இன்று ரெலோ நாளை??
ரெலோவை தடைசெய்துவிட்டதாக புலிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய இயக்கங்களையும் யோசிக்க வைத்து விட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக்கெதிராகவும் புலிகள் திரும்பலாம் என்று நினைக்கவே செய்தன.
ரெலோ இயக்கத்தை இந்தியாவின் கைக்கூலிகள் என்று கூறியே தமது தடைக்கான பிரசாரம் செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.
ரெலோவுக்கு அடுத்ததாக இந்திய அரசோடு நெருக்கமாக இருந்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். எனவே, ரெலோமீது காட்டப்பட்ட குற்றச்சாட்டு தமக்கெதிராகவும் காட்டப்படலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். நினைத்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலதிபர் க.பத்மநாபா அப்போது தமிழ்நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் பிரச்சனை காரணமாக இரண்டு துருவங்களாக இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் பத்மநாபாவோடு நின்றவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவோடு இருந்தவர்கள் மீது ஒரு சந்தேகம் இருந்தது.
கிட்டுவோடு டக்ளஸ் தேவானந்தா நட்பாக இருப்பதால் ரெலோவுக்கு உதவி செய்ய விரும்பமாட்டார் என்நு நினைத்து விட்டார்கள்.
டக்ளஸ் தேவானந்தா தனது வாகனம் மூலமாகவே நூற்றுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மானிப்பாயில் இருந்த பிரதான முகாமில் புகலிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அப்படிச் செய்தாலும்கூட ரெலோ தலைமைக்கு டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்புக் கொடுக்க விரும்பமாட்டார் என்றே ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்குள் இருந்த மறுசாரார் நினைத்துக் கொண்டிருந்தனர்.
விதிக்கப்ட்ட தடையும் புலிகள் நடத்திய கண்காட்சியும்
ரெலோவின் பிரதான முகாமில்தான் ரெலோத் தலைவர் சிறீசபாரெத்தினம் தங்கியிருந்தார்.
புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாள் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் தீரத்துடன் சண்டையிட்டனர்.
முதலில் அது ஒரு தற்காலிக மோதல் என்றுதான் சிறீசபாரெத்தினமும் முதலில் நினைத்தார்.
சண்டை தொடர்ந்த தீவிரமும், கிடைத்த தகவல்களும் புலிகள் இறுதித் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிவிட்டதை உணர்த்தத் தொடங்கின.
அதனால் சிறீசபாரெத்தினமும் தனது முக்கியமான பாதுகாவலர்களுடன் வேறு இடத்துக்கு தப்பிச்செல்ல தீர்மானித்தார்.
அதற்கிடையே சிறீசபாரெத்தினத்தின் நம்பிக்கையான ஆள் ஒருவர் மூலமாக பத்மநாபாவோடு தொடர்பு கொள்ளப்பட்டது.
ரெலோவோடு சேர்ந்து புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எஃப். களத்தில் இறங்கியிருந்தால் மோதல் தீவிரமாகியிருக்கும்.
ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள்ளே இருபிரிவுகளாக இருந்தமையால் அதைப்பற்றி யோசிக்கவே இயலவில்லை.
சிறீசபாரெத்தினத்துக்கு பாதுகாப்பு வழங்க பத்மநாபா ஒப்புக்கொண்டார்.
கல்வியங்காட்டில் இருந்து சிறீசபாரெத்தினத்தை வெளியே கொண்டுவந்து பாதுகாப்பான இடத்;தில் தங்கவைப்பது.
பின்னர் தமிழ்நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வது என்பதுதான் திட்டம்.
சிறீசபாரெத்தினம் தப்பிச் சென்றால் ஆபத்து. ரெலோ மீண்டும் பலமாகிவிடும். அதனால் சிறீசபாரெத்தினத்தை தப்பவிடக் கூடாது என்று புலிகள் உறுதியாக இருந்தார்கள்.
கல்வியங்காட்டிலிருந்து சிறீசபாரெத்தினம் தப்பிச்செல்ல முடியாதளவுக்கு புலிகள் இயக்க உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்படியிருந்தும் சிறீசபாரெத்தினம் தனது நம்பகமான மெய்ப்பாதுகாவலர்களுடன் கல்வியங்காட்டில் இருந்து தப்பிவிட்டார்.
ரெலோவின் பிரதான முகாமை புலிகள் கைப்பற்றியபோது அங்கு சிறீசபாரெத்தினத்தை இறந்த உடல்கள் மத்தியில் தேடிப்பார்த்து ஏமாந்து போனார்கள்.
