அக்கரைப்பற்று பொத்துவில் வீதி 40ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடொன்றில், இன்று (09) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குணரட்ணம் ஜெயராஜ் எனும் 24வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இத்தியடி பிரதேசத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயராஜ் மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேசத்தில் திருமணம் செய்து ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வந்ததாகவும் சுமார் ஒரு மாத காலமாக தொழில் நிமித்தம் 40ஆம் கட்டை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், பகல் வேளைகளில் வீடொன்றில் தனிமையாக தங்கி வந்துள்ளதோடு, இரவு வேளைகளில் தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தூங்குவதற்காக சென்று வந்துள்ளார்.
நேற்று (08) இரவு, வழமையாக இரவில் படுக்கைக்காக செல்லும் வீட்டுக்கு ஜெயராஜ் செல்லவில்லை.
அதனால் அவ்வீட்டுக்கார பெண் ஜெயராஜை பார்ப்பதற்காக பகல் வேளையில் தங்கும் ஒருவரும் இல்லாத திறந்த வீட் இன்று (09) காலை 7 மணியளவில் சென்ற போது வீட்டின் மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து, பொலிஸ் அவசர அழைப்புக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
நீதிவான் விசாரணையின் பின் பிரேதபரிசோதனை மேற்கொள்ளபட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
பெண் கடத்தல்; இருவர் கைது
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (08) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பெண் வீட்டிலிருந்து கடந்த ஐந்தாம் திகதி இரவு கடத்தப்பட்டபோது, கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி அலைபேசியில் எடுத்த படத்தை ஆதாரமாகக் கொண்டு 23, 36 வயதுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மேற்படி பெண்ணை இதுவரையில்; கண்டுபிடிக்காத நிலையில், இவரது கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இவரது முன்னாள் கணவரைத் தேடுவதாகவும் பொலிஸார் கூறினர்.
கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற இவர், தனது பிள்ளைகளுடன் வாழ்கின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.