“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அநியாயமாக சிதறிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சியை எப்படியாவது காப்பாற்றவேண்டும்.
பல வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இவ்வாறு சீரழிந்து செல்வது கவலையளிக்கின்றது. இந்தக் கட்சியை காப்பாற்றுவதற்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதாவது செய்தாகவேண்டும்… என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கட்சியை காப்பாற்றியாகவேண்டும்”
இவ்வாறு நாட்டின் அரசியல் நடப்புக்கள் தொடர்பில் ஆர்வமுடைய ஒருவர் தெரிவிக்கிறார். இவ்வாறான ஒரு முக்கிய அரசியல் கட்சி சிதறிப்போகுமளவுக்கு இடமளிக்கக்கூடாது. நாட்டின் எதிர்காலத்துக்கு இந்தக் கட்சியின் பயணம் அவசியமானதாகும் என்றும் அந்த அரசியல் ஆர்வமுடையவர் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிரிவடைந்துவிடும் என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்? சுதந்திரக் கட்சியின் காலி மேதினக் கூட்டத்தில் நல்ல மக்கள் கூட்டம் காணப்பட்டமே என்று அவரிடம் கேட்டபோது நாட்டில் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இரண்டு கூட்டங்கள் நடைபெற்றதே கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவைக் கோடிட்டுக்காட்டுகின்றதே என்று அவர் கூறுகின்றார்.
உண்மையில் கடந்த முதலாம் திகதி அரசியல் கட்சிகள் தமது அரசியல் பலத்தை காட்டுவதற்காகவே கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தியிருந்தன.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அதன் கம்பல் பார்க் மேதினக் கூட்டமானது வெற்றிகரமாக அமைந்தது என்று கூறலாம். மிகவும் அதிகளவான மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி அரியாசணத்தில் அமர்ந்துள்ள நிலையில் அதன் ஆதரவாளர்கள் உற்சாகமடைவது இயல்பாகும். அந்தவகையில் வெற்றிகரமான மேதினக் கூட்டத்தை நடத்தியமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மகிழ்ச்சியடையலாம்.
ஆனால் இம்முறை மேதினக் கூட்டத்தில் மிகவும் முக்கியமாக அனைத்து தரப்பினராலும் பார்க்கப்பட்ட விடயமாக காலியிலும் கிருளப்பனையிலும் நடைபெற்ற கூட்டங்களை குறிப்பிடலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் காலியில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பல பங்காளிக் கட்சிகள் இதில் பங்குபற்றினாலும் இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டமாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் காலியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டமும் வெற்றிபெற்ற கூட்டம் என்றே கூறலாம்.
மிக அதிகளவான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கே அதிகளவில் மக்கள் கலந்துகொண்டனர் என்று கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதியும் கூறியிருந்தார்.
சுதந்திரக் கட்சியின் காலி கூட்டத்தில் மக்கள் அதிகளவாக கலந்துகொண்டிருந்தமை கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றே குறிப்பிடவேண்டும்.
ஆனால் கிருளப்பனையில் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் ஏனைய இரண்டு கூட்டங்களுடன் ஒப்பிடுகையில் கிருலப்பனை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையானது குறைவானது என்றே கூறப்படுகின்றது.
எவ்வாறெனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இரண்டு மேதினக் கூட்டங்கள் நடைபெற்றமையே சுதந்திரக் கட்சியில் பிரிவு காணப்படுகின்றது என்பதை கோடிட்டுக்காட்டுகின்றது. எனினும் இந்த விடயத்தை யாரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை.
இந்நிலையில் கிருலப்பனை கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கட்சியினர் பகிரங்கமாக எதனையும் கூறாமல் உள்ளனர்.
அதாவது சுதந்திரக் கட்சியின் கொள்கையை மீறிய நபர்கள் தொடர்பில் விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை அகற்றி தூய்மையான கட்சியை உருவாக்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்திருக்கின்றார்.
“”அனைத்து ஊடகங்களும் அடுத்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம் என்பதையே எதிர்பார்த்து இருந்தன. ஆனால் கட்சிக்குள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி தீர்மானம் எடுக்கும்.
