விழுப்புரம்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளின் சாவில் மர்மம் இருப்பதாக தற்கொலை செய்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல், தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரியின் தாளாளரின் மகனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். முன்னதாக கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், தங்களையே கழிப்பறையை சுத்தம் செய்வது முதல் பல வேலைகளை செய்யுமாறு வற்புறுத்துவதாகவும் கூறி மாணவிகள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு டி.சி. அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு டி.சி. வழங்கவில்லை.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் கூறுகையில், கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை.
விடுதியில் சாப்பாடு வசதியே இல்லை, கழிவறையை எங்களை சுத்தம் செய்ய வைக்கிறார்கள், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என்று எங்கள் மகள் பலமுறை தெரிவித்திருந்தார்.
இது குறித்து நாங்கள் கல்லூரிக்கு சென்று கேட்டால் நிர்வாகத்தினர் எங்கள் மகளை திட்டுவதாக அவள் தெரிவித்தாள். எங்களின் மகள் இறந்துவிட்டது பற்றி கல்லூரி நிர்வாகத்தினர் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
போலீசார் தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்கள் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் நேரில் வந்து பார்த்தபோது எங்கள் மகளின் தலை உள்பட உடலில் ஆங்காங்கே காயம் இருந்தது. தற்கொலை செய்யும் முடிவை எங்கள் மகள் எடுத்திருக்கவே மாட்டார். அவரின் சாவில் மர்மம் இருக்கிறது என்றனர்.
தொடர்புடைய செய்தி
கள்ளக்குறிச்சி அருகே தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.
ஏற்கெனவே, இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருத்துவர்கள் இல்லை என விழுப்புரம் ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் மனு அளித்தனர். சிலர் தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து உண்மை நிலை அறிய ஒரு குழுவை விழுப்புரம் ஆட்சியர் லட்சுமி அமைத்தார்.
கள்ளக்குறிச்சி கோட்டாச்சியர் மாலதி தலைமையிலான அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், ‘கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை’ என கூறி இருந்தார்.
இந்த நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளும் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு கிணற்றில் குதித்து நேற்று மாலை தற்கொலை செய்தனர்.
தகவலறிந்த சின்ன சேலம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அவர்களை பற்றிய முழு தகவல்களும் உடனடியாக தெரியவில்லை. வெளி நபர்களின் பாலியல் தொந்தரவால் மாணவிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.