சிறீசபாரெத்தினம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களால் கோண்டாவில் அன்னங்கை என்னுமிடத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார்.
ஆனால், இந்த விடயம் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியவே தெரியாது.
டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கச் சென்றார் கிட்டு.
“சிறீசபாரெத்தினத்துக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“சாதாரண உறுப்பினர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறோம். தலைமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர்கள் கேட்டால் யோசிக்கலாம்.” என்றார் டக்ளஸ் தேவானந்தா.
ரெலோவை தாம் ஏன் தடை செய்ய வேண்டி வந்தது என்று விளக்கினார் கிட்டு.
“முதலில் ஒரு பாடம் படிப்பிக்கத்தான் நினைத்தோம். அவர்களிடம் இருந்து எதிர்ப்பு இல்லையென்பதால் பூரணமாக முடித்து விடலாம் என்று தீர்மானித்தோம்” என்று டக்ளஸ் தேவானந்தாவிடம் சொன்னார் கிட்டு.
மரச்சட்ட அடி
ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மோகன். ஒபரோய் தேவனின் சகோதரர். பறுவா மோகன் என்றும் அவரை அழைப்பார்கள்.
அவர்மீது கிட்டுவுக்கு முன்னரே கோபம் இருந்தது. அதனால் தானே நேரடியாகச் சென்று மோகனை மரச்சட்டத்தால் அடித்து நொறுக்கினார்.
“சிறீசபாரெத்தினம் எங்கே?” என்று கேட்டு மோகனை துவைத்தெடுத்தார்கள்.
கைது செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் அனைவரையும் புலிகளது உளவுப்பிரிவினர் விசாரணை செய்தனர்.
விசாரணைக்குப் பொறுப்பாக இருந்தவர் வாசு. அவர்தான் அப்போது உளவுப்பிரிவுக்கு யாழ் மாவட்டத்தில் பொறுப்பாக இருந்தவர்.
வாசுவே நேரடியாக பலரை விசாரணை செய்தார். மரச்சட்டத்தால்தான் அடிப்பார். தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டவர்கள் மரச்சட்டத்தால் அடிவிழும்போது உரத்துக் கத்துவார்கள். ‘கத்தாதே’ என்று அடி தொடரும்.
மக்களின் பாதுகாப்பு
புலிகளிடமும் பிடிபடாமல், ஏனைய இயக்கங்களிடமும் புகலிடம் கேட்காமல் பொதுமக்களது பாதுகாப்பில் பல ரெலோ உறுப்பினர்கள் உயிர் தப்பினார்கள்.
இயக்கங்கள் தமக்குள் சண்டை போடுவதை மக்கள் விரும்பவில்லை.
“எல்லோரும் எங்கள் பிள்ளைகள்தானே. போராட வந்தவர்கள்தானே” என்று சொல்லி தமது வீடுகளில் தங்கவைத்தார்கள்.
ஆனால் ரெலோ பலமாக இருந்தபோது அதனை விழுந்து விழுந்து ஆதரித்த சிலர் கட்சி மாறினார்கள்.
புலிகள் இயக்கத்தினருக்கு கொக்காகோலா கொடுத்து ரெலோ மீதான வெற்றியில் தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததுதான் வேடிக்கை.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.
யாழ்ப்பாணம் இருபாலை சந்திக்கருகில் ஒரு தேநீர் கடை இருந்தது. இந்தக் கடையில்தான் ரெலோ உறுப்பினர்கள் வாடிக்கையாக சாப்பிடுவார்கள்.
கூடக்குறைய கணக்குச் சொன்னாலும் பணம் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவரும் தன்னை ஒரு ரெலோ ஆதரவாளராகவே காட்டிக்கொண்டிருந்தார்.
ரெலோவை புலிகள் தாக்கிவிட்டு, இருபாலை சந்திக்கு அருகிலும் டயர் போட்டு கொளுத்திக்கொண்டிருந்தார்கள்.
ரெலோ உறுப்பினர்கள் டயரில் எரிந்து கொண்டிருந்தார்கள்.
அந்த தேநீர் கடை உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு களைப்புத்தீரு சுடச்சுட தேநீர் தயாரித்து வழங்கிக்கொண்டிருந்தார்.
