வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது.
சத்விருகம என்பது, நல்லிணக்கக் கிராமம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. ஆனால், தமிழில் அந்தப் பெயர் நிலைக்கப் போவதில்லை.
ஏனென்றால், ஏற்கெனவே, கொக்குவெளி என்று தமிழில் அழைக்கப்பட்ட கிராமம் தான், தற்போது கொக்கெலிய என்று சிங்களப் பெயரில் அழைக்கப்படுகிறது.
மாமடு குளத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், இப்போது புதிய சிங்களக் கிராமங்களாகப் பிறப்பெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதிகளும் காணிகளும் இதற்குள் விழுங்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சத்விருகம என்ற பெயரில் உருவாக்கப்படும் நல்லிணக்கக் கிராமம் கூட, வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு வழிகோலும் மற்றொரு நடவடிக்கை தான்.
80 வீடுகளைக் கொண்டதாக இந்த சத்விருகம உருவாக்கப்படுகிறது.
இப்போது இங்கு 51 வீடுகள் மாத்திரம் அமைக்கப்பட்டுள்ளன. தலா 40 பேர்ச் காணிகளுடன் அமைக்கப்படும் இந்த வீடுகளின் பெறுமதி கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாய்.
இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது, இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு தான். இராணுவத்தின் ஊடாகவே இந்த நல்லிணக்கக் கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு மாகாணசபையின் கடைசி அமர்வின் போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டமும் நடத்தப்பட்டது. அதுபற்றிய செய்திகள் ஆங்கில ஊடகங்களில் வேறு விதமாக வெளியாகியிருந்தன.
நல்லிணக்கக் கிராமத்தை அமைப்பதற்கு, வடக்கு மாகாணசபை எதிர்ப்பு என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
நல்லிணக்க கிராமத்தை திறந்து வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், ஏன் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்பது பற்றிய விரிவான தகவல்கள் ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகவில்லை.
அதேவேளை, நல்லிணக்கக் கிராமத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் கூட அதுபற்றிய தெளிவான புரிதல்கள் இருக்கவில்லை.
வவுனியாவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள இந்த நல்லிணக்கக் கிராமத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
இந்தக் கிராமத்தில், தற்போது அமைக்கப்பட்டுள்ள 51 வீடுகளில் அனைத்துமே, இராணுவத்தினரின் குடும்பங்களுக்குத் தான் வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில் பார்க்கும் போது, இதை ஓர் இராணுவக் கிராமம் அல்லது இராணுவக் குடியிருப்புத் தொகுதி என்று தான் அழைக்கப்பட வேண்டும்.
அவ்வாறாயின், ஏன் இதனை சத்விருகம அல்லது நல்லிணக்கக் கிராமம் என்று அரசாங்கம் அழைக்கிறது என்றால், அதிலும் ஓர் அரசியல் உள்ளது.
இப்போதைய சூழலில் நல்லிணக்கம் என்ற விடயத்துக்குத் தான் மவுசு அதிகம். அதனால் இதனை வைத்து பிரதான இலக்கை எட்டுவதற்கு முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
வடக்கில் ஓர் இராணுவக் குடியிருப்பு அமைக்கப்படுகிறது என்பதை மறைப்பதற்காக, அதனை நல்லிணக்கக் கிராமம் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள் அவ்வளவு தான்.
நல்லிணக்க கிராமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, இங்கு அமைக்கப்பட்டுள்ள 51 வீடுகளில் ஒன்று, தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்த இராணுவச் சிப்பாய்க்கு வழங்கப்படவுள்ளது.
அதைவிட, இராணுவத்தில் இணைந்து பணியாற்றும் ஏழு தமிழ்ப் பெண்களின் குடும்பத்தினருக்கும் வீடுகள் வழங்கப்படவுள்ளன.
புங்குடுதீவில் தாம் வசிப்பதற்கு அஞ்சுவதாகவும், வவுனியாவுக்குச் சென்று விடப் போவதாகவும், வித்தியாவின் தாய் தெரிவித்திருந்தார்.
அப்போது தான், அவர்களுக்கு வவுனியாவில் வீடு ஒன்றைப் பெற்றுத் தருவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆனால், வவுனியாவில், அவர்கள் எதிர்பார்த்த வீடு, இராணுவக் குடியிருப்புக்குள் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
எனவே, இந்த வீட்டை வித்தியா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்களா, அங்கு வசிக்கச் செல்வார்களா என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும், இங்கு குடியமரப்போகும் தமிழ்க் குடும்பங்கள் அதிகபட்சம் எட்டாகவே இருக்கும். எஞ்சியவர்கள் பெரும்பாலும் சிங்களக் குடும்பங்களாகவே இருக்கும் என்ற நம்பப்படுகிறது.
தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றாக, ஒரே கிராமத்துக்குள் குடியமர்த்தி விட்டால் நல்லிணக்கம் வந்து விடுமா? இலங்கையின் பல பகுதிகளில் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்து வாழ்கின்ற போதும், இதுவரையில் நல்லிணக்கச் சூழல் ஏற்பட்டு விடவில்லை.
