ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் லண்டன் செல்லகிறார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுமுன்தினமும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றும் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்குப் பயணமாகிறார்.
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றுள்ள ஸ்கொட்லாந்தின் சமஷ்டி முறை தொடர்பாக ஆராயவே இவர்கள் அங்கு செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கொட்லாந்துக்குச் சென்று, அங்குள்ள அதிகாரப் பகிர்வு முறை தொடர்பாக ஆராயவுள்ளனர்.
இந்தப் பயணம் தொடர்பாக நேற்று கொழும்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,‘அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பாக ஆராய்வதற்காகவே, அதிகாரப்பகிர்வு தொடர்பான அனுபவம் நிறைந்த நாடுகளுக்கு தாம் பயணம் மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த நாட்டில் கடந்த காலத்தில் நிகழ்ந்த விடயங்கள் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தானாக முன்வந்து வழங்கியிருந்தார்.
எனவே, அர்த்தமுள்ள வகையில் எவ்வாறு அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள முடியும், ஒவ்வொரு நாடுகளிலும் எவ்வாறு அதிகாரப்பகிர்வு விடயம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை ஆராயவே வெளிநாடு செல்கிறோம்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.