யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1521 பட்டதாரிகள் நேரடியாக சமுகம் கொடுத்து தமது பட்டங்களைப் பெறவுள்ளனர்.

யாழ்ப்பண பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்குரிய பட்டங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

இதில் டிப்ளோமா பட்டம் பெறும் 114 மாணவர்களது பட்டங்களும் வெளிவாரியாகப் பட்டம் பெறும் 247 மாணவர்களது பட்டங்களும் சமுகமளிக்காத நிலையில் பட்டமளிப்பு விழாவில் வேந்தரால் உறுதி செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 09.00 மணிக்கு ஆரம்பமாகிய முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகிய இரண்டாவது அமர்வில் 193 மாணவர்களுக்கும், பிற்பகல் 01.45 மணிக்கு ஆரம்பமாகும் மூன்றாவது அமர்வில் 196 மாணவர்களுக்கும், பிற்பகல் 03.30க்கு ஆரம்பமாகும் நான்காவது அமர்வில் 201 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்படவுள்ளது.

நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஆரம்பமாகும் ஐந்தாவது அமர்வில் 181 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு, முற்பகல் 10.45க்கு ஆரம்பமாகும் ஆறாவது அமர்வில் 193 மாணவர்களுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகும் ஏழாவது அமர்வில் 188 மாணவர்களுக்கும், பிற்பகல் 03.30 மணிக்கு ஆரம்பமாகும் எட்டாவது அமர்வில் 199 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கும் பட்டம் பெறுவதற்கும் சமுகமளிக்கும் ஒவ்வொருவருக்கும் மேலதிகமாக ஒருவர் மண்டபத்தில் பார்வையாளராக அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழாவினை மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக நடாத்துவதற்கும், பட்டமளிக்கப்படும் மாணவர் சிறப்புறுமாறு அவ்விழா அமைவதற்கும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

download-11

Share.
Leave A Reply

Exit mobile version