எவ்வாறு இருப்பினும் எந்தவொரு தனி நபரின் சலுகையையோ, அல்லது ஒரு அணியின் செயற்பாடுகலையோ கவனத்தில் கொண்டு செயற்பட முடியாது. கட்சி என்ற ரீதியிலேயே நாம் தீர்மானங்களை எடுப்போம்.
அவ்வாறு தீர்மானம் எடுக்கும் போது கட்சியின் மத்தியகுழு மூலமாகவே தீர்மானம் எடுக்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சரியான முறையில் கையாண்டு வருகின்றார்.
கட்சியில் இருக்கும் குறைகளை கண்டறிந்து அதற்கமைய கட்சியை சரிசெய்யும் மிகப்பெரிய பொறுப்பை அவர் மேற்கொண்டு வருகின்றார்”” இவ்வாறு சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.
அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் கூற்றை பார்க்கும்போதும் உடனடியாக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது போன்றே தோன்றுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் எங்கே சுதந்திரக் கட்சியில் பாரிய பிளவு ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் அந்தக் கட்சியை நேசிக்கின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உண்மையில் பண்டாரநாயக்கவின் பாரிய புரட்சியுடன் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவானது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
இதன்போது தனிச் சிங்கள சட்டம் என்ற விடயமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நாட்டில் பாரிய பிரச்சினையை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது. எனினும் 1956 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி தோற்றம்பெற்று வலுவடைந்தது.
அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியை கைப்பற்றி பிரதமரானார். எனினும் அவரினால் நீண்டகாலம் ஆட்சியிலும் அரசியலிலும் நீடிக்க முடியவில்லை.
பண்டாரநாயக்கவுக்கு பின்னர் அவரின் பாரியார் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் கட்சியை வழி நடத்தினார். விசேடமாக இடதுசாரிகளை அரவணைத்துக்கொண்டு முற்போக்கு கூட்டணிகளை அமைத்து ஆட்சியமைத்து வந்தார்.
குறிப்பாக அவரின் காலத்தில் நாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும் 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையான உள்நாட்டு உற்பத்தி மற்றும் மூடிய பொருளதார கொள்கை காரணமாக சுதந்திரக் கட்சி மக்களிடையேசெல்வாக்கை இழந்தது. அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி 17 வருட ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
இக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல சவால்களை எதிர்கொண்டது. 1994 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
சுதந்திரக் கட்சி என்ன செய்வது என்று திண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் பண்டாரநாயக்கவின் புதல்வி சந்திரிகா குமாரதுங்க சமாதான புறாவாக வந்து சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.
அத்துடன் முதலமைச்சர் பிரதமர் ஜனாதிபதி என்று உயர்ந்த இடத்துக்கும் சென்றார். உலகின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
1994 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அதிக சதவீதத்தில் வெற்றிபெற்றார். குறிப்பாக வடக்கு ,கிழக்கு மக்கள் சந்திரிகா குமாரதுங்கவுக்கு அமோக ஆதரவை வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் சுதந்திரக் கட்சி பாரிய முன்னேற்றத்தை நோக்கி பயணித்தது என்றே கூறவேண்டும்.
அதாவது 1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையும் சுதந்திரக் கட்சியின் ஆட்சி தொடர்ந்தது.
தற்போது தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு கணிசமானதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இவ்வாறான பின்னணியைக் கொண்டு சுதந்திரக் கட்சி பிளவுபடப்போகின்றதா என்பது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க இந்த சுதந்திரக் கட்சியின் விவகாரம் மற்றும் நெருக்கடி தொடர்பில் இவ்வாறு வரைவிலக்கணம் அளிக்கின்றார்.
அதாவது “” தற்போது காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலையின் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக பிரிவடைந்து செல்லாது.
தற்போதைய நிலைப்படி மஹிந்த அணி மற்றும் மைத்திரி அணி என இரண்டு பிரிவுகளும் செயற்படுமே ஒழிய தனித்து இரண்டு கட்சிகளாக உருவாகாது.
