சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழிதான் திமுக தலைவர் கருணாநிதியிடம் தனது தந்தை குறித்து உருக்கமாகப் பேசி அவரை இறங்கி வர வைத்தார் என்று சொல்கிறார்கள்.
இதனால்தான் அழகிரியை மன்னிக்கும் அளவுக்கு கருணாநிதி மனம் மாறினாராம். பொதுவாக அப்பா, பிள்ளைகளுக்கு இடையே சண்டை வந்தால் இந்தப் பேரப் பிள்ளைகள்தான் உள்ளே புகுந்து ஏதாவது செய்து சமரசம் ஏற்படுத்தி சந்தோஷத்தைத் திரும்பக் கொண்டு வந்து விடுவார்கள்.
அதே கதைதான் கருணாநிதி குடும்பத்திலும் நடந்திருக்கிறதாம். அழகிரியின் மகள் கயல்விழிதான் தனது தாத்தாவைப் போய்ப் பார்த்து தாத்தா தாத்தா இங்கே பாருங்க என்று ஆரம்பித்து தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியாகப் பேசி, தனது அன்பால் தாத்தாவைக் கரைத்து அவரை வழிக்குக் கொண்டு வந்தாராம்.
திரும்பி வருகிறார்
அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான மு.க.அழகிரி மீண்டும் திமுகவுக்குத் திரும்பவுள்ளதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. 30ம் தேதி அதாவது நாளை அழகிரியின் பிறந்த நாள்.
இதை மதுரையில் அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நாளை திமுகவுக்குத் திரும்புவது தொடர்பான அறிவிப்பை அழகிரி வெளியிடலாம் என்று தெரிகிறது.
3 வருஷமாச்சு
கடந்த 2013ம் ஆண்டு பிறன்த நாள் சமயத்தில்தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவரது பிறந்த நாள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கட்சியில் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று நம்பப்பட்டு கடைசி வரை அது ஏமாற்றத்திலேயே முடிந்தது.
இந்த ஆண்டு கன்பர்ம்ட்!
ஆனால் இந்த ஆண்டு நிச்சயம் அழகிரி திமுகவில் சேருவது உறுதி என்று சொல்கிறார்கள். காரணம், கருணாநிதி மனசை மொத்தமாக மாற்றி விட்டாராம் அழகிரியின் மகள் கயல்விழி. யாராலாலும் சாதிக்க முடியாததை இந்த பேத்தி சாதித்து விட்டாராம்
அப்பா குறித்து உருக்கம்
சமீபத்தில் தாத்தாவை கயல்விழி சந்தித்தபோது தனது அப்பா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டாராம். அதைக் கேட்டு கருணாநிதி நெகிழ்ந்து போய் விட்டாராம்.
என்னை வந்து பார்க்கச் சொல்
இதையடுத்து உன் அப்பாவை என்னை வந்து பார்க்கச் சொல் என்று கூறி விட்டாராம். இதைக் கேட்டு கயல்விழி உற்சாகமடைந்த அங்கிருந்தபடியே தனது தந்தைக்குத் தகவலை பாஸ் செய்துள்ளார். அழகிரியும் உற்சாகமாகி விட்டாராம்.
சென்னை விரைந்தார்
தற்போது அழகிரி தனது மனைவி காந்தியுடன் சென்னை வந்து விட்டார். நாளை அவர் கருணாநிதியை நேரில் சந்திக்கலாம் என்று தெரிகிற. அப்படி சந்திப்பது உறுதியானால், அவர் நாளையே திமுகவில் சேரும் அறிவிப்பும் வெளியாகி விடும் என்று நம்பப்படுகிறது. எல்லாக் “கூட்டணியும்” சிறப்பாக வர வேண்டும் என்பதே திமுகவினரின் இப்போதையே ஒரே பிரார்த்தனை என்பது குறிப்பிடத்தக்கது!