இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்படும் அப்பாவிகள் பலரின் சிறு நீரகங்களைப் பெற்று சட்ட விரோதமான முறையில் இலங்கையின் நான்கு தனியார் மருத்துவமனைகளில் 6 வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
இந்தியாவின் அஹமதா பாத் பிராந்திய பொலிஸார் தமது விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைவாக இந்திய பொலிஸாரிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிக்கையின்படி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தியரான 35 வயதுடைய நபரே சிறு நீரக வழங்குநர்களையும் அதனைப் பெறுபவர்களையும் இலங்கைக்கு அனுப்புவதாகவும் அவர் இவ்வாறு 60 சிறு நீரக வழங்குநர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சிறு நீரகங்களை வழங்கும் நபர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிறு நீரகம் இந்திய ரூபா பெறுமதியின் பிரகாரம் 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந் நாட்டில் உள்ளதாகக் கருதப்படும் இந்தச் சிறு நீரக மாபியாவின் பிரதான சந்தேக நபரான மருத்துவர் இந்திய பிரதிநிதிக்கு இந்திய பெறுமதியின் பிரகாரம் 445 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அஹமதாபாத் பிராந்திய பொலிஸார் செய்துள்ள விசாரணையின் அறிக்கையினை தற்போது ஆய்வு செய்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நகஹ முல்ல ஆகியோர் மேலதிக விசாரணைகள் தொடர்பில் விஷேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அறியமுடிகின்றது.
கொழும்பில் உள்ள பிரபலமான நான்கு தனியார் வைத்தியசாலைகள் ஊடாகவே இந்தச் சட்ட விரோத சிறு நீரக வர்த்தகம் இடம்பெற்று வந்துள்ளதுடன் அது தொடர்பில் ஆறுவைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது வரை சுமார் 60 சட்ட விரோத சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளாதாகக் கூறப்படும் நிலையில் இவை அனைத்தும் இந்தியர்களுக்கே செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த இந்தியர்கள் அனைவரும் அஹமதபாத் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மிக சூட்சுமமாக இடம்பெற்று வந்த இந்த சட்ட விரோத சிறுநீரக மாற்று சிகிச்சை வர்த்தகம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் வெளி நாடவருக்கு சிறு நீரக மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக வியாபாரம்: 6 வைத்தியர்கள் தொடர்பு: விசாரணைக் குழு நியமனம்
மக்களை ஏமாற்றி சட்டவிரோதமான முறையில் சிறுநீரக வியாபாரத்தில் ஆறு வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளதாக இந்திய பொலிஸாரினால் கிடைக்கப்பட்ட தகவலின் பிரகாரம் உண்மையை கண்டறிவதற்கான விசாரணையை முன்னெடுக்கும் முகமாக சுகாதார அமைச்சினல் மூன்று பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான பணிப்பாளர் காந்தி ஆரியரத்ன, மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தீப்தி பெரேரா, சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுநீரக மோசடிகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் போசனை துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று துரித விசாரணை மேற்கொண்டதன் பின்னர் முழுமையான அறிக்கை ஒரு கிழமைக்குள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் ஆறு வைத்தியர்கள் தொடர்பில் வைத்திய சபைக்கு அறிவுறுத்தவும் சுகாதார அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளிகளை வைத்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் ஈடுப்பட்டு வருவதாக இந்திய பொலிஸார் ஊடகங்கள் வாயிலாக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஆராய்ந்த பின்னர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கான மாற்று சிகிச்சையை அரசாங்கம் நிறுத்துவதற்கு நேற்றைய தினம் தீர்மானித்திருந்தது.
இந்நிலையிலேயே இது குறித்தான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கும் நோக்குடன் மூவரடங்கிய குழுவினை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
இந்த குழுவின் அறிக்கை கிடைக்கபெற்றவுடன் அடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.