இலங்கை வழியாக துபாய்க்குக் கடத்திச் செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று அழிக்கத் தொடங்கினர்.

 

காலி முகத் திடலில் இந்தத் தந்த அழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின.

தந்தங்களை அழிக்க ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அழிக்கப்பட்ட தந்தங்கள் பின்னர் எரிக்கப்படுவதற்காக, ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றன.

இந்தத் தந்த அழிப்பு நடவடிக்கைக்கு சிறப்பு அதிரடிப் படையினரும் ராணுவமும் கடும் பாதுகாப்பு அளித்தன.

கென்யாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் கடந்த 2012ம் ஆண்டும் மே மாதன் 12ம் தேதி இலங்கைக்கு இந்த தந்தங்கள் வந்தன. இத்தந்தங்களின் எடை 1528.9 கிலோ என்றும் இதன் மதிப்பு சுமார் 387 மிலியன் இலங்கை ரூபாய்கள் என்றும் கூறப்படுகிறது.

கடத்தல்காரர்கள் இந்த நடவடிக்கையின் மூலம் லாபம் எதையும் பெறலாம் என்ற நம்பிக்கைகளைக் குலைக்கவே இந்த தந்தங்கள் அழிக்கப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகள் கூறினர்.

இந்தத் தந்தங்கள் ஆப்ரிக்க நாடான தான்ஸானியாவில் கொல்லப்பட்ட யானைகளிலிருந்து பெறப்பட்டவை என்று அவைகளின் மீது நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனைகள் காட்டின.

கொல்லப்பட்ட யானைகளுக்காக, புத்த பிஷுக்கள் பிரார்த்தனை ஒன்றையும் நடத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version