணும்னா எவ்வளவோ பணம் நிதியா தர வேண்டியதிருக்கும். அதற்கெல்லாம் இந்த வருமான வரிச் சட்டம் இடம் தராது. ஆனா, வருஷா வருஷம் பல பேருக்கு நான் படிப்புக்காக உதவிக்கிட்டு வர்றேன்.

தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டதே, இதனாலே மக்களுக்கு கெடுதல்தானே?

அது மத்திய சர்க்காருக்கும் தெரியணும். மது விலக்கினாலே ஏற்படுகிற நஷ்டத்தை ஈடுகட்ட அவங்க முன்வரலே. தவிர, மது விலக்கு அகில இந்தியாவுக்கும் ஒரே மாதிரியா அமல்படுத்தப்படணும்.

நம்ம பக்கத்து மாகாணத்துல அது இல்லே? இங்கே மட்டும் இருந்து என்ன லாபம்? அங்கே போய் குடிக்கிறாங்க. இல்லேன்னா கண்டதையும் குடிச்சிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறாங்க. முன்னாலே இருந்த அரசு குடிக்க பெர்மிட் குடுத்தது.

பணக்காரங்க, வசதி படைச்சவங்க இந்த பெர்மிட்டை வாங்கி சட்டத்தின் துணையோடு குடிக்க ஆரம்பிச்சாங்க. ஏழைங்க? மது விலக்கை அரசு ஒத்திவச்சிருக்கறதால குடிக்க பொதுவா மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குன்னுதானே அர்த்தம்.

ஆனா, அரசு தான் ஒத்தி வெச்சிருக்கு. தி.மு.க.வின் கொள்கை, ‘குடிக்க அனுமதிக்கக் கூடாது. மதுவிலக்கு இருக்கணும்’ என்பதுதான்.

அதனாலே தான் கட்சியின் இந்த கொள்கையை வலியுறுத்த, ‘குடிக்கிறது தப்பு. ஆபத்து, கெடுதல், விபத்து வரும்’ என்றெல்லாம் மக்களுக்கு தெளிவா பிரசாரம் செய்ய ஒரு குழுவும் அமைத்திருக்கிறோம்.

நான் அந்த குழுவின் தலைவர் என்கிற முறையில் நான் நடிக்கிற படங்கள்லே மதுவிலக்கு பற்றி பிரசாரம் செய்யப் போறேன்.

‘நான் ஏன் பிறந்தேன்’ படத்துலே குடிக்கிறது தப்புன்னு ஒரு பாட்டுல சொல்ல இருக்கேன். ‘ஒரு தாய் மக்கள்’ படத்துல குடியின் கெடுதலை விளக்கும் வகையிலே ஒரு ஸீனே இருக்கு.

இது மட்டுமில்ல, இந்த குழுவின் சார்பில் மது குடிப்பது தவறுன்னு எல்லா வகையிலும் காட்ட முயற்சிப்போம். குடியினால் வரும் ஆபத்துகளை விளக்கி, மக்களிடம் அதை தெளிவாக்க மேடையிலே பேசுவோம்.

நாடகங்கள் நடத்துவோம். ரேடியோவில் பேசுவோம். வில்லுப் பாட்டுக்கச்சேரி செய்வோம். ஆங்காங்கே குழுக்கள் அமைத்து தொடர்ந்து சொல்லி வருவோம்.

மதுவிலக்கு பற்றி பேச என்னை யார் அழைத்தாலும் எந்தக் கட்சி அழைத்தாலும் நான் போய் பேச தயாராக இருக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டது மது விலக்கு பிரசாரம்.

MGRvc_128சமீப காலமாக நீங்கள் தலையில் தொப்பி வைச்சிக்க ஆரம்பிச்சிருக்கீங்க… அதுக்கு என்ன காரணம்?

‘அடிமைப்பெண்’ படத்தின் வெளிப்புறக் காட்சிக்காக ஜெய்ப்பூருக்குப் போனேன். அங்கே பாலைவனத்திலே படப்பிடிப்பு. ரொம்பவும் வெயிலாக இருந்தது.

