ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவியை வெட்டிக் கொல்ல முயற்சித்த காதலன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகள் குருசெல்வி (20). ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குருவானந்தம் (24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குருவானந்தத்திற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த செல்வியும், குருவானந்தமும் ஒரே பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தின் நடத்துனர் அவர்கள் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் நைட்டி நிறுவனம் அருகே இறக்கிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வியைச் சரமாரியாக வெட்டியுள்ளார் குருவானந்தம்.
இதில் பலத்த காயமடைந்த செல்வி மயங்கி விழுந்தார். ஆனால், செல்வி இறந்து விட்டதாகக் கருதிய குருவானந்தம், போலீசாருக்குப் பயந்து அருகில் இருந்த மரத்தில் தனது லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வழியே சென்றவர்கள் இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அரிவாள் வெட்டு காயங்களுடன் மயங்கி கிடந்த செல்வி, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share.
Leave A Reply

Exit mobile version