கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சட்டம் படித்துவந்த தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐந்து பேரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்துவருகின்றனர்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள குருப்பம்பாடி கிராமத்தில் 30 வயதான இந்தப் பெண் தன் தாயுடன் வசித்துவந்தார். இவரது தாய் கூலி வேலை பார்த்துவருகிறார்.

கடந்த வியாழக்கிழமையன்று, அவரது தாயார் வேலையிலிருந்து திரும்பிவந்தபோது, இந்தப் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது உடலில் பல இடங்கள் வெட்டி சிதைக்கப்பட்டிருந்தன. குடல் வெளியில் உருவிப்போடப்பட்டிருந்ததாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, அந்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டதாகவும் ஒருவர் வெளியேறிச் சென்றதைப் பார்த்தாகவும் அக்கப்பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த நபர் பலியான பெண்ணுக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

இது தொடர்பாக விசாரித்துவருகிறோம் என மாவட்ட காவல்துறை தலைவர் யதீஷ் சந்திரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் இரண்டு நண்பர்கள், அவருடைய சக பணியாளர், நடன ஆசிரியர் என ஏழு பேரைத் தடுப்புக் காவலில் வைத்த காவல்துறை, இருவரை விடுவித்துள்ளது. ஐந்து பேரிடம் விசாரணை நடந்துவருகிறது.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், அவரைப் பார்க்க வந்த கேரள முதல்வர் ஒம்மன் சாண்டி, இது கேரளாவிற்கே அவமானத்தைத் தேடித்தரும் சம்பவம் என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தீவிரப் படுத்த வேண்டுமெனக் கோரி பெண்கள் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்திவருகின்றன.

செவ்வாய்க் கிழமையன்று, பலியான பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு முன்பாகவும் பெண்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

160420134226_india_rape_victim_512x288_reuters_nocredit

இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டில் தில்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா சம்பவத்துடன் இந்த சம்பவத்தை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன.

மே 16ஆம் தேதி கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், இம்மாதிரி ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆளும் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version