கோடீஸ்வரர் வர்த்தகர் ஒருவரை கடத்தி, அவரை அடைத்துவைத்து தாக்கி அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் சிறுநீரை பருக்கி, பருக்கி அடித்து உதைத்த சம்பவம் தொடர்பில் கண்டி மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் மற்றும் ஏனைய பல்வேறான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற யு.என். சுமித் குமார (வயது48) என்பவரே இவ்வாறு கடத்தி தாக்கப்பட்டுள்ளார்.
கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், பொலிஸில் அவர் செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் வைத்து கடந்த 5ஆம் திகதியன்று ஆயுதம் தரித்த குழுவினர் என்னை கடத்தினர். அங்கிருக்கு கண்டிக்கு கொண்டுவந்தனர். அதன் பின்னர் பேராதனைக்கு கொண்டுசென்றனர். அந்த குழுவில் சுமார் 12 பேர் இருந்தனர்.
பேராதனை சந்தியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு கொண்டு சென்று என்னை சிறைவைத்தனர். தாக்கினர், துப்பாக்கியினால் என்னுடைய நெஞ்சிலேயே தாக்கினர்.
சிகரெட்டினால் என் உடல் முழுவதும் சுட்டனர். எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது சிறுநீரை பருக்கினர் என்றார்.
10 இலட்சம் ரூபாய் குத்தகை அடிப்படையிலேயே என்னை கடத்தியுள்ளனர் என்பதனை நான், பின்னர் அறிந்துகொண்டேன். கடத்துமாறு கட்டளையிட்டவருக்கு பேராதனை மற்றும் மஹியங்கனை பகுதிகளில் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் இருப்பதாகவும் அறிந்துகொண்டேன் என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கடுமையாக தாக்கியவர்கள், பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டதாக கூறி, பேராதனை பொலிஸில் ஒப்படைத்தனர்.
என்னிடமும், என்னை ஒப்படைத்தவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட பொலிஸார், அவ்விருவரை கைது செய்ததுடன், என்னை கடத்துவதற்கு பயன்படுதிய வானையும் கைப்பற்றினர்.
அதன்பின்னரே, பேராதனை வைத்தியசாலையில் என்னை அனுமதித்தனர்.
இதேவேளை, தன்னிடமிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கைசங்கிலி மற்றும் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மூன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.