அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில்,வாகனங்கள்  சென்றுகொண்டு இருந்தபோது, 2 வயது குழந்தை ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிகான் மாகாணத்தில் உள்ள நியூபோர்ட் நகரத்திற்குட்பட்ட 101 நெடுஞ்சாலையில், கடந்த 9-ம் திகதி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரமாக இருந்தாலும், சாலையின் இருபுறங்களிலும் எண்ணற்ற வாகனங்கள் சென்றுகொண்டு இருந்துள்ளன.

இந்நிலையில், மிதமான வேகத்தில் சென்ற காவல்துறையினரின் வாகனம் திடீரென சாலையின் மையத்தில் நின்றுள்ளது.

அப்போது எதிரே சாலையின் நடுவே 2 வயதான குழந்தை ஒன்று துள்ளிக் குதித்துக்கொண்டு காவல்துறையினரின் வாகனம் நோக்கி வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர், உடனடியாக குழந்தையை மீட்டுள்ளனர்.

எனினும், குழந்தையின் பெற்றோர்கள் குறித்தும், அது எந்த திசையிலிருந்து வந்தது என்பது குறித்தும் காவல்துறையினருக்கு உடனடியாக தெரியவில்லை.

பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,”சாலையில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சரியான நேரத்தில் காவல்துறையினர் காரை நிறுத்தி செயல்பட்டதால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பொது இடங்களுக்கு குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version