கவுரவ கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கரின் மனைவி கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி உடுமலை நகரில் ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் பொதுமக்கள் மத்தியிலேயே சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
போலீசாரின் விசாரணையில் சங்கரை கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் சிலர் சேர்ந்து கவுரவ கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கவுசல்யா தனது கணவர் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். அதன்படி சிகிச்சை முடிந்து கவுசல்யாவை சங்கரின் பெற்றோர் மற்றும் போலீசார் மடத்துக்குளத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா நேற்று இரவு 10 மணியளவில் திடீரென சாணிபவுடர் (விஷம்) குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யா, சங்கர் நான் சென்ற இடத்திற்கு நீயும் வந்துவிடு என்று அழைத்தார். இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வாக்கு மூலமாக கூறியுள்ளார்.
கவுசல்யா தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கர் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.