தமிழ்த் தேசிய இனம் மக்களுக்குரித்தான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சியை நிறுவும் வகையிலும் சமஷ்டித் தத்துவம் மற்றும் கோட்பாட்டின் படி அரசியல் தீர்வுத் திட்டம் உருவாக்கப்படவேண்டும்.
அத்துடன் நாட்டில் தோட்டத் தொழிலாளர் எனும் சொல்லாட்சி மாற்றப்பட்டு தமிழ் மக்கள் எனும் சொல்லாட்சி கடைப்பிடிக்கப்படவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மேதினக் கூட்டம் நேற்றுமுன்தினம் சுன்னாகம் மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மே தினப் பிரகடனமாக இருபது கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதற்கமைய, தமிழினப் பிரச்சினைக்குத் தீர்வு
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழினப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததனால் நடைபெற்று வந்த போராட்டங்களினால் இந்த நாடு குறிப்பாகத் தமிழ்த் தேசிய இனம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்துவிட்டது. அதன் விளைவுகள் தொடர்கின்றன.
அதன் விளைவுகள் குறிப்பாக சர்வதேச, இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 2012, 2013, 2014, 2015 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் ஒரு தீர்வை காண்பதற்குத் சர்வதேச சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
இலங்கையின் 2015ஆம் ஆண்டின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அரசு ஐ.நா. சாசனப்படியான மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டுத தீர்மானத்தை சர்வதேசத்துடன் இணைந்து உருவாக்கி இருந்தது.
இதனாலும் அதனை நிறைவேற்றக் கடப்பாடும் கொண்டிருப்பதால் இக்கால சந்தர்ப்பத்தில் சர்வதேச இராஜதந்திர அனுசரணையை கருத்திற்கொண்டு இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களுக்குரித்தான, பிறப்புரிமையான இறைமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசிய இனம் மக்களுக்குரித்தான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு, கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சியை நிறுவும் வகையில் சமஷ்டித் தத்துவம் மற்றும் கோட்பாட்டின் படி அரசியல் தீர்வுத் திட்டம் உருவாக்கப்படவேண்டும். எனத்திடசங்கற்பத்துடன் வற்புறுத்துகின்றோம்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களுக்கும் அப்பிரதேசமே தாயகமாகும் என்பதை ஏற்றுக் கொண்டு அம் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அம்மக்களின், அங்கீகாரம் பெற்றுள்ள பிரதிநிதிகளுடன் ஏற்படும் இணக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றையும் அங்கீகரிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
மீள்குடியேற்றமும் நிலமீட்பும்
மீள் குடியேற்றம் முழுமையாக நிறைவேற்றவும் தமிழர் நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு நீக்கப்படவும் வேண்டும்.
போர் காரணமாக அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.
2015 ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தின்படியும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆட்சிமாற்றத்திற்கான ஜனநாயக சக்திகள் மக்களுக்கு வாக்களித்தவாறும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவாறும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட்டு நிலத்திற்கு உரித்தானவர்களிடம் உடன் கையளிப்பதற்குக் காலதாமதமின்றி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றோம்.
அத்துடன் சொந்த நிலங்களற்ற அங்கு வாழ்ந்த தமிழ், முஸ்லிம் பெற்றோரின் புதிய சந்ததியினருக்கு நிலங்கள் வழங்கவும் அவர்களுக்கான வாழ்வுரிமையை அங்கீகரித்து அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றோம்.
புனர்நிர்மாணமும் அபிவிருத்தியும்
போரினால் அழிந்து போன குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசம் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் என்பதுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதார நிபுணத்துவம் பயன்படுத்தப்பட்டு பாரிய, மத்திய, தொழில்துறைகள் சிறு தொழில்துறைகள் உருவாக்கப்படுவதற்கு முதலீடுகள் பெறப்படவேண்டும்.
அதற்குப் புலம்பெயர்ந்த மக்கள் பங்களிப்பும் பயனுறுத்தவேண்டும்.
அதற்குத் தேவையான பொருளாதார நிபுணத்துவம் மிக்கவர்கள் மத்திய அரசுப் பிரதிநிதிகள், வடக்கு மக்கள் பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகள் உள்ளடக்கிய சிறப்பு ஆணையகம், அபிவிருத்திக் கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
இதனால் இளைஞர் வேலைவாய்ப்புக்களும், மக்கள், பிரதேசத்தின் பொருளாதார வளமும் பெறமுடியும் என வற்புறுத்துகின்றோம்.
