டைரக்டர் பி.வாசுவின் “வால்டர் வெற்றிவேல்” படம், 200 நாட்கள் ஓடி சத்யராஜூக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது. படம் நூறு நாள் ஓடிய 40 ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்தார், சத்யராஜ்.

டைரக்டர் பி.வாசு தனது அடுத்தடுத்த வெற்றிகளால் முன்னணி இயக்குனர் வரிசைக்கு வந்துவிட்டார். ரஜினி நடிக்கும் “மன்னன்” படத்தை இயக்கவும் வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தை இயக்கும்போதே சத்யராஜ் நடிக்கும் “ரிக்ஷா மாமா” படத்தையும் இயக்கினார்.

பி.வாசுவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் அமைந்தது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“வேலை கிடைச்சிடுச்சு”, “நடிகன்” என 2 படங்களில் என்னை இரண்டு வித கேரக்டர்களில் வெளிப்படுத்திய டைரக்டர் பி.வாசு, குழந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் “ரிக்ஷா மாமா” என்ற படத்திலும் என்னை இயக்கினார்.

படத்தில் நான் ரிக்ஷா ஓட்டும் இளைஞனாக வருவேன், ஒரு பாடல் காட்சியில் “இது யாரு தந்த வண்டி… எம்.ஜி.ஆரு தந்த வண்டி” என்ற வரிகள் வரும்போது, `எம்.ஜி.ஆர்.’ என்ற இடத்தில் என் கண்கள் கலங்குகிற மாதிரி இருக்க வேண்டும் என்றார், டைரக்டர்.

அதனால் அந்த வரிகளுக்கு நான் நடிக்கும்போது கண்களில் `கிளிசரின்’ போட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.

“எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை நன்றியுடன் நினைக்கும்போதே யாருக்கும் கண் கலங்கி விடும். நானும் அவரது அன்புக்குரியவர்களில் ஒருவன்தானே” என்று சொல்லி விட்டேன்.

அந்தக் காட்சி படமாகும்போது நிஜமாகவே என் கண்கள் கலங்கி விட்டன. டைரக்டர் உள்பட யூனிட்டில் உள்ளவர்கள் என்னை இதற்காக பாராட்டியபோது, `இது நடிப்பல்ல. நிஜமான உணர்வு’ என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருந்தார்கள்.

டைரக்டர் பி.வாசு “சின்னத்தம்பி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததால் எனக்கும் உள்ளூர ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது.

சின்னத்தம்பி படத்தின் வெற்றி விழாவுக்காக 50 ஊர்களில் விழா எடுத்தார்கள், டைரக்டர் பி.வாசு, பிரபு-குஷ்பு, டெக்னீஷியன்கள் என ஒரு பெரிய குழுவே இதற்காக ஊர் ஊராக பயணப்பட்டது.

பாண்டிச்சேரியில் நடந்த நூறாவது நாள் விழாவுக்கு நான்தான் தலைமை தாங்கினேன். தியேட்டர்களில் இடம் போதாது

என்பதால் அரசியல் கூட்டங்கள் நடக்கிற கிரவுண்டில் விழா நடத்தினார்கள். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போதே என் மனதிலும் நம்ம படத்துக்கும் இப்படி ஊர் ஊராக விழா, திருவிழாக்கூட்டம் என்று சென்று வர வேண்டும் என்றொரு ஆசை துளிர்விட்டது. மனதின் ஆசைகளுக்குத்தான் எல்லையே இல்லையே!

“ரிக்ஷா மாமா’‘ படம் முடிந்து ரிலீசான அதே நாளில்தான் ரஜினி நடித்த “மன்னன்” படமும் ரிலீசானது. இரண்டுமே பி.வாசுவின் டைரக்ஷனில் உருவான படங்கள். இரண்டுமே வெற்றிப் படங்கள்.

பி.வாசு தனது “என் தங்கச்சி படிச்சவ” படத்தின் வெற்றி விழாவுக்கு என்னையும் விஜயகாந்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார். “வேலை கிடைச்சிடுச்சு” படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார். “நடிகன்” வெற்றி விழாவுக்கு கமல் வந்திருந்தார்.

“ரிக்ஷா மாமா’‘ வெற்றி விழாவின்போது பல ஜாம்பவான்களை அழைக்க இயக்குனர் விரும்பினார், டைரக்டர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா மூவரையும் அழைத்து `விழா’வுக்கு தனி சிறப்பு சேர்த்தார்.

“ரிக்ஷா மாமா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தாயார் பெயரில் `கமலம் மூவிஸ்’என்ற பட நிறுவனத்தை பி.வாசு தொடங்கினார்.

எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களிடம் அவர் மாதிரியே தாய்ப்பாசமும் அதிகமாக இருக்கும். வாசுவின் அப்பா எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக இருந்தவர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு அவர்களுக்கு நல்ல ஐக்கியம் இருந்தது.

எம்.ஜி.ஆர். தனது தாயாரை எந்த அளவுக்கு போற்றி மகிழ்ந்தார் என்பது தெரிந்ததால், வாசு தனது பட நிறுவனத்துக்கு தாயார் பெயரை வைத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

பி.வாசு இப்படி சொந்த கம்பெனி தொடங்கி தயாரிக்கும் முதல் படத்திலேயே என்னை ஹீரோவாக போட விரும்பியது எனக்கு மகிழ்ச்சி தந்தது.

