ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதற்காக விஷேடமாக வௌிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும், என்றாலும் வௌிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது.

எமது நாட்டில் பக்கச்சார்பற்று சுயாதீனமாக செயற்படும் நீதிமன்றம் இருக்கின்றது. அதேபோல் பக்கச்சார்பற்று செயற்படும் வேறு நிறுவனங்களும் இருக்கின்றன.

எங்களுக்கு தேவையாக இருப்பது நாட்டுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதே.

ஆகவே அந்த விசாரணை நடவடிக்கைகளை தௌிவாகவும் சுயாதீனமானதாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் நீதிமன்றத்தை சுயாதீனப்படுத்தியுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படும் நிலமையயை ஏற்படுத்தியுள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன் தான் ஒருபோதும் திருடர்களையும் மோசடிக்காரர்களையும் பாதுகாக்க கூடியவன் அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version