உகண்டாவின் நீண்டகால ஆட்சியாளரான யொவேரி முசவேனியின், ஐந்தாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் மே 12ஆம் நாள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக, அவரது தனிப்பட்ட செயலர் உதித்த லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.
தனது ஐந்தாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு, உகண்டா அதிபர் முசவேனி, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள், பிரித்தானிய பிரதமர் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவர்களுக்கும், பல்வேறு பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
உகண்டாவில் ஆட்சியில் இருந்த இடி அமீனின் எதிர்ப்பாளராக இருந்த முசவேனி, இடி அமீன் ஆட்சிக்குப் பின்னர் பாதுகாப்பு அமைச்சரானார். 1980இல் நடந்த தேர்தலை அடுத்து, அரசாங்கத்துக்கு எதிரான இராணுவம் ஒன்றை அமைத்து, 1986ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.
அதில் இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் உகண்டாவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாக உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
2012ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு வந்த முசவேனி, விடுத்த அழைப்பின் பேரில், 2013ஆம் ஆண்டு அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச உகண்டாவுக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.