என்னிடம் 3 கதைகளின் `அவுட்லைன்’ சொன்னார். “இதில் எந்தக் கதை பிடிக்கிறதோ அதை பண்ணுவோம்” என்றார். மூன்றுமே பிடித்திருந்தாலும், போலீஸ் அதிகாரி பின்னணியில் அமைந்த கதை அதிகம் ஈர்க்க, அதை என் விருப்பமாக சொன்னேன். அதுதான் “வால்டர் வெற்றிவேல்”.

படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார் வாசு. ரஜினி கிளாப் அடிக்க, விஜயகாந்த் முதல் காட்சியை இயக்கினார், பிரபு கேமராவை `ஆன்’ பண்ணினார்.

முதல் நாள் படப்பிடிப்பில் பி.வாசுவின் அப்பாவும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான மேக்கப்மேனாக இருந்தவருமான பீதாம்பரம் தான் எனக்கு `பொட்டு’ வைத்தார்.

மேக்கப் போடும் முன்னாக இப்படி பொட்டு வைப்பது வழக்கம். பொட்டு வைக்க அவர் விரல் என் நெற்றியைத் தொட்டபோது எனக்குள் ஒரு சிலிர்ப்பு. எத்தனை தடவை மேக்கப் போடுவதற்காக எம்.ஜி.ஆரை தொட்ட கை!

இந்த காலகட்டத்தில், படித்த பெண்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அமைந்த சுகன்யாவும் படித்தவர். வெளிநாடுகளிலும் பரத நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். அதோடு எனக்கு கிடைத்த இன்னொரு உயரமான

இந்தப் படத்தின் ஒரு காட்சி ரொம்பவே உருக்கமானது. பார்வையற்ற என் மனைவி, எதிரிகள் சதியால் குழந்தைக்கு விஷம் கலந்த புட்டிப்பாலை கொடுத்து விடுவார். இதனால் குழந்தை இறந்து போகும்.

இந்தக் காட்சியில் நான் மனம் உடைந்து கதறி அழ வேண்டும். டைரக்டர் `ஸ்டார்ட்’ சொன்னதும், கேமரா ஓடத் தொடங்கியது. குழந்தை இறந்தது தெரிந்ததும் சுகன்யா கதற, நான் அழ, கேமரா ஓடிக் கொண்டிருந்தது.

காட்சி முடிந்தும் டைரக்டர் பி.வாசு `கட்’ சொல்லவில்லை. அந்தக் கேரக்டருக்குள் கரைந்து போயிருந்ததால், எனக்கும் தொடர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருப்பது தெரியவில்லை.

திடீரென பி.வாசு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டபோதுதான், காட்சி படமாகி முடிந்து விட்டதை தெரிந்து கொண்டேன்.

வாசு கண்களிலும் கண்ணீர். இதன் பிறகே அவர் `கட்’ சொல்ல, கேமராமேன் கேமராவின் இயக்கத்தை நிறுத்தினார். கேமராமேன் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சிவாஜி நடிப்பில் இன்றைக்கும் மறக்க முடியாத படம் “பாசமலர்”. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை சாவித்திரியை தனது பார்வையற்ற நிலையில் சந்திப்பார்.

அப்போது சிறுவயதில் தங்கையின் பாசத்துக்குரிய அண்ணனாக பல விஷயங்களை நினைவுபடுத்துபவர், கடைசியில் உள்ளம் உடைந்து “கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு” என்று பாடும்போது டைரக்டர் பீம்சிங் `கட்’ சொல்லவும் மறந்து, அவரும் பிழியப் பிழிய அழுதிருக்கிறார்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் ஒப்பற்ற நடிப்புக்கு சான்றான இந்த சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது இந்த மாதிரி ஒரு சம்பவம், நான் நடித்த படத்திலும் நேர்ந்தபோது, எனக்கு `பாசமலர்’ சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.

`வால்டர் வெற்றிவேல்” படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினேன் என்றாலும், எங்கள் கணிப்பையும் தாண்டி 200 நாட்கள் ஓடியது.

சின்னத்தம்பி படத்தின் வெற்றி ïனிட் ஊர் ஊராகப் போய் விழா நடத்தியது போல, எனது படத்துக்கு எப்போது `அப்படியான விழா’ அமையும் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே, அந்த ஆசையை வாசுவின் இந்தப் படமே நிறைவேற்றி வைத்தது.

40 ஊர்களில் நூறு நாள் தாண்டி ஓடியிருந்ததால், சின்னத்தம்பி ïனிட் மாதிரியே எங்கள் குழுவும் ஊர் ஊராக ஏ.சி. கோச்சில் பயணப்பட்டது. எல்லா ஊர்களிலுமே திருவிழாக் கூட்டம் போல கூடிய ரசிகர்களை சந்தித்தபோது எனக்குள்ளும் அப்படியொரு மகிழ்ச்சி… நெகிழ்ச்சி”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

தொடரும்…

நடிகன் படத்தில் மனோரமாவுக்கு ஜோடியாக சத்யராஜ்(சினிமா தொடர் -17)

Share.
Leave A Reply

Exit mobile version