மொடக்குறிச்சி: முகநூல் மூலம் மலர்ந்த காதலால் முதல் கணவரை பிரிந்து 2-ம் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 31). இவருடைய கணவர் கிறிஸ்டோபர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.

ஜெனீபர் தனது ஊரின் அருகில் உள்ள ஒரு கணினி மையத்துக்கு சென்று வருவார். அப்போது அவர் இணையதளத்தில் முகநூல் (பேஸ்புக்) பயன்படுத்தி வந்தார்.

அதன் மூலம் அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (26) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

இவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். பின்னர் அசோக்குமாருடன் ஜெனீபர் முகநூல் மூலம் அடிக்கடி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

இது நாளடைவில் இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

இதையடுத்து ஜெனீபர் அசோக்குமாரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனீபர் தனது காதலன் கூறியபடி வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு வந்தார்.

அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் 2 பேரும் லக்காபுரம் மேற்குவீதியில் தனியாக குடியிருந்து வந்தனர்.

இதற்கிடையே ஜெனீபரை காணவில்லை என்று அவருடைய முதல் கணவர் கிறிஸ்டோபர் நரசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஜெனீபர் மொடக்குறிச்சி லக்காபுரத்தை சேர்ந்த அசோக்குமாரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ஜெனீபரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர், தனக்கு கிறிஸ்டோபருடன் வாழ பிடிக்கவில்லை என்றும், அசோக்குமாருடன்தான் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் அசோக்குமாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஜெனீபருக்கும், அசோக்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கரூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு ஜெனீபரை அசோக்குமார் அழைத்தார். அதற்கு ஜெனீபர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெனீபர் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அசோக்குமார் எழுந்து பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் உள்ள உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஜெனீபர் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதனைப்பார்த்த அசோக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெனீபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version