மத்திய அரசின் மீள்குடியேற்ற அமைச்சின் தன்னிச்சையான நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட்டு ஒருங்கிணைந்த மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்திக் கட்டமைப்பின் தீர்மானங்களின் அடிப்படையில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம், அபிவிருத்தி என்பன வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு தனியான செயலணி
மேற்குறித்த மனிதவளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு சர்வதேச முன்னேற்றங்களை ஏற்றும், இணைந்தும் புதிய கல்வித்திட்டங்களை உயர் கல்வி தொழில்நுட்பம், வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய அறிவியல் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு 60 முதல் 70 வீதம் வரை கலைப்பாடங்களில் கல்வி பயிலும் மாணவர்களை 60, -70 வீதம் அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகப் பாடத்துறைகளில் சித்தியும் தேர்ச்சியும் பெறச் செய்யவும் அடுத்த ஆண்டே வேலை வாய்ப்புக்களை வழங்கக் கூடிய வகையிலும் உயர் கல்வி பல்கலைக்கழகக் கல்வி, தொழில் மற்றும் வர்த்தக கல்வி, வேலைவாய்ப்பு, திட்டமிடப்படல் , ஒருங்கிணைந்த திட்டமொன்றை உடன் உருவாக்குமாறும் அரசை வற்புறுத்துகின்றோம்.
அபிவிருத்தித் திட்டங்கள்
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகள், ஏனைய உற்பத்திகள் மேம்படுத்தப்படுவதுடன் உற்பத்திச் செலவையும் வாழ்வாதாரத்தையும் அதற்கான சந்தைகளையும் உருவாக்குதல் வேண்டுமென்பதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வகையிலும் தொழில்களும் வாழ்வாதாரம் மற்றும் நிவாரணமும் வழங்க வேண்டும்.
இதன் பொருட்டு வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதியம் கிடைக்க உடன் மதிப்பீடு செய்யப்படவும் அம்மக்கள் பயனுறவும் திட்டங்கள் வேண்டும்.
படித்த இளைஞர் சமுதாயம் பட்டம் பெற்றதும் தொழில் பயிற்சி பெற்றதும் வேலை பெறவேண்டும். அல்லது அதுவரை நியாயமான ஒரு ஊதியம் வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்துகின்றோம்.
தொண்டர் ஆசிரியர் நிரந்தரமாக்கப்படுவதுடன் ஏனைய ஊழியர்கள் சம்பளத்துக்கு ஈடான ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட மேம்பாட்டுத்திட்டங்கள்
காலம் கடந்து போயினும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், புனர்வாழ்வு பெற்றவர்கள், குடும்பத் தலைமைத்துவத்தையும் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களின் குறிப்பாகப் பெண்கள் ஆகியோரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படவேண்டும். அதுவரை சிறப்புத் திட்டமொன்றின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
கல்வி
கல்வித்துறையில் மத்திய, மாகாண நிர்வாகத்தினால் தீட்டப்படுகின்ற கல்வித் திட்டம், இடமாற்றத்திட்டங்களில் ஆசிரிய தொழில் சங்கங்கள், பாடசாலை மாணவர் , பெற்றோர் ஆகியோரின் ஆலோசனைகள், பங்களிப்பும் பெறக்கூடிய வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.
பாடசாலைகளுக்கான வளங்கள் சமச்சீராக வழங்கவும் வேண்டும். ஒரு பாடசாலையில் நியமனம் பெறும் ஆசிரியர், பதவிப் பொறுப்பிலுள்ளோர் பத்து ஆண்டுகளாயினும் அப்பாடசாலையில் கடமையாற்ற அனுமதி வழங்கப்படவேண்டும்.
குறிப்பாக வடபகுதியில் கல்வி வீழ்ச்சியடைந்து வருவது ஆராயப்பட்டு மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சுகாதாரம்
மத்திய, மாகாண அரசு அமைப்புக்கள் சுகாதாரத்துறையில் பின் தங்கிய மற்றும் கிராமப் புறங்களில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், தாதிகள், சிறுதொழிலாளர் நியமனங்களை சீராக நிறைவேற்ற நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவேண்டும்.
மருத்துவர்கள் பின் தங்கிய, கிராமப்புற மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளாயினும் கடமை புரிய வேண்டும். மருத்துவமனைகளில் தொண்டர் ஊழியர்களாக கடமை புரிவோர் நிரந்தர நியமனம் பெறவேண்டுமெனவும் வற்புறுத்துகின்றோம்.
மருத்துவமனைகள் தரமுடையவையாகவும், வளங்கள் உடையதாகவும் பிரதேச செயலகப் பிரிவு ஒவ்வொன்றிலும் தரம் உயர்த்தப்படவும் வேண்டும்.
