விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் இலங்கையைப் பொறுத்த வரையில் எட்டித்தொட முடியாத உயரம் கொண்டவையாக இருந்தாலும், இவற்றின் வருகைகள் எல்லா வேளைகளிலும் உள்நாட்டில் பரபரப்புக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றன.
இலங்கையின் அரசியல் மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் இத்தகைய பாரிய வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.
மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள இலங்கைத் தீவு எப்போதுமே வல்லரசுகளின் கண்களுக்கு உறுத்தலான ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது.
அந்த வகையில், விமானங்தாங்கிப் போர்க்கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் இலங்கையின் துறைமுகங்கள், கவர்ச்சி மிக்க இடங்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு முதல்முறையாக மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், அதன் அதிர்வலைகள் இன்னமும் கூட அடங்கவில்லை.
கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக்கு இடமளிக்கப்பட்டதை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்பவில்லை.
அதன் விளைவு, சீன நீர்மூழ்கிக்கு இடமளித்த மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடிக்கும் வியூகங்கள் வலுப்படுத்தப்பட்டன. முன்கூட்டியே தேர்தல் ஒன்றுக்குச் செல்ல மஹிந்த ராஜபக் ஷ எடுத்து முடிவு, அவருக்கே ஆபத்தாக மாறியது.
மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் சீன நீர்மூழ்கியின் வருகைக்கு முக்கிய பங்கு இருந்ததை மறுக்க முடியாது.
அந்தச் சர்ச்சைகள் இன்னமும் கூட பேசப்படும் ஒன்றாகவே இருக்கின்றன.
மேற்குலக ஆய்வாளர்களும், பாதுகாப்புத்துறை நிபுணர்களும், இலங்கை மீது சீனாவின் நீர்மூழ்கிகளுக்கு இருக்கின்ற ஈர்ப்பை இப்போதும் அச்சத்துடன் வெளிப்படுத்தாமல் விடுவதில்லை.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சீன நீர்மூழ்கிகளுக்கு கொழும்பில் இடமளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், பின்னர், தேவை, சந்தர்ப்பம் கருதி, முடிவெடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும், அதற்குப் பின்னர் சீன நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவில்லை.
ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கடந்த 17ஆம் திகதி சீனக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை போர்க்கப்பல்களான, லியூசோ, சன்யா ஆகியனவும் விரிவான விநியோக கப்பலான குயிங்ஹாய்ஹுவும் கொழும்புத் துறைமுகம் வந்தன.
அவை கொழும்பில் தரித்து நின்ற போது, இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பல்களான சுதர்சினி, தரங்கினி ஆகிய இரண்டும் கொழும்பு வந்திருந்தன. இது சீன கப்பல்களை கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
அவையிரண்டும் மறுநாளே திரும்பி விட, கடந்த வியாழக்கிழமை வரை சீனப் போர்க்கப்பல்கள் மூன்றும் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றன.
அவை புறப்பட்டுச் சென்றபோது தான், இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, நாசகாரி ஏவுகணைப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் மைசூருடன் இணைந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
நேற்று வரை மூன்று நாட்கள் கொழும்புத் துறைமுகத்தில் இந்த இரண்டு போர்க்கப்பல்களும் தரித்து நின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தியக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது, ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா.
44,500 தொன் எடை, 285 மீற்றர் நீளம், 60 மீற்றர் அகலம், 23 அடுக்குகளைக் கொண்டது இந்த நடமாடும் விமானப்படைத்தளம். 110 அதிகாரிகள், 1,500 மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.
முப்பது மிக்–29 போர் விமானங்கள், ஆறு காமோவ்- –31, போர் ஹெலிகொப்டர்கள், சீ கிங், மற்றும் செடெக் கண்காணிப்பு ஹெலிகொப்டர்கள் தரித்து நிற்கும் வசதிகளைக் கொண்ட இந்தப் போர்க்கப்பல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவின் மேற்குப் பகுதியின் பாதுகாப்பில் ஈடுபடும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, மும்பைக் கடற்பரப்பில் தரித்து நிற்பது வழக்கம்.
அடுத்தமாதம் முதல் வாரத்தில் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படை 25 நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து நடத்தவுள்ள பாரிய போர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் கிழக்கு கடற்பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருக்கும் வழியில் தான், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கொழும்பு வந்திருந்தது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்திருந்த போது, அவரது பாதுகாப்புக்காக ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா, கொழும்புக்கு மிகநெருக்கமாக உள்ள கொச்சி கடற்படைத்தளத்துக்கு அருகில் தரித்து நின்றது.
எனினும், இந்தப் போர்க்கப்பல் மேற்கொண்டிருந்த முதல் வெளிநாட்டுப் பயணம் கொழும்புக்கானது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா, விசாகப்பட்டினம் செல்லும் வழியில் கொழும்பு வராமலேயே, இலங்கைத் தீவைச் சுற்றிச் சென்றிருக்கலாம்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் கார்ல்வின்சன், பாரசீக வளைகுடாவில் இருந்து ஹவாயில் உள்ள தளத்துக்குத் திரும்பிச் செல்லும் போது, இலங்கையைக் கடந்தே சென்றிருந்தது. ஆனால், கொழும்புக்கு வரவில்லை.
