பெங்களூரு: காதல் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த சகோதரிகள் இருவர், ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பாலாஜி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மல்லேசப்பா. இவருக்கு தேஜஸ்வினி (22), ரஞ்சிதா (20) என இரண்டு மகள்கள்.
பொறியியல் மாணவிகளான சகோதரிகள் இருவரும் வெவ்வேறு இளைஞர்களைக் காதலித்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக தேஜஸ்வினி வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துள்ளார்.
தங்களது காதல் விவகாரத்தை தந்தையிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மகள்களின் காதலுக்கு மல்லேசப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை நடந்த சண்டைக்குப் பின் மல்லேசப்பா உறங்கச் சென்று விட்டார்.
பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்த மல்லேசப்பா, மகள்கள் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்னர் சகோதரிகள் இருவரும் தங்களது பெற்றோருக்கு கடைசிக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.
அதில், ‘இத்தனை வருடங்கள் தங்களை அன்பாக பாதுகாப்பாக வளர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அவர்கள், இந்த தற்கொலை முடிவிற்காக பெற்றோரிடம் மன்னிப்பும் கோரி உள்ளனர்.
மேலும், தங்களது தற்கொலைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் அக்கடிதத்தில் அவர்கள் எழுதியுள்ளனர். ஒரே சேலையில் இரண்டு மகள்களும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு மல்லேசப்பாவும், அவரது உறவினர்களும் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share.
Leave A Reply

Exit mobile version