பனம் பொருள் அபிவிருத்தி
பனம்பொருள் அபிவிருத்தித் துறையில் ஈடுபடும் மக்கள் கூட்டுறவுத் துறையினூடாகவும் அதற்கான அதிகாரக் கட்டமைப்பொன்று மாகாணசபைக்கூடாகவும் தக்க நிபுணத்துவம், தொழில்நுட்பம் கொண்டு பொருத்தமான திட்டங்களை வகுத்து மேம்படுத்தவேண்டும்.
பனை வளத்தினால் உற்பத்தி செய்யப்படும் கள்ளினை மக்கள் சாதாரணமாக அருந்தக் கூடிய மருத்துவ பானமாகச் சந்தைப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு மற்றும் செயற்கை கள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தடைசெய்யப்படவேண்டும். அத்துடன் திக்கம் வடிசாலையுள்ளிட்ட பனஞ்சாராய உற்பத்திக்கு பத்து ஆண்டுகளுக்கேனும் உற்பத்தி வரி நீக்கப்படவேண்டும்.
அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் அத்தொழிலில் ஈடுபடும் மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயனுறவேண்டும். பனம் தொழில் அபிவிருத்தி மற்றும் திக்கம் வடிசாலை புனரமைப்புக்கான முதலீடு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
வடபகுதி குடிநீருக்குத் தீர்வுத்திட்டம்
நூறாண்டுகளாக நாமும் ஆட்சி நிர்வாகமும் மழை நீரைத் தேக்கவும், பாதுகாக்கவும் தவறிவிட்டோம். இதனால் நிலத்தடி நீர் உவர் நீராக பெருமளவில் மாறிவிட்டது.
அண்மைய இருதசாப்தங்களில் குளோரைட், நைட்ரேயின், நச்சு இரசாயனச் செறிவும், மலக்கழிவுகளும் நன்னீரை மாசுபடுத்திவிட்டன.
இனப் படுகொலை நடவடிக்கையைவிட மனித குலத்தை தமிழ் மக்களை இத்தகைய நச்சு நீரைக் குடிநீராகவும், உணவு உற்பத்திக்கு பாசன நீராகவும் மக்கள் பயன்படுத்த அனுமதிப்பதால் புற்றுநோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புதிய நோய்களால் எம்மின மக்கள் அழிந்து வருவது மிகப்பெரிய கொலைக்குற்றமாகும் என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
எனவே, எம் மனித குலம் தமிழ்ப் பேசும் மக்கள் நன்னீர் குடிநீராகவும் உணவு உற்பத்திக்கான பாசன நீராகவும் பயனுற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வற்புறுத்துகிறோம்.
சர்வதேச மட்டத்தில் நன்னீர் வழங்குதல், பாதுகாத்தல் திட்டங்களில் நிபுணத்துவம் மிக்கவர்களின் அனுசரணையையும் நிதி உதவிகளையும் பெற்று வடபகுதி மக்களின் குடிநீர், நன்னீர் பெறும் பிரச்சினைக்குத் தாமதமின்றித் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
மக்களைப் பாதிக்கும் வரி நீக்கம்
அரசு அண்மையில் அறிவித்துள்ள பெறுமதி சோலைவரியிலிருந்து (VAT), சுகாதாரம், உணவு, கல்வி, சிறுதொழில்கள், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்கள், முதலீடுகளுக்கு விதிவிலக்களிக்க வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றோம்.
காணாமற்போனோருக்கு விடை வேண்டும்
போரின் காரணமாக காணாமற்போனோர் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோர், புனர்வாழ்வு பெற்றோர், குடும்பத் தலைவரை இழந்தோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் வழங்க சிறப்புத் திட்டங்கள் வேண்டும்.
சிறைக்கைதிகள் விடுதலை
2015ஆம் ஆண்டின் பின் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விடுதலை கிடைக்க எடுத்த நடவடிக்கைகள் பயன்தரவில்லை. நீதி கிடைக்கவில்லை.
அவர்கள் குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. அரசு வழங்கிய உறுதிமொழியின்படி அக்கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் அவர்களுக்கும், அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்
நாட்டில் ஏற்பட்ட போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுதல் முதலான பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. மக்களிடத்தில் அச்சமும் ஏக்கமும் அதிகரித்து வருகிறது. இனவாதம் தீவிரமடைந்து வருகிறது.
