உலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கடிகாரத்தில் இரவு 11 மணி 53 நிமிடங்களைக் காட்டுமாறு நேரம் குறிக்கப்பட்டது.
இந்த கடிகாரத்தின் மணி சரியாக நள்ளிரவு பன்னிரண்டு எனக்குறிக்கப்பட்டால் உலகம் அழிந்துவிடும் எனப்பொருள். தொடர்ந்து அணு ஆற்றலைப் பயன்படுத்துதல், இயற்கைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற மனிதத்தவறுகள் மூலம் பூமிக்குப் பாதிப்புக்கள் அதிகமாகும் போது இக்கடிகாரத்தின் நேரத்தை அணு அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.
இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முறை இக்கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கடிகாரத்தின் நேரத்தை இரவு 11 மணி 57 நிமிடங்களாக அணு அறிவியலாளர்கள் தற்போது மாற்றியுள்ளனர்.
இது உலக வாழ்க்கைக்கு ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
அணு அச்சுறுத்தலும் காலநிலை மாற்றமும் பூமிக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக “இறுதிநாள்’ அடையாளக் கடிகாரம் நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்களாக நின்றுகொண்டிருக்கிறது எனவும் அணு விஞ்ஞானிகளின் செய்திக் குறிப்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் பூமியை மனிதத்துவம் எவ்வாறு அழிக்கவுள்ளது என்பது தொடர்பாக உருவகப்படுத்துவதற்கு இந்தக் கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. 2015 இல் நள்ளிரவுக்கு மிக அண்மையாக இந்தக் கடிகார முள் நகர்ந்திருந்தது.
“கடந்த 20 வருடங்களாக அண்மித்ததாக இது இருந்து வருகின்றது’ என்று அணு விஞ்ஞானிகளின் மடலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராகேல் ரோன்சன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் தலைநகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
உலகம் வெப்பமடைதல், பயங்கரவாதம், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான அணு ஆயுதப் பதற்றம், வட கொரிய ஆயுதங்கள் தொடர்பான கவலைகள், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பதற்றங்கள், சைபர் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் ஸ்திரமின்மைக்கு செல்வாக்கு செலுத்துபவையாக இருந்து வருவதாக அரிசோனா அரச பல்கலைக்கழக பேராசிரியரும் வானியலாளருமான லோரன்ஸ் குரோஸ் தெரிவித்திருக்கிறார்.
2015 இலிருந்து கடிகாரத்தில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது என்ற முடிவானது நல்ல செய்தி அல்ல என்று அவர் நிருபர்களிடத்தில் கூறியுள்ளார். கடந்த வருடம் சில சாதகமான செய்திகள் வெளிவந்திருந்தன.
ஈரானின் அணு ஆயுத உடன்படிக்கை பாரிஸ் காலநிலை பேச்சுவார்த்தைகள் உட்பட சிறப்பான செய்திகள் காணப்பட்டன. ஆயினும் சர்வதேச ரீதியில் அணு ஆயுதங்கள் அதிகரித்து வருவதாகவும் மாசடைவதற்கு எதிரான உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் நிபுணர்கள் கவலைகளை தெரிவித்திருந்தனர்.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் வெறுமனே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. உலக நாடுகள் இந்த விடயம் தொடர்பாக கடுமையான தெரிவுகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனரா என்பது தெளிவற்றதாக உள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு கடுமையான தெரிவுகள் தேவைப்படுகின்றன. சுற்றாடல் ரீதியான அனர்த்தங்களை சாத்தியமான அளவுக்கு மாற்றுவதற்கும் இவை தேவையாக உள்ளது என்று குரோஸ் தெரிவித்துள்ளார்.
கடிகாரத்தை நகர்த்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பான முடிவெடுப்பதற்கு 16 நோபல் பரிசு பெற்றவர்கள் உட்பட விஞ்ஞானிகள் மற்றும் புத்திஜீவிகள் குழு தலைமை தாங்குகிறது.
1947 இல் உலக இறுதிநாள் கடிகாரம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 18 தடவைகள் அது மாற்றப்பட்டுள்ளது.
1953 இல் நள்ளிரவுக்கு 2 நிமிடங்கள் இருக்கும் போது மற்றும் 1991 இல் நள்ளிரவுக்கு 17 நிமிடங்கள் முன்பதாக இருக்கும் நேரத்திலும் கடிகாரம் மாற்றப்பட்டிருந்தது.
1983 இல் நள்ளிரவுக்கு 3 நிமிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான கெடுபிடி யுத்தம் உச்ச கட்டத்தில் காணப்பட்டது.