அண்டப் புழுகன் வைரமுத்துவுக்கு காசும்கொடுத்து, பொன்னாடையும் போர்த்தி, ஒரு பட்டமும்  வழங்கி விட்டால்… மூச்சுவிடாமல்  புழுகி தள்ளுவான்..

(உங்களுக்கு தெரியுமா? கடைசிக்கட்டப் போர்  நடந்தபோது..வைரமுத்து மூன்றுமாதகாலமாக  அன்னம், தண்ணி பருகாமல் உண்ணாவிரதம்  இருந்தவர்.  அவரது  இதயம்  வெடித்து சிதற தயாராக இருந்தது. இதயத்தை அவர்  கெட்டியாக பொத்திப்பிடித்துக்கொண்டு   இருந்ததனால், அவர் இன்றும்    உயிருடன்  இருக்கிறார். (இப்படி  வைரமுத்து புழுகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

இதோ  முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்ட போது வைரமுத்து  புழுகிய புழுகு…

“இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். (பேச்சு நிறைவடைவதற்கு முன்பே வைரமுத்துவின் இதயம் வெடித்து சிதறவிருந்தது. ஆனால் பேசி முடிந்த பின்பும் வெடித்து சிதறவுமில்லை, கண்ணிலிருந்து ஒரு சொட்டுக்கண்ணீரும் வரவுமில்லை.)

ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள்.

ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

விழா தொடங்கும் போது வானம் மெல்லிய தூறல் போடத் தொடங்கியது. பெரு மழையே வந்துவிடுமோ என்று பலரும் அஞ்சினார்கள்.

எந்த மழை வந்தாலும் தமிழர்கள் கலைய மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வெடி மழையிலேயே கரைந்து போகாத தமிழர்கள் இந்த இடிமழையிலா கரைந்துபோவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

வந்த மேகம் கலைந்து போய்விட்டது. உழவர் பெருவிழா கொண்டாடும் முதலமைச்சரையும் பொதுமக்களையும் பெரிதும் பாராட்டுகிறேன்.

தமிழர்களின் ஆதிப் பெருந்தொழில் முதலில் வேட்டை, பிறகு வேளாண்மை. மரபு வழி அறிவோடு வேளாண்மையை அறிவியல்பூர்வமாகக் கையாண்டவர்கள் தமிழர்கள்.

ஜப்பானிய நடவு முறை தான் பயிர்களுக்கு இடைவெளியைச் சொல்லிக்கொடுத்தது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதற்கும் முன்பே வேளாண்மையில் நடவுமுறையை விஞ்ஞானப்படுத்தியவர்கள் தமிழர்கள்.

நெல் நாற்று நட்டால் இரண்டு நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு ஊர்ந்து செல்லவேண்டும், கரும்பு நட்டால் இரண்டு கரும்புகளுக்கு மத்தியில் நரி ஓடும் இடைவெளி இருக்கவேண்டும்.

வண்டி ஓடுகின்ற இடைவெளியில் வாழைக் கன்றுகள் நடப்படவேண்டும். தென்னை மரம் நட்டால் இரண்டு தென்னைகளுக்கு இடையில் தேர் ஓடவேண்டும்.

“நண்டு ஊர நெல்லு, நரி ஓடக் கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓடத் தென்னை”

என்ற வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் திருவள்ளுவர் உழவுக்கு என்று அதிகாரமே இயற்றினார்.

இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இரசாயன உரங்களால் விளையும் விளைச்சலால் மனிதகுலம் புற்று நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது.

இராசயன உரங்கள் வளர்ந்து வந்த கதையே வேறு. முதல் உலகப்போரில் எட்டு இலட்சம் கைதிகளைக் கொன்று குவித்த அமோனியாப் புகை தான் போர் முடிந்ததும் பூச்சி கொல்லிமருந்தாய் உருமாறியது.

இரண்டாம் உலகப்போரில் மனித குலத்தை அழிக்கப்பயன்பட்ட அமோனியா சூப்பர்பாஸ்பேர்ட் என்ற வெடி உப்புக்களைத் தான் போர் முடிந்ததும் வர்த்தகச் சூதாடிகள் இரசாயன உரங்களாக மாற்றி விற்பனைச் சந்தையை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் தமிழர்கள் கண்டறிந்த இயற்கை உரம்தான் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யாதது. மண்ணுக்கு உயிர் உண்டு என்று கண்டறிந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் மண்ணை நிலமென்னும் நல்லாள் என்றும் பூமாதேவி என்றும் கொண்டாடினார்கள்.