எனவே, 2015ஆம் ஆண்டில் இலங்கையுட்பட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக நிறைவேற்ற சர்வதேச சமூகம் பொருத்தமான, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பாக தமிழ் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவதிலும் பொருத்தமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகத்தையும், ஐ.நா மனித உரிமைப் பேரவையையும் வற்புறுத்துகின்றோம்.
வடபகுதிக் கடலில் மீனவர் பிரச்சினை
நாட்டில் குறிப்பாக வடபகுதிக் கடலில் இந்திய ஆழ்கடல் இழுவைப் படகுகளினாலும், தென்னிலங்கை மீனவரின் இழுவைப் படகுமற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள், உபகரணங்களினாலும் சீன மீன்பிடிக் கப்பல்களினாலும் வடபகுதி மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனால் வடபகுதிக் கடல் வளம் அருகி வருகிறது. வடபகுதி மீனவர்களிடத்திலும் இழுவைப் படகுகளினால் மோதல்கள் இடம்பெறுகின்றன.
வாழ்வாதாரம் வீழ்ந்து வருகிறது. இப்பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணவேண்டும். இந்திய அரசும் மாநில அரசும் இதுவரையும் அக்கறையுள்ள அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுத்து இந்திய இழுவைப் படகுகளின் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இலங்கை அரசும் அதற்காக சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, இழுவை படகுகள் முற்றாக தடை செய்யப்படவேண்டும்.
போதைக்கு அடிமைகளாய் வன்முறைக்கு ஆளாகுதல்
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போதைக்கும் மதுவுக்கும் ஆளாகி வருவோர் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் வன்புணர்வும் அதிகரிக்கிறது.
இவற்றிற்குக் காரணமான அனைத்து வகை போதைவஸ்துப் பாவனைக்கும் குற்றச் செயல்களுக்கும் தீர்வுகாணவேண்டும். இதனால் எம் மாணவர் கல்வியும் வீழ்ச்சியடைகிறது.
தமிழ் இனத்தின் பண்பாடுகளும் சீர்குலைவது மட்டுமல்ல தமிழின அடையாளங்களையும் இழந்து அடிமை நிலைக்குள்ளாகி வருகின்றோம்.
இதற்கு மக்களிடத்தில் மாணவர் மத்தியில் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைவஸ்தை முற்றாக ஒழிக்க வேண்டும், வெறியூட்டும் மதுவையும் விலக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செயற்படுத்த வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.
ஊதியம் அதிகரிக்கப்படவேண்டும்
அரசு அறிவித்தவாறு அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன் தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபாவை உடன் வழங்க பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறெனினும் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியம் வழங்குவதே அரசின் கொள்கையாகவும், திட்டமாகவும் இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றோம்.
தோட்டத்தொழிலாளர் என்ற சொல் மாற்றப்படவேண்டும்
நாட்டில் தோட்டத் தொழிலாளர் எனும் சொல்லாட்சி மாற்றப்பட்டு தமிழ் மக்கள் எனும் சொல்லாட்சியே பொருத்தமானது என்பதுடன் அம்மக்கள் அரசியல் உரிமை, வாதங்கள் பிரதேசங்களினை தாங்களே நிர்வகிக்கும் உரிமை பெறவேண்டும்.
அத்துடன் அவர்களின் வாழும் உரிமை, நிலம், வீடு, சொத்துடமை முழுமைபெறவும், உழைப்புக்கேற்ற ஊதியம் பெறவும் அரசும் தனியார் துறையினரும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.
இன, மத சமத்துவம் பாதுகாக்கப்படவேண்டும்
நாட்டில் இடம்பெற்றுவரும் தமிழர் பிரதேசங்களின் நில ஆக்கிரமிப்பு, சில பௌத்த சக்திகளின் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள், தமிழர் நிலங்களில் கரையோர மீன்பிடிப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம், ஆக்கிரமிப்புக்கள், இன, மத விரோத நடவடிக்கைகளை உடனடியாக நல்லாட்சி அரசின் ஜனாதிபதி, பிரதமர் நிறுத்தி இன, மத சமத்துவத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க வேண்டுமெனவும் வற்புறுத்திக் கோரி நிற்கின்றோம்.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும்
நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஊடகத்துறை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், ஜனநாயக விழுமியங்களைப் பேணியும் செயற்பட அரசு பொருத்தமான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல் ஊடகவியலாளர் ஊதியம், ஓய்வூதியம், பாதிக்கப்பட்டோர் வாழ்வாதாரம் என்பன வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எல்லா வற்றிற்கும் மேலாக ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டுமென தொடர்ந்தும் வற்புறுத்துகின்றோம் என குறித்த கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டிருந்தன.