ஒரு அன்பர் தொப்பியைக் கொடுத்து, தலையிலே வெச்சிக்குங்க என்றார். அவ்வளவுதான். அடுத்தபடியா எலெக் ஷன் வந்தது. இப்படி வெயில், மழை, எல்லாத்துக்கும் சௌகரியமா இருக்கவே தொப்பியை அப்படியே வெச்சிக்கிட்டேன்.

சிலர் இதை வேறு மாதிரியா விமரிசிக்கிறாங்க. அந்த நாள்லே நான் ஜிப்பா போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் காலர் வெச்ச முழுக்கை சட்டை போட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் சட்டை கிழிஞ்சு போய்விட்டது. அதை சுருட்டி விட்டுக்கிட்டேன். உடனே அதைப் பார்த்த சிலர் எம்.ஜி.ஆர். ரவுடி போல சட்டையை சுருட்டி வெச்சிருக்கார்னு சொன்னாங்க.

இதுக்கு என்ன சொல்றது. இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோ என்பதற்காக நமது பண்பைக் கெடுத்துக்கக்கூடாது. அத்தியாவசியமான தேவைகளைக் குறைச்சிக்கக்கூடாது.

உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. நானே கேட்கிறேன். இப்ப என் தலையில முடியே இல்லைன்னு வெச்சிப்போம்.

நீங்க அப்போ என்னை எம்.ஜி.ஆர்னு ஏத்துக்க மாட்டீங்களா? வட நாட்டில் வயதில் குறைந்த நடிகர்கள் பலர் இருக்காங்க. அவங்க எல்லாம் தலையில ‘விக்’ (செயற்கை முடி) வெச்சிக்கிட்டுதான் வெளியிலே வர்றாங்க. இதுக்கெல்லாம் என்ன சொல்றது?

சினிமாவில் நடிக்க வர்ற புதுமுகங்களுக்கு, என்னைப் போன்ற பெண்களுக்கு என்ன தேவைப்படுது?

நடனப் பயிற்சி இருந்து, தமிழ் சுத்தமா பேசத் தெரிஞ்சு, முக வெட்டும் இருந்தாப் போதும். இப்ப என் படத்திலே, என்கூட சில புதுமுகங்கள் நடிக்கிறாங்க.

அவங்களுக்கு நடனப்பயிற்சி கொடுத்து வருகிறேன். அதுமட்டுமல்ல, நடனப் பயிற்சி இருந்தாலே நடிப்பும் சுலபமா வந்திடும்.

ஆனா, இவ்வளவு மட்டும் இருந்தா மட்டும் போதாது. ஆக்ட் பண்ண துணிவும் வேண்டும். கல்லூரியில படிக்கிறவங்க, நல்ல குடும்பத்திலே இருக்கிறவங்க எல்லாரும் சினிமாவிலே நடிக்க வரணும்.

ஆனா பயப்படறாங்க. சினிமாவிலே தவறு நடக்கிறதில்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, யாரோ எப்பவோ செய்த தவறை நினைச்சு, எல்லாரையும் தவறா எடைப் போட்டுடக் கூடாது. படிச்ச பெண்கள் நிறையப் பேர் வந்தால் இந்தத் தொழிலுக்கும் தனிக் கௌரவம் கிடைக்கும். நல்ல வருவாயும், புகழும் பெண்களுக்கு கிடைக்கும்.

நீங்க கேரளத்தை சேர்ந்தவராயிருந்தாலும், தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் இவ்வளவு பற்றும் பாசமும் வைத்திருக்கிறீர்களே… ஏன்?

என்னைக் காப்பாத்தறதே தமிழ்தானே? எனக்கு முதல்லே எழுதத் தெரிஞ்சது, பேசத் தெரிஞ்சது எல்லாமே தமிழ்லேதான். என் தந்தையார் காலமானபோது எனக்கு இரண்டரை வயது. அப்புறம் இங்கேயே வந்து படிச்சேன். கேரளத்தில் எங்க அம்மா பேர்ல ஏதோ ஒரு சின்ன நிலம்தான் இருக்கு. அதுகூட எனக்கு சரியா நினைவில் இல்லே.

மலையாளம் உங்களுக்குத் தெரியாதா?

தெரியும்! கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டேன்.

மலையாளப் படத்திலே நீங்கள் நடிப்பீங்களா?

நானே எடுப்பேன். நடிப்பேன்.

இந்திப் படத்திலே?

