பல இழுபறிகளின் பின்னர்  இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதற்காக எங்கள் அரசாங்க அதிபரைப் பாராட்டுகின்றேன்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் பொதுவான தாற்பரியத்தை நாங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 1987 ஆம் ஆண்டின் இந்திய  இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த போது இப்பேர்ப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கான தேவை இருக்கவில்லை.

ஏனெனில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மாகாணசபையின் கண்காணிப்பின் கீழேயே அப்போது  கடமையாற்றினார்கள்.

அதன் பின்னர் ஜனாதிபதி பிரேமதாசவின்  காலத்தில் இரட்டை நிர்வாகச் செயற்பாட்டை உருவாக்கும் வண்ணம் மாவட்டச் செயலாளர்கள் மத்திக்குக் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இதனால் மாகாண சபைகளுக்கு இலங்கை  இந்திய  உடன்பாட்டின் கீழ் ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு பாதிக்கப்பட்டது. முக்கியமாக வட, கிழக்கு மாகாணங்களுக்குகென்றே இனப்பிரச்சினையைத்தீர்க்க அதிகாரப்பகிர்வானது 13 ஆவது திருத்தச் சட்டத்தினால் கொண்டுவரப்பட்டது.

ஆனால் ஒற்றையாட்சி என்றதால் ஜனாதிபதியின் உடன்பாட்டினால்  வழங்கப்பட்ட  உரித்தை மீளப்பெறக்கூடியதாகவிருந்தது.

மாவட்ட  செயலாளர்களைத் திரும்பவும் மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்ததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின.

அதை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி  சந்திரிகா  அம்மையாரின் காலத்தில் HA/DG/D/DP என்ற 1996 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் மத்தியையும் மாகாணத்தையும் ஒருங்கிணைத்து நிர்வாகத்தை முன்நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மையில் திரும்பப்பெற்ற  உரித்தை மாகாணங்களுக்கே திருப்பி அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.

ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு மாகாணம் சார்பில் முதலமைச்சரும் மத்தி சார்பில் அமைச்சர் அல்லது  அல்லது சிரேஷ்ட பாராளுமன்ற  உறுப்பினர் ஒருவருமே இணைத்தலைவரர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அமைச்சருக்குப் பதிலாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்று அதில் குறிப்பிடும் போது  அது ஒரு குறைபாடாகவே சட்டப்படி தெரிந்தது.  மாகாண முதலமைச்சர் ஒருவர் அமைச்சர் என்ற ரீதியில் சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ஒருவராவார்.

மத்திய அமைச்சர் என்பவரும் அவ்வாறே. அவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உண்டு.  (They have executive powers). ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவாக்கத் தகைமையையே கொண்டவர்கள் (They are legislators) அவர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றி மக்கள் குறைகளைத் தெரியப்படுத்த வேண்டுமே ஒளிய நடைமுறைப்படுத்தும் பணியினை ஏற்றிருக்கும் முதலமைச்சர் அமைச்சர் என்பவர்களுடன் இணைத்தலைவர்களாக இருக்க முடியாது.

வைத்திய கலாநிதி சிவமோகனும் காதர் மஸ்தானும் என்னுடைய நண்பர்கள். அவர்களை நான் குறைகூறவில்லை. அவர்கள் மட்டுமல்ல இங்கிருக்கும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைத்தலைவர்களாகப் பங்குபற்றினாலும் எனக்கு  ஆட்சேபனை இல்லை.

ஆனால் சட்டத்திற்கு ஆட்சேபனை உண்டு. இப்பேர்ப்பட்ட விடயங்களை உச்ச நீதிமன்றத்துக்கா எடுத்துச் செல்வார்கள்? ஆகவே இவை பற்றிப் பேசாது விடுதலே உசிதம்.

அப்படியாயின் இணைத்தலைவர்கள் பற்றிக் குறிப்பிடுவது ஏனென்று நீங்கள் வினவலாம். அதற்குக் காரணம் உண்டு.

இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய மாகாணசபைகளைக் கிள்ளுக்கீரைகளாக உபயோகிக்க எத்தனிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் வருகின்றார்; மற்றும் சர்வதேச கவனிப்பு எம்பால் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதற்காக அரசாங்கம் இதுகாறும் வாளாதிருந்துவிட்டு அரசியல் ரீதியாக அவசர அவசரமாக இக்கூட்டங்களை நேரக்கட்டுப்பாடுகளுடன் நடத்த முன்வந்திருப்பது புரிகின்றது.

ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை வெறுமனே மத்திய அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு நடத்தலாம் என்று நினைப்பது தவறானது.

ஒருங்கிணைப்பு என்றால் இருசாராரையும் சேர்த்து வைப்பது. யாரையும் யாரையும் நாங்கள் ஒருங்கிணைக்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும்.

இது மற்றைய மாகாணங்களில் அத்தனை பெரிதாகப் பார்க்கப்பட மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தியில் இருக்கும் அரசாங்கமும் மாகாணத்தில் இருக்கும் அரசாங்கமும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்திருப்பதால் மத்தியும் மாகாணமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது வடமாகாணத்தில் மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

ஆகவே மத்தியையும் மாகாணத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் நபர்கள் இணைத்தலைவர்களாக இருந்து நடத்தினால்தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் சட்டவலுப்பெற்றிருக்கும். தனியாக அரசாங்க அமைச்சர்களையோ சட்டவாக்கப் பொறுப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையோ மட்டும் இணைத்தலைவர்களாகக் கொண்டு ஒரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாது. நடத்தினால் அது ஒருங்கிணைப்புக் குழு கூட்டமாகாது.

நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட மத்தியின் அமைச்சரும் சட்டவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் நடத்தும் ஒரு கூட்டம் ஒருங்கிணைப்புக் கூட்டமாகவே கருதப்படமாட்டாது.

அங்கு ஒருங்கிணைப்பு நடைபெற வேண்டுமானால் மாகாணம் சார்பாக நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒருவர் அமர்ந்தே தீர வேண்டும். இப்பொழுது எல்லோரும் இதை உணர்ந்து கொண்டுள்ளார்கள் என்று நம்புகின்றேன்.

இதனால்தான் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நான் தொடக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்ட போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  முன்னிலையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  ஒருங்கிணைப்புக் குழுவானது மகிந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்தவே என்னை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டதைக் கண்டித்து வடமாகாணம் மகிந்த சிந்தனையை ஏற்கவில்லை என்றும் 38 பேரில் 30 பேர் அச்சிந்தனையை ஏற்காதவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற கருத்தையும் வெளியிட்டு நடைபெறுஞ் செயற்திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் நாங்கள் பங்கு பற்றுகின்றோம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

அண்மையில் தற்போதைய  ஜனாதிபதிக்கும் இது சம்பந்தமான விடயங்களை 13.01.2016 அன்று விளக்கிக் கடிதம் எழுதியிருந்தேன்.

இன்னமும் அவரின் பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் அரசியல் காரணங்களுக்காக நியமனங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை  ஜனாதிபதி  உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை.

நாம் புறக்கணிக்கப்பட்டு மத்தியால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் இதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற காரணத்திலேயே இதனை இப்பொழுது குறிப்பிட்டேன்.

அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவோம்.  ஜனாதிபதிக்குக் காடுகளின் மத்தியில் கனமான காடழிப்பு நடந்து காட்டு நிலங்கள் பறிபோகின்றன என்பதை அவருக்குத் தெரியப்படுத்தியதன் பயனாக அவரால் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காடுகளை வெட்டித் துப்புரவு செய்தல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காடுகள் துப்புரவு செய்யப்படுவதனால் சுற்றாடலுக்கு பாரிய அழிவு ஏற்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலைமையின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதியுடனோ, இல்லாமலோ தற்போது செய்யப்படும் அனைத்து காடுவெட்டுதல்கள் / துப்புரவாக்குதல்களை உடனடியாகச் செயற்படும்வண்ணம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள்/ மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் / அனுமதிப்பத்திரங்களை மீள செல்லுபடியாக்குதல் மற்றும் புதிதாக உரிமங்கள் / அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு எதிர்காலத்தில் அலுவலர்களின் குழுவொன்று நியமிக்கப்படுவதுடன், அந்த புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைகளுக்கமைய மேற்குறித்த விடயங்கள் தொடர்பில், தொடர் நடவடிக்கையெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

எமது மாகாணசபை உறுப்பினர் இரவிகரனே இவைபற்றிய விபரங்களை முதன் முதலில் எனக்களித்தார்.

மாகாணக் காணிகள் பறிபோகாது, விலை போகாது இருக்க யாவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இரவிகரன் இது சம்பந்தமாக எடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் என் பாராட்டுகள் உரித்தாகுக.