அதேவேளை மற்றொரு சம்பவம்ஃ
நல்லூரில் இருந்தது அவர்கள் வீடு. இரண்டு பிள்ளைகளும் புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள். மறைய இடம்தேடிச் சென்ற ரெலோ உறுப்பினர்களுக்கு அந்த விஷயம் தெரியாது.
தமது வீட்டில் அவர்களை தங்க வைத்தது அந்தக் குடும்பம்.
ரெலோ இயக்க உறுப்பினர்கள் இருவர் வீட்டில் மறைந்திருப்பது தமது பிள்ளைகளுக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் அந்த வீட்டார்.
விடைபெறும்போதுதான் ரெலோ உறுப்பினர்களுக்கே விஷயம் தெரிந்தது. விழிகளில் கண்ணீரோடு நன்றி சொன்னர்கள். அதற்கு அந்த வீட்டார் சொன்னார்கள்: “தம்பிமார், நீங்களும் எங்கள் பிள்ளைகள்தானே”.
ரெலோவை சரணடையுமாறு புலிகள் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
இலங்கை வானொலியில் பணியாற்றிய கே.எஸ்.ராஜா பணியால் விலக்கபட்டு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.
ரெலோவை சரணடையுமாறு ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு கூறி கார் ஒன்றில் அவரை ஏற்றி விட்டார்கள் புலிகள். தனது வழக்கமான பாணியில் கே.எஸ். ராஜா அறிவிக்கத் தொடங்கினார்.
சிறீசபாரெத்தினத்தை பளையில் உள்ள தாழையடி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார் பத்மநாபா.
பளைக்கு செல்வதற்கு இடையில் புலிகளது சோதனை அரண்களை தாண்ட வேண்டியிருக்கும்.
யாழ்ப்பாணத்திலிருந்து சிறீசபாரெத்தினம் தப்பிச்சென்றுவிடலாம் என்பதால் யாழ்ப்பாணக் கடலோரங்களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறும் தரைப்பாதைகளிலும் கடும் கண்காணிப்பில் ஈ.டுபட்டிருந்தனர்.
சகல வாகனங்களையும் மறித்து சோதனையிட்டனர்.
டக்ளஸ் தேவானந்தாவும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சென்ற வாகனமொன்றை புலிகள் மறிக்க முற்பட்டதில் பிரச்சனை எழுந்தது.
“எமது வாகனங்களை மறிக்கக்கூடாது. மறித்தால் பிரச்சனை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று சொல்லிவிட்டார் டக்ளஸ் தேவானந்தா.
அப்போது டக்ளஸ் தேவானந்தாவின் வேனுக்குள் அவரது மெய்ப்பாதுகாலர்களுடன் நான்கு ரெலோ உறுப்பினர்களும் இருந்தனர்.
வேறு வழியின்றி புலிகள் வழிவிட்டனர். டக்ளஸ் தேவானந்தா ஆட்களோடு பிரச்சனைப்பட வேண்டாம் என்று கிட்டுவும் உத்தரவிட்டிருந்தார்.
இடையில் ஒரு தடவை தாழையடிக் கடற்கரையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் படகு ஒன்று தமிழ்நாட்டுக்கு செல்ல ஆயத்தமானது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களோடு, ரெலோ உறுப்பினர்களும் படகில் ஏற்றப்பட்டனர். புலிகளுக்கு எப்படியோ செய்தி கிடைத்துவிட்டது.
குறிப்பிட்ட இடத்துக்கு வந்த புலிகள் அந்த படகில் இருப்பவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
அதே தாழையடி கடல் மார்க்கமாகத்தான் சிறீசபாரெத்தினத்தையும் ஏற்றி அனுப்பத் திட்டமிடப்பட்டது.
சுற்றி வளைப்பு
டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் செய்யவேண்டியிருந்தமையால் தாமதங்கள் ஏற்பட்டன.
ஒரு சவப்பெட்டி செய்து, அதற்குள் சிறீசபாரெத்தினத்தை படுக்கவைத்து கொண்டு செல்ல ஏற்பாடு நடந்தது. சவப்பெட்டியும் தயாராகிவிட்டது.
இடையில் புலிகள் மறித்தால் தமது உறுப்பினரது உடலைக் கொண்டு செல்வதாகக் கூறிவிடலாம் என்பதுதான் நோக்கம்.
இந்த ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தபோது, சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த இடத்தை புலிகள் கண்டுபிடித்து விட்டனர்.
