இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைக் கைதியாகவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நான்கு மாதங்களின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் இன்று செவ்வாய்க்கிழமை மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டார்.

160126091606_pillayan_512x288_bbc_nocreditமாகாணசபை அமர்வுக்கு வந்த பிள்ளையான்

கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இவர் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளினால் பொலிஸ் பாதுகாப்புடன் கிழக்கு மாகாண சபை அமர்வுக்கு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையிலே அழைத்து வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களில், ஒருவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் மாதத்தின் பின்னர் மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த 13ம் திகதி மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தவேளை தேவாலயத்திற்குள்ளே வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2004- 2005ம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்தப் படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்தபோதிலும் 10 வருடங்களின் பின்னர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

கிழக்கு மாகாண முன்னான் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, அந்த கட்சியின் முன்னாள் உறுப்பினரான உறுப்பினரான கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மீராலெப்பை கலீல் ஆகியோரே ஏனைய சந்தேக நபர்களாவர். இவர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version