எமது சில அலுவலர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து எமது மாகாணசபைகளின் உரித்துகளைப் பறித்தெடுத்துக் கொடுக்க விழைவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனால்தான் இலங்கை  இந்திய ஒப்பந்தத்திற்குப் பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி பிரேமதாச  நடந்து கொண்டமை கண்டனத்திற்கு உரியதாகக் காணப்படுகின்றது.

அவரின் அன்றைய செயல் வடக்கிற்கும் கிழக்கிற்குமே பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதானல்தான் மாகாண வனத்திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன வேறு சில திணைக்களங்களுடன் சேர்த்து மாகாணத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரிவருகின்றோம்.

சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் கூறிவரும் நாங்கள் இதனைக் கவனத்திற்கு எடுக்க வேண்டும். எமது நிலங்கள் பறிபோவதற்கும்;

எமது வனங்களும் விலங்குகளும் பாதிப்படைவதற்கும் எமது வளங்கள் சூறையாடப்படுவதற்கும் நாங்கள் ஒத்திசைவாளர்களாக இருந்து நடக்க முடியாது என்ற காரணத்தினால்தான் நாங்கள் சுயநிர்ணய உரிமை வேண்டி பற்றுறுதியுடன் செயல்படுகின்றோம்.

சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் மத்தி தனக்கென ஏற்றுக் கொண்ட பல விடயங்களையும் மாகாணத்திற்குக் கையளிக்க வேண்டியிருக்கும்.

இதனால்தான் ஐக்கிய நாடுகளில் இருந்து வந்த உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி விளக்கி வருகின்றேன். எமக்குரிய மாகாண உரித்துகளை மத்தி எடுத்துப் பிரயோகிப்பது என்பது அந்நியர் ஒருவர் எமது சயன அறையில் வந்திருந்து அங்கு உறைந்திருக்க உரிமை கொண்டாடுவதற்கு ஒப்பானதாகும்.

இன்று திவிநகும பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. திவிநகும என்பதும் மாகாண அதிகாரங்களை மத்திக்கு எடுத்த ஒரு செயல்பாடே.

மத்தியின் உள்ளீடல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்ட மாகாணத் தன்னாட்சியைத் தானே கொண்டு நடத்த வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பு.

முக்கியமான சில விடயங்கள் மட்டும் மத்தியிடம் இருக்கலாம். விரைவில் இது சம்பந்தமான ஒரு தீர்மானம் அரசியல் ரீதியாக எடுக்கப்படும். அதற்கிடையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.

கூடுமான வரையில் அலுவலர்கள் தங்கள் அமைச்சுகள், திணைக்களங்கள் பற்றிய மிகச் சுருக்கமான அறிக்கைகளைத் தந்து ஒருங்கிணைப்புக் குழுவிடம் அனுமதி கோரும் விடயங்கனை முன்னிறுத்தி அவற்றிற்கான அனுமதி பெறுவதே சாலச் சிறந்தது.

முன்னைய கூட்டங்கள் போல் காலத்தை விரயமாக்கும் விதத்தில் ஒவ்வொரு அலுவலரும் தமது திணைக்களங்கள் பற்றி விலாவாரியாக விளக்கம் அளிப்பது தேவையற்றதாகவே எனக்குப் படுகின்றது.

மற்றைய இணைத்தலைவர்கள் இது பற்றி உங்கள் கருத்தையும் தெரியப்படுத்துங்கள். உறுப்பினர்களின் உரித்தில் நாங்கள் கை வைப்பதாக இதை எடுக்கக் கூடாது. காரணம் அலுவலர்கள் விலாவாரியாக விளக்கம் அளிப்பதில்தான் எமது உறுப்பினர்களின் கேள்விகள், கவனங்கள் எழுவன என்று கூற முடியாது.

அந்தந்தத் தலையங்கம் வெளிப்படுத்தப்படும் போது அது சம்பந்தமான ஏதோ ஒரு விடயம் பற்றி உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பதை நாங்கள் ஒருவரும் கட்டுப்படுத்த மாட்டோம்.

அலுவலர்களின் விளங்கங்கள் தமது ஆவணங்களின் அடிப்படையில் ஏற்கனவே எம்முன் இருப்பதால் ஆவணங்கள் தரப்பட்ட பின்னர் தேவையான விபரங்களை எமக்குத் தந்துதவினால் நன்மை பயக்கும். நேரக்கட்டுப்பாட்டையும் நாங்கள் கடைப்பிடிக்கலாம் என்று கருதுகின்றேன்.

Share.
Leave A Reply

Exit mobile version