அதே பதில்தான்.

இந்தி ஆட்சி மொழியா வரக் கூடாதுன்னு உங்க கட்சி சொல்கிறது. ஆனா, நீங்க நடிப்பேன்னு சொல்றீங்களே?

இந்தி ஆட்சி மொழியா வர்றது வேறு. இந்தி கத்துக்கிறதோ, படம் எடுக்கிறதோ வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது.

உங்களை நாடகம் வளர்த்ததா? சினிமா வளர்த்ததா?

பெரிய பதில்தான் தரணும். நாடகம்தான் தாய். சினிமா சேய். சினிமாவிலே நடிக்க வர்றவங்களுக்கு நாடக அனுபவம் இருப்பது நல்லது. அது ரொம்பவும் உதவும்.

படத்திலே நீங்க பார்க்கிற மாதிரி காட்சிகளை வரிசைக்கிரமமா எடுக்கிறதில்லே. முன்னே, பின்னே, வசதிக்கும் சூழ்நிலைக்கும், நடிகர் நடிகைகளின் நேரத்திற்கேற்ப காட்சிகளை மாற்றி துண்டு துண்டாக எடுப்பாங்க. இப்படி நடிக்க வரும்போது காட்சிகளின் தன்மைக்கேற்ப அழுகிறோம் சிரிக்கிறோம்.

அழணும்னா உடனே கிளிசரின் தடவிக்குவோம். ஆனா நாடகத்திலே மேடையிலே ஸீன்லே நடிக்கும்போது இப்படி திடீர்னு அழணும்னா கிளிசரின் கேட்கவோ தடவிக்கவோ முடியாது. சிரிச்சிக்கிட்டே இருக்கணும். உடனே அந்த இடத்திலேயே அப்படியே அழணும். அவ்வளவு விரைவாக உணர்ச்சிகளை மாத்தி நடிக்கணும்.

இங்கே சினிமாவிலே அப்படி கிளிசரின் இல்லாமல் உணர்ச்சியைப் பிரதிபலிக்க இம்மாதிரியான அந்த நாடக மேடை அனுபவம் உதவும்.

நாடகத்தில் ஒரு நடிகன் தன் சொந்தத் திறமையை மட்டும்தான் அதிகம் நம்பிக்கிட்டு இருக்கணும். சினிமாவிலே மத்தவங்க உதவியிலேதான் அதிக நம்பிக்கை வெச்சிருக்கணும். அதனாலே ரெண்டுமே ஒரு நடிகனை வளர்க்க உதவுவது.

நீங்கள் ஆங்கிலப் படத்தில் நடித்தால் என்ன?

இங்கிலீஷே சரியா தெரியாதுங்க. ஜெய்ப்பூரில், ‘அடிமைப் பெண்’ படத்துக்காக நான் சென்றிருந்தபோது ராஜஶ்ரீ பிக்சர்ஸ், திரு.தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார்.

அதிலே பேசும்போது நான் இந்திப் படத்திலே நடிக்கணும்னு அவர் குறிப்பிட்டார். அவருக்கு உடனே நான் பதில் சொன்னேன்.

”நான் பேசுற இந்தியை தாங்கிக்கிற சக்தி இருக்குமானால் நான் நடிக்கத் தயார்” என்றேன். அதையேதான் இங்கிலீஷ் படத்துக்கும் சொல்லணும்.

குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க?

நாட்டுக்குத் தேவையான ஒரு நல்ல திட்டம். அவசியமான திட்டமும்கூட, ஜனத்தொகை பெருகுவதால் ஏற்படும் இட நெருக்கடி, வசதிக்குறைவு, மாறும் இதரத் தொல்லைகள் இதையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகவும் சொல்லப்போனா உலக நன்மைக்காகவும் எல்லாரும் சேர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய, கட்டுப்பட வேண்டிய திட்டம் இது.

ஆனா, குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டும்தான் இது என்பதை என்னால் ஏத்துக்க முடியல. இந்தத் திட்டம் உலகம் பூராவுக்குமே, எல்லா வகுப்பினருக்கும் பொதுவான திட்டமா இருக்கணும். மேலும் இத்திட்டம் மனக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டால்தான் பூரணமாக வெற்றியைப் பெற முடியும்.

