ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தினால் பெண்ணொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இப்படியான கானொளி ஒன்று வெளியாகியுள்ளதை நாட்டின் வட பகுதியில் இருக்கும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜோவ்ஜான் பிராந்தியத்தில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
உள்ளூர் தாலிபான் தலைவர் ஒருவர் அங்கு கூடியிருந்த சுமார் இருநூறு ஆண்களுக்கு மத்தியில் தனது தீர்ப்பை அறிவிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
புர்கா அணிந்தபடி மைதானத்தில் அமர்ந்திருந்த அந்தப் பெண், தனது கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் தலையின் பின் பகுதியில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இதேபோன்று மரண தண்டனை நிறைவேற்றபட்ட வீடியோ ஒன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், அது சர்வதேச அளவில் கண்டனங்களுக்குள்ளாகியிருந்தது.