புது யுகத்தின் தமிழ் இளைஞர்களே, உங்கள் வாழ்வு கணிப்பொறியோடு முடிந்துவிடுவதில்லை. விஞ்ஞானம் கற்றுக்கொண்டு வேளாண்மைக்குத் திரும்புங்கள்.

நடந்து முடிந்த பெரும்போர் உங்கள் வாழ்வைக் குலைத்திருக்கிறது. உங்கள் உறவுகளை அழித்திருக்கிறது. பெற்ற பெரும்துன்பங்களிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும்.

அடைந்த துன்பங்களையே அனுபவங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். எல்லாத் துயரங்களுக்குக் கீழேயும் நம்பிக்கை என்ற விதை அழியாமல் கிடக்கிறது. அதை முளைக்கச்செய்யுங்கள்.

யாழ்ப்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என் நெற்றியில் வைத்து வணங்கினேன். (வைரமுத்து யாழ்பாணம் வந்ததிலிருந்து கீழு குனியவேயில்லை. அப்படியிருக்க யாழ்பாண மண்ணை தொட்டு கும்பிட்டவனாம். சும்மா பொய் சொல்லுகிறான்) முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன். (வைரமுத்து கண்ணீர் சிந்தியதை யாராவது பார்த்தீர்களா?? இது பச்சைபொய்)

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, ஆனையிறவு, அம்பாறை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு என்பவை எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. இந்த நூற்றாண்டின் வரலாற்றுக் குறிப்புக்கள். ஈழமகாகாவியம் ஒன்றை எழுதிமுடிப்பதைத் தான் என்வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன்.

இனி இந்த மண்ணில் இரத்தம் சிந்தவேண்டாம், எங்கள் தமிழ் மக்கள் புதிய திசையில் புதிய வாழ்வு பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தத் தியாகத் திருமண்ணில் நின்றுகொண்டு சொல்லுகிறேன்,

ஏ நிலமே உன்னில் நாங்கள் புதைத்தது போதும் இனிமேல் விதைப்பதற்கு இடம்கொடு.
ஏ கடலே உன் அலைகள் இரத்தத்தால் சிவந்தது போதும் இனிமேலாவது வெள்ளை அலைகளை வீசு.
ஏ தீயே எங்கள் கூரைகளில் எரிந்தது போதும் இனியாவது அடுப்பில் எரி.
ஏ காற்றே எங்கள் சுவாசப்பைகளை வாழ்வால் நிரப்பு,
ஏ ஆகாயமே உன் மீது வெடிகுண்டுப் பறவைகள் பறந்தது போதும். இனியாவது சமாதானப் புறாக்களைப் பறக்கவிடு.
தமிழர்களே,
கல்வியால் உழைப்பால் உங்கள் வாழ்வை மேம்படுத்துங்கள் நாளை நம்முடையது.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் சிறந்த வேளாண்மை செய்த நூற்று ஆறு விவசாயிகளுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பரிசு வழங்கினார். விழாவின் தொடக்கமாக கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
………………………..

famer_day_00230வருட போரின் வடுக்களை  இன்னும் நம்மக்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அதன் பலாபலன்களை அனுபவித்தவர்கள் என்றால்.. அது “தமிழக போலி அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும்தான்.

வெளிநாட்டுக்கு வந்து புலம்பெயர் தேசத்து ஈழத்தமிழனின் இரத்தத்தை உறிஞ்சி குடித்து முடிந்துவிட்டது. இப்போ யாழ்பாணத்து  மக்கள் வசதியான வாழ்க்கைக்கு சென்றுவிட்டார்கள்.

அவா்களிடமும் சென்று  எதையாவது  பேசிவிட்டு,  பொன், பொருளும், புகழையும் வாங்கிக்கொண்டு செல்லலாம் என இந்திய சினிமா பிரபல்யங்கள் படையெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்  எம் மக்களுக்கு எதாவது செய்திருக்கிறார்களா?

நம்முடைய  தேசத்து மக்கள்  இழவு வீடு கொண்டாடிக்கொண்டிருக்கும்  போது,  வைரமுத்து போன்றவர்களை கூப்பிட்டு பொன்னாடை  போர்த்தி   கௌரவித்து, விருந்துபசாரம் செய்வது   எந்த வகையில் நியாயம்?

Share.
Leave A Reply

Exit mobile version