கருச்சிதைவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் கொடுத்தா அதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?

குழந்தை அதிகம் பெறுவதால் பெண்களில் பலர், பல ஆண்டுகள் திடகாத்திரமாக வாழக்கூடியவர்கள்கூட விரைவில் வயோதிகத் தன்மை அடைந்துவிடுவதாகச் சொல்கின்றனர்.

ஆகவே குழந்தைகளை அளவோடு பெறுவது அவசியமாகிறது. அதற்காக கருச்சிதைவு முறையை அனுமதிப்பதால் வேறு பல பெரிய ஆபத்துகள் எதிர் நோக்கி இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

நான்கு குழந்தைகள் பெறுவதும், ஒரு முறை கருச்சிதைவு செய்து கொள்வதும் ஒன்று தான் என எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் கூறியிருக்கிறார்.

அப்படியானால் கருச் சிதைவினால் விரைவில் பெண்களின் உடல்நலம் கெட்டு, அவர்கள் பெரிதும் பலவீனப்பட்டு விடுகிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

அப்படிப் பலவீனப்பட்டுவிடும் பெண் சமுதாயத்தினர் குடும்பப் பணிகளையும் நாட்டுப் பணிகளையும் பூரணமாக ஏற்று செயலாற்ற வேண்டிய தகுதியை இழந்துவிடக் கூடும்.

இத்தகைய அவலமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிடும். கருச்சிதைவு முழு மனத்துடன் ஏற்கக் கூடியதுதானா? மனக்கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாடு முறைகள் இத்தனையையும் மீறி கருச்சிதைவை மருத்துவர்கள் உடல்நல ஆரோக்கியத்தின் அடிப்படையில் முழு மனதுடன் சிபாரிசு செய்து கணவன் மனைவியரும், தாயின் எதிர் கால உடல்நலத்தையும் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் கண்டு இருவருக்கும் உள்ள உடன்பாட்டுடன் விரும்பு முன்வந்தால், தவிர்க்க முடியாத அந்நிலையில் வேண்டுமானால் கருச்சிதைவை அனுமதிக்கலாம்.

எனவே, மேலே சொல்லப்பட்டவை போன்ற நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து, பகுத்தறிந்து முறையான விதிகளுடன் எந்த வற்புறுத்தலுக்கும் இடம் ஏற்படாத வகையில் இதற்கான சட்டம் அமைக்கப்பட்டால் ஓரளவுக்கு இயற்றப்பட்டதன் நோக்கம் திருப்தியைத் தரலாம்.

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள்.

ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.

என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.

ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?

அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

நூறு படங்களுக்கு மேல் நடிச்சிருக்கீங்க. நீங்க நடிச்ச படங்களிலேயே உங்களுக்கு பிடித்தமான படம் எது?

என் எண்ணப்படி அமைந்த படங்கள் ‘பெற்றால்தான் பிள்ளையா”, ‘என் தந்தை’. குறிப்பாக ‘பெற்றால்தான் பிள்ளையா’வில் நான் போட்ட வேஷம் ரொம்பவும் கவர்ந்தது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும்தான் நான் பாதுகாப்பா இருப்பேன்னு அந்த வேஷம் சொல்லலே. நான் யாரோ பெத்த பிள்ளை. ஆனால், அந்த எல்லாப் பிள்ளைகளையுமே வளர்க்கக் கடமைப்பட்டவன் என்ற நல்ல கருத்தை சொன்ன பாத்திரம் அது.

அண்ணாவைப் பற்றி மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை நீங்கள் சொல்ல முடியுமா?

தெரிந்தோ தெரியாமலோ நீங்க அண்ணா இருக்காரே என்று சொன்னீர்கள். ஆம். அவர் இறந்தும் இன்றும் நம்மிடையே இருப்பதைப் போன்ற உணர்வை நம்மிடம் உண்டாக்கி இருக்கிறார்.

அதுதான் அவரது தனிச் சிறப்பு. அண்ணாவை விட்டு யாரும் பிரிய முடியாது. அவரது நினைவை யாரிடமிருந்தும் பிரிக்கவும் முடியாது.