கிட்டுவின் தலைமையில் சென்ற புலிகளது அணி கோண்டாவிலில் அன்னங்கையில் இருந்த வீட்டைச் சுற்றிவளைத்தது.
எதிர்த்துப் போராடுவதில் பலன் இல்லை. முதலில் நிலமையைச் சமாளிக்க வேண்டும் என்று சிறீசபாரெத்தினம் நினைத்தாரோ என்னவோ, வீட்டைவிட்டு வெளியே வந்தார்.
கிட்டுவை நோக்கி சிறீசபாரெத்தினம். “நாங்கள் பிரச்சனையைப் பேசித் தீர்கக்லாம்” என்று சொன்னார்.
கிட்டு பதிலேதும் சொல்லவில்லை. சுடத்தொடங்கினார்.
சிறீசபாரெத்தினமும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
சிறீசபாரெத்தினத்தின் உடலை தூக்கிக் கொண்டு புலிகள் சென்றுவிட்டனர்.
அதனையடுத்து ஒலிபெருக்கி பூட்டிய கார்களில் புலிகள் அறிவித்த செய்தி இது:
“இந்திய கைக்கூலிகளான ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் இன்று நடைபெற்ற மோதலில் மோதலில் கொல்லப்பட்டார். ரேலோ உறுப்பினர்கள் எம்மிடம் வந்து சரணடைந்தால் மன்னிப்பு வழங்கப்படும்.”
கண்டனங்கள்
சிறீசபாரெத்தினம் கொல்லப்பட்டதை ஏனைய இயக்கங்கள் யாவும் கண்டித்தன.
யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. பல நூற்றுக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.
சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். வெளியிட்டது.
ஏனைய இயக்கங்கள் பத்திரிகை அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டன.
தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சிறீசபாரெத்தினம் பலியான செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.
முரசொலி பத்திரிகையில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் “எனது நெஞ்சில் இருந்து இரத்தம் வடிகிறது” என்று தனது வேதனையை வடித்திருந்தார். புலிகளையும் கண்டித்திருந்தார்.
விளக்கம் சொல்லப்பட்டது.
ரெலோ உறுப்பினர்களை டயரில் போட்டு எரித்தது ஏன்? என்று கிட்டுவிடம் பலரும் டேடார்கள்.
“சண்டைகளில் இது சகஜம். மறு தரப்பை அச்சமடையச் செய்வதற்கு இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.
இங்கே இது புது அனுபவம் என்பதால் அதிர்ச்சியடைகிறீர்கள்” என்று விளக்கம் சொன்னார் கிட்டு.
யாழ்ப்பாணம் நல்லூரில் புலிகள் ஒரு கண்காட்சி நடத்தினார்கள்.
ரெலோ பாவித்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
ரெலோவால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் என்று தொலைக்காட்சி பெட்டிகள், வீடியோ டெக்குகள், தங்க நகைகள் போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன.
உரியவர்கள் வந்து அடையாளம் காட்டி பெற்றுச் செல்லலாம் என்று அறிவித்தார்கள்.
ரெலோவால் கொள்ளையிடப்பட்டதாக கூறி பார்வைக்கு வைக்கப்பட்ட பொருட்களில் ஒரு பகுதி புலிகள் இயக்கத்தின் வசம் இருந்தவை என்பது கிட்டுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
ரெலோ தடைசெய்யப்பட்டதையும், ரெலோ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நியாயப்படுத்த புலிகள் செய்த ஏற்பாடுதான் அந்தக் கண்காட்சி.
ரெலோவின் கல்வியங்காட்டு முகாமில் பெருந்தொகையான ஆயுதங்கள் இருந்தன. அத்தனையையும் புலிகள் கைப்பற்றினார்கள்.
ஐந்து பிரதான இயக்கங்களில் ஒன்று அதிலொரு இயக்கத்தாலேயே தடை செய்யப்பட்டது,
நான்கு இயக்க ஒற்றுமையும் ஈழத் தேசியவிடுதலை முன்னணியும் (ENLF) ரெலோவுக்கு விதிக்கப்பட்ட தடையோடு முடிந்த கதையாகியது.
கைகோர்த்து நின்ற நான்கு இயக்க தலைவர்களில் ஒருவர் சக இயக்கத்தாலேயே கொல்லப்பட்டார்.
ஈழப்போராளி அமைப்புக்களது முதலாவது ஒற்றுமை முயற்சி முறிந்த கதையும் அதுதான்.
(தொடர்ந்து வரும்)