மஹிந்த அணியினர் இவ்வாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு தனிக்கட்சியை ஆரம்பிக்க முயற்சித்தனர். ஆனால் பின்னர் அதனை கைவிட்டுவிட்டனர்.
அதற்கு காரணம் உள்ளது. அதாவது கடந்த காலங்களில்ட பிரதான கட்சிகளிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை அமைத்த எவரும் வெற்றியடையவில்லை. பின்னர் ஏதோவொரு பிரதான கட்சியிலேயே இணைந்துகொண்டனர்.
குறிப்பாக லலித் தலைமையிலான குழுவினர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தபோதும் அது வெற்றிபெறவில்லை.
மங்கள சமரவீர சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி அமைத்தபோதும் அந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. அனைத்து தரப்பினரும் இறுதியில் பிரதான கட்சிகளுடனேயே இணைந்துகொண்டனர்.
இந்த அரசியல் யதார்த்தமானது அனைவரையும்விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர் தலைமையிலான அணி உத்தியோகபூர்வமாக புதுக்கட்சியை ஆரம்பிக்காது.
மாறாக தற்போதுள்ள மஹிந்த அணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்ளும் சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது.
விசேடமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்து அரசாங்கத்தை அமைக்கப்போவதாக கூறினால் மஹிந்த அணியில் உள்ள அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்துகொள்வார்கள்.
மாறாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இரண்டாக பிரிந்து இரண்டு கட்சிகள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் தற்போதைய அரசியல் சூழலில் இல்லை என்றே நான் கூறுகிறேன் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க கூறுகிறார்.
இவரின் கருத்தைப் பார்க்கும்போது சுதந்திரக் கட்சியை நேசிக்கின்றவர்கள் கவலையடைய வேண்டியதில்லை என்றே தோன்றுகின்றது.
எக்காரணம் கொண்டும் சுதந்திரக் கட்சி இரண்டாக தற்போதைய அரசியல் சூழலில் பிரிவடையாது என்பது தற்போதைய அரசியல் சூழலை கருத்திற்கொண்டு சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதாவது தனிக்கட்சி அமைப்பின் எவ்வாறான அரசியல் சூழல் அமையும் என்பது குறித்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு சிறந்த அனுபவம் இருக்கும். கடந்த 45 வருடங்களாக அவர் அரசியலில் இருக்கின்றார். எனவே எதிர்வரும் மாதங்கள் இந்த விடயத்தில் தீர்க்கமானதாக அமையலாம்.
அரசியல் கட்சிகள் என்பன நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கு மிகவும் அவசியமாகும். அந்தவகையில் ஒரு பிரமாண்டமான கட்சி பிரிந்து செல்வது என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கு சிறந்ததாக அமையாது.
தற்போதைய நிலைமையில் சுதந்திரக் கட்சி பலப்பட்டு ஒற்றுமையாக இருப்பதே நாட்டின் எதிர்காலத்துக்கு சிறப்பானதாக அமையும். அதாவது நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு தற்போது கிடைத்திருக்கின்ற அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் நிலவிய ஒற்றுமையின்மையே பிரதான காரணமாக அமைந்தது.
ஆனால் தற்போது ஒரே நோக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்துள்ளமை பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் சுதந்திரக் கட்சி பிளவை நோக்கி பயணிக்குமாயின் அது தேசிய பிரச்சினை தீர்வுக்கு பாதகமான காரணியாக அமையும். காரணம் சுதந்திரக் கட்சி பிளவுபடுமாயின் அதனை மீண்டும் சீர்செய்வதற்கே கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்துவார்கள். அதற்கு இடையில் கிடைத்திருக்கின்ற நான்கு வருடங்கள் பறந்துபோய்விடும்.
எனவே தற்போதைய நிலைமையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் உரிய முறையில் அரசியல் காய்களை நகர்த்துவது மிகவும் முக்கியமாகும். இந்த விடயத்தில் பிரதான கட்சிகளினதும் தலைவர்கள் தூரநோக்குடன் செயற்படவேண்டும். தலைவர்கள் சிந்திப்பார்களா? தலைவர்கள் சிந்திக்கவேண்டும்.
ரெபேட் அன்ரணி