அவர் எழுதியது, பேசியது, அவர் செய்தது இப்படி ஒவ்வொன்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள்தாம். எல்லாருக்கும் நல்லது செய்யணும்கிற எண்ணமே அவரிடம் மேலோங்கி நின்றது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இப்போது சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் சின்ன அண்ணாமலை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னால் என்னிடம் வந்தார்.

சிவாஜி வரலாற்றை நான் படமாக்கப் போகிறேன். நீங்கள்தான் இதில் சிவாஜியா நடிக்கணும் என்று அழைத்தார். நான் மறுத்துவிட்டேன்.

பின்னர் டைரக்டர் திரு.ரமண்ணா அவர்கள் அவர் தயாரிக்கும் சிவாஜி வரலாற்றுப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அழைத்தார்.

”சிவாஜிங்கிற பட்டம் ஏற்கெனவே தம்பி கணேசனுக்கு இருக்கு. ஆகையினால் சிவாஜியின் வரலாற்றிலே, நான் அந்த பாத்திரத்திலே நடிக்கிறதுக்கு என் மனசாட்சி இடம் தரவில்லை” என்று சொல்லிவிட்டேன்.

இது விஷயமா ராமண்ணா, அண்ணாவைப் பார்க்கப் போகிறார் எனக் கேள்விப்பட்டு அவரை நானே முந்திக்கொண்டு அண்ணா அவர்களிடம் போனேன்.

அப்போது அண்ணா அவர்கள் சொன்னார், ‘ஏற்கெனவே சிவாஜிங்கிர பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்தது நம்ம கட்சி. அந்த பட்டம் அவருக்கு நிலைச்சி இருந்தால்தான், நாம் கொடுத்த பட்டத்துக்கு ஒரு கௌரவம் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு, ‘நீங்க செய்த முடிவு சரியான முடிவு’ என்று சொன்னார். இதுதான் அண்ணா அவர்களின் குண இயல்பு.

நான் உங்களின் ரசிகை. ஆனாலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுடைய படங்களையும் விடாமல் பார்ப்பேன். என்ன சொல்கிறீர்கள்?

என்னுடைய ரசிகர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்கள். இன்னொருத்தரிடம் இருக்கும் கலையையும், திறமையையும் நாம் ஆதரிக்க வேண்டும்.

என்னை இழிவுப்படுத்தும் வார்த்தைகளோ, எனது கொள்கைகளை இழிவுபடுத்துவதாகவோ இருந்தால் அந்த மாதிரிப் படங்களுக்குப் போக மாட்டார்கள்!

உங்களுக்கும் சிவாஜி கணேசனுக்கும் உள்ள தொடர்பு எப்படி?

உள்ளத்தால் இருவரும் அண்ணன், தம்பி என்ற தொடர்பு. ஆனால், நாங்கள் சார்ந்துள்ள கட்சி கொள்கைகள் வேறு. அவ்வளவுதான்.

உங்களது ரசிகர்களும் அவரது ரசிகர்களும் சில சமயங்களில் சண்டையிட்டுக் கொள்கிறார்களே, இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இன்னும் பக்குவம் அடைய வேண்டும்.

உங்களுக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபமாமே?

மனஸ்தாபம்? ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் நடுவில் மனத்தாங்கல் ஏற்படுவதற்கு அவசியமே இருப்பதில்லையே. காரணம், என்னைப் போன்றவர்களின் தொழில் படங்களில் நடிப்பது.

எனவே அந்த நடிப்பில் ஏதாவது உண்மை இருந்தால் அல்லவா பிரச்னை ஏற்படும். சரியான பதில் கிடைக்காதபோது வெறுப்பு தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

கழகம் வளர்ந்தது எப்படி?

பலரும் ஆதரித்ததால் வளர்ந்தது. கொள்கை வழி நின்று மக்களுக்கு சேவை செய்யலேன்னா ஒரு கட்சி எப்படி வளர முடியும்? மக்கள் ஆதரவு இல்லேன்னா கொள்கைகளை எப்படி அமல்படுத்த முடியும்? அதனாலே கழகத்திற்கு மக்கள் ஆதரவு இருக்கு. மக்கள் ஆதரிக்கும் வகையில் நல்ல கொள்கைகள் இருக்கு.

தொகுப்பு; எஸ்.கிருபாகரன்

Share.
Leave A Reply

Exit mobile version