அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

mahinda-tear

அதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவு

அரசாங்க சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ச கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவருடன் ரொகான் வெலிவிட்ட, நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட நான்கு பேரும், கடுவெல நீதிமன்ற நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version