எனவே, இதுவொரு தப்பான கோட்பாடாகவே இருக்கும். ஒரே கிராமத்திலும் நகரத்திலும் மட்டுமன்றி, ஒரு வீட்டுக்குள் வாழ்ந்தாலும் கூட நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது, பரஸ்பரம் நம்பிக்கையும் சந்தேகமற்ற நிலையும் முதலில் அவசியமானது.
நல்லிணக்க கிராமத்துக்குள் இருப்பவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டால் மட்டும் போதாது, அதனைச் சுற்றியிருக்கும் கிராமங்களுடனும் அது ஏற்பட வேண்டும்.
அவ்வாறானதொரு நல்லிணக்கச் சூழலுக்கு இந்த சத்விருகம கிராமம் வழியமைக்கும் நிலையில் இருக்கவில்லை என்பதே முக்கியமான பிரச்சினை.
நல்லிணக்கக் கிராமத்தில் இனரீதியான பாரபட்சம் காட்டப்படவில்லை என்றும், இனவிகிதாசாரம் மீறப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் சரத் சந்திரசிறி விதான தெரிவித்திருந்தார்.
இந்த வீடுகள் எந்த இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமான கேள்வி.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மாகாணத்தில், தேசிய இனவிகிதாசாரத்தின் அடிப்படையில், வீடுகளை ஒதுக்குவது எந்த வகையில் நியாயமானது?
இங்கு இனவிகிதாசாரம் பேணப்படுகிறது என்பது, மறைமுகமான ஒரு சிங்களக் குடியேற்றமேயாகும்.
வடக்கு மாகாணத்தில் குடியேற்றங்களை மேற்கொள்ளும் போது, வடக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரமே பின்பற்றப்பட வேண்டும்.
ஆனால், நல்லிணக்கக் கிராமம், தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான நவீன முறையொன்றையே அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாகவும், ஆதங்கமாகவும் இருந்து வருகின்ற ஒரு விடயம், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டமையாகும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், இனப்பரம்பலும் மாற்றியமைக்கப்பட்டது.
கிழக்கில் தமிழர்கள் மூன்றாவது இனமாக மாற்றப்படும் அளவுக்கு இந்தக் குடியேற்றங்களின் விளைவுகள் அமைந்திருந்தன.
வடக்கிலும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரம் பெற்றிருந்தன.
போர்க்காலத்தில் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில், தமிழர்களின் பூர்வீகக் காணிகள் இப்போது சிங்களக் குடியேற்றங்களாக மட்டும் மாறவில்லை, தமிழர்களின் வயல் நிலங்கள் கூட, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொக்கிளாய், நெடுங்கேணி, போன்ற பிரதேசங்களில், இந்த நிலை காணப்படுகிறது. போர்க்காலத்தில் தமிழர்கள் வாழமுடியாதிருந்த சூழலிலும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதிகள் அரச மற்றும் இராணுவ அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் கைமாறியிருக்கின்றன.
இதனால், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில், சிங்களக் குடியேற்றங்கள் குறித்த அச்சம் எல்லைப்பகுதி தமிழ்க் கிராமங்களில் பரவலாகவே காணப்படுகிறது.
இப்படியொரு சூழலில் தான், தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பில், அயலில் தமிழ்க் கிராமங்கள் சூழ்ந்துள்ள கொக்கெலியவில், நல்லிணக்கக் கிராமத்தை இராணுவம் உருவாக்கியிருக்கிறது.
அயலில் உள்ள கிராம மக்களை அச்சத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்கும் வகையில் தான் இந்த நல்லிணக்க கிராமம் உருவாக்கப்படுகிறதென்றால், எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட முடியும், தெற்கிலுள்ள மக்களிடம் இருந்தே நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, நல்லிணக்கக் கிராமங்களை வடக்கில் உருவாக்க அனுமதி கொடுத்தது எப்படி?
வடக்கில், ஏற்கெனவே இராணுவக் கிராமங்களை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், எதிர்ப்புகளினால் அவை கைவிடப்பட்டன. ஆனால், இராணுவ முகாம்களை சார்ந்து அமைக்கப்படும் இராணுவக் குடியிருப்புகளை விடவும்,
சத்விருகம போன்ற கிராமங்களை அமைப்பதன் மூலம், உருவாக்கப்படும் நிரந்தரமான குடியேற்றங்கள் ஆபத்தானவை.
நிரந்தரமாகவே தமிழர்களின் நிலத்தை அபகரிக்கவும், இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் இவை காரணமாகி விடும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இதுபோன்ற குடியிருப்புகள், குடியேற்றங்கள், வவுனியாவுக்கு கிழக்கிலும் வடகிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பினாலும் இராணுவ நிகழ்ச்சிநிரலாக இது முன்னெடுக்கப்படுவதால் அரச அதிகாரிகள் மௌனமாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.
இப்போது நல்லிணக்கக் கிராமம் என்ற பெயருடன், வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படும் போது, வடக்கு மாகாணசபை இதனை வெறும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடப் போகிறதா, தமிழ் மக்களின் பிரதிநிதிகள், பலவேளைகளில் தூங்கிப் போய் விடுகின்றனர். வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர், விழித்துக் கொண்டுள்ள அவர்களால் இனி என்னதான் செய்ய முடியும்?
– சஞ்சயன்-