தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராமஅலுவலர், இன்று வியாழக்கிழமை (21) வாகனத்தில் கடத்தப்பட்ட நிலையில், கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரங்களில் பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்ற கிராமஅலுவலரை வாகனத்தில் வந்தவர்கள் மறித்து, சகோதரனை அடித்துவிட்டு கிராமஅலுவலரை இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட வாகனம் புதுக்குடியிருப்புப் பகுதியால் சென்றுகொண்டிருந்த போது, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டது.
கிராமஅலுவலர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
திருமணம் செய்யுமாறு மேற்படி பெண் கிராமஅலுவரை நபரொருவர் தினமும் அச்சுறுத்தி வந்ததாகவும், இதனால் கடந்த ஒரு வார காலமாக சகோதரனின் மோட்டார் சைக்கிளில் கிராமஅலுவலர் சென்று வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.