இலங்கையில் இருந்து 225 கி.மீ தொலைவில் தரித்து நின்ற அந்த அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் அலவி மௌலானா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, அப்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா உள்ளிட்டோர், அமெரிக்க கடற்படை விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
*ஆனால், ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, அவ்வாறு கடந்த செல்லவில்லை, அது கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.
காரணம், கொழும்புத் துறைமுகம் மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவது தான்.
சீனாவின் போர்க்கப்பல்களின் தரிப்பிடமாக கொழும்பை பயன்படுத்த புதுடில்லி அனுமதிக்காது என்பதை வெளிப்படுத்துவதே இந்தியப் போர்க்கப்பலின் வருகையின் முக்கிய நோக்கம்.
சீனப் போர்க்கப்பல்களும், விநியோகத் தேவைக்காக கொழும்பு வரலாம் என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இந்தியாவுக்கு அவ்வளவு திருப்தியானதாக இருக்காது.
1985ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைத் துறைமுகங்களுக்கு எந்தவொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களும் வந்ததில்லை.
கடைசியாக 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்கு நாள் பயணமாக USS Kitty Hawk என்ற அமெரிக்காவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.
49 ஆண்டுகள் அமெரிக்க கடற்படையில் சேவையாற்றிய USS Kitty Hawk கடந்த 2009ஆம் ஆண்டில் தான் சேவையை முடித்துக் கொண்டது.
அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த முதல் விமானந்தாங்கி கப்பல் ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா தான்.
1985ஆம் ஆண்டு USS Kitty Hawk கொழும்பு வந்த போது இருந்து பிராந்திய அரசியல் சூழலுக்கும் இப்போதைய அரசியல் சூழலுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன.
1980களின் முற்பகுதி ஜே.ஆர் அரசாங்கத்துக்கும், அமெரிக்காவுக்கும் மிக நெருக்கமான உறவுகள் இருந்த காலகட்டம்.
அப்போது இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்கலாம் என்ற பரவலான சந்தேகங்களும், அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன
அது இந்தியாவுக்கும் அதன் கூட்டாளியான ரஷ்யாவுக்கும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்த சூழல்.
அந்தக் காலகட்டத்தில், கொழும்புத் துறைமுகத்தில் பாரிய போர்க்கப்பல்கள் தரித்து நிற்கமுடியுமா என்று ஆழம் பார்ப்பதற்காகவே, USS Kitty Hawk கொழும்பு வந்திருந்தது.
அப்போது இரணவிலவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் ஒலிபரப்புக் கோபுரத்தை அமைக்க 1000 ஏக்கர் நிலத்தை ஜே.ஆர் அரசாங்கம் அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது,
இரணவில ஒலிபரப்புக் கோபுரம் மூலம், இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் அமெரிக்க நீர்மூழ்கிகளுக்கு குறைந்த அலைவரிசையில் தகவல்களைப் பரிமாறும் வசதியை அளிக்கும் என்று இந்தியா அச்சம் கொண்டிருந்தது.
அதற்கு முன்னதாக, 1981ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.
அது திருகோணமலையில் அமெரிக்கா தளம் அமைக்கப் போவதான பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அந்த வேளையில் 1981 மே 30ஆம் திகதி வெளியான தி ஹிந்து நாளிதழுக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அளித்த பேட்டியில், எரிபொருள் நிரப்பவும், விநியோகத் தேவைகளுக்காகவும் எந்த நாட்டுக் கப்பல்களும் இலங்கைத் துறைமுகங்களுக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜேஆர். ஜெயவர்த்தன கூறிய அதே நியாயத்தை தான், பின்னர் மஹிந்த ராஜபக் ஷவும் சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வந்த போது கூறியிருந்தார்.
அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களின் பயணங்கள், தான் இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடுகளுக்கு காரணமாயிற்று.
அமெரிக்காவின் பிடியில் சிக்கிக் கொள்வதை தடுக்க இந்தியா தனது காலை இலங்கையில் வைத்தது.
கிட்டத்தட்ட அதேபோன்ற தொரு நிலை தான் 2014ஆம் ஆண்டு சீன நீர்மூழ்கி கொழும்பு வந்த போதும் ஏற்பட்டது. இலங்கையில் சீனா தளம் அமைக்கலாம் என்ற அச்சத்தை அது எற்படுத்தியது.
இந்த முறை இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து நின்றது. சீனாவுக்குப் போட்டியாக இலங்கையில் தளம் அமைக்க இந்த நாடுகள் முனையவில்லை.
அதற்குப் பதிலாக, அத்தகைய வாய்ப்புக்கு இல்லாத சூழலை உள்நாட்டில் ஏற்படுத்த முனைந்தன.
மஹிந்த ராஜபக் ஷவே சீனாவுக்கு இடமளிப்பவராக இருந்ததால், அவர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, சீனாவுக்கு சார்பாக இருந்த சூழல் மாற்றியமைக்கப்பட்டது.
இப்போது இலங்கையில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் சார்பான சூழல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் தான் விக்கிரமாதித்யா கொழும்பு வந்திருந்தது.
சீனப் போர்க்கப்பல்களின் அண்மைய வருகைக்குப் போட்டியாக இதனைக் கருத முடியாவிடினும், சீன நீர்மூழ்கியின் வருகையை இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா சமநிலைப்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை தன் கட்டுக்குள் தான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும் இந்தப் பயணத்தை இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.