அவள் பெயர் சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 47 வயது. 16 வயதுடைய மகனுக்கு அம்மா. அவள் கணவனின் பெயர் லக்மால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சரண்யா – லக்மால் ஜோடி வயது, இனம், மதம், மொழி கடந்த ஒரு காதல் காவியத்தின் இரு கதாபாத்திரங்கள்.
ஆம், சரண்யாவை விட 6 வயது குறைவான லக்மால், பாடசாலைக் காலத்தில் ஏற்பட்ட காதலால் வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டவர்.
தென் மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் இரண்டில் கல்வி கற்ற அவ்விருவருக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பின் காரணமாக லக்மால் தனக்கு 17 வயதாக இருக்கும் போதே 24 வயதான சரண்யாவை திருமணம் செய்ய முற்பட்டு 18 வயதை பூர்த்தி செய்யும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.
சரண்யா அவள் வீட்டுக்கு தெரியாமல் சென்றதன் பலன் ஒரு வருடத்துக்கு மேலாக லக்மாலின் வீட்டிலேயே காத்திருந்து அவனை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
லக்மாலை விட சரண்யா வயதில் பெரியவளாக இருந்த போதும் அவளின் எடுப்பான தோற்றம் அதனை வெளியாருக்கு காட்டிக் கொடுக்கவில்லை எனலாம்.
திருமணத்தின் பின்னர் சந்தோஷமாக வாழ்ந்த இந்த தம்பதி வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றில் தமது வாழ் நாளைக் கடத்தினர்.
காதலால் பாடசாலைக் கல்வியை சரியாக தொடராத போதும் லக்மால் திருமணத்தின் பின்னர் கடுமையாக உழைத்து இலங்கையின் பிரபலமான தேயிலை நிறுவனமொன்றின் உயர் பதவியை தற்போது அடைந்திருந்தான்.
அதாவது அந்த தேயிலை நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவராக அவன் விளங்கினான்.
சரண்யா, லக்மால் அவர்களது மகன் ஆகியோரை உள்ளடக்கிய இந்த சிறிய குடும்பத்தில் அடையாளப்படுத்த வேண்டிய இன்னுமொரு நபரும் உள்ளார்.
அவர் தான் பண்டா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆம், அவர்தான் லக்மாலின் ஆஸ்தான வாகன சாரதி. தனது 14 வயதிலேயே லக்மாலிடம் வேலைக்கு சேர்ந்த பண்டா உரிய வயதை அடைந்ததும் அவனுக்கு வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொடுத்து தனது சாரதியாக அவனை மாற்றிவிட்டார் லக்மால்.
பண்டா அந்த குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்தான். லக்மால் பண்டா மீது பாரிய நம்பிக்கை வைத்திருந்ததுடன் அவனுக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்கவும் தவறவில்லை.
காலை 8.00 மணிக்கெல்லாம் தனது அலுவலகத்துக்கு காரில் சென்றுவிடும் லக்மால் வீட்டுக்கு வர இரவு எட்டு மணி வரையாகும். அலுவலகத்துக்கு செல்லும் லக்மால் தனது சாரதி பண்டாவிடம் காரை மீண்டும் தனது மனைவியின் பாவனைக்காக வீட்டுக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
சரண்யா அதிலேயே மகனை பாடசாலை விட்டு வீட்டுக்கு அழைத்து வருவதும், பொருட் கொள்வனவுக்கு செல்வதும் அழகு சிகிச்சை நிலையம் செல்வதும் என அனைத்தையும் நிறைவேற்றும் வழமையைக் கொண்டிருந்தாள்.
இந்நிலையில் சாரதி பண்டா கூடிய நேரத்தை லக்மாலை விட சரண்யாவுடனேயே கழித்தான்.
குடும்பத்தில் உள்ள ஒருவனாக இருந்த சாரதி பண்டாவிடம் ஒரு நாள் சரண்யா திடீரென இப்படி கூறினாள். “பண்டா, நீ எனது குடும்பத்தில் ஒருவன். உன்னை என்னால் வேறு ஒருவனாக பார்க்க முடியவில்லை.
எனினும் எஜமான் (லக்மால்) உனக்கு சாப்பிட, குடிக்க கொடுக்க வேண்டாம் என்கிறார். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உன் மேல் உள்ள விசுவாசத்திலேயே இதனை உன்னிடம் கூறுகிறேன். அவர் அப்படி சொன்னதற்காக உனக்கு சாப்பிட குடிக்கக் கொடுக்காமல் நான் இருக்க மாட்டேன். எஜமானுக்கு என்ன நடந்துள்ளதோ புரியவில்லை.
நீ கவலைப் படாதே” என தெரிவித்தாள். 14 வயதில் இருந்து 16 வருடங்கள் பல சேவைகளை செய்த தனது எஜமானா இப்படி சொல்கிறார் என்பதை பண்டாவால் ஊகிக்கவும் முடியாமல் இருந்தது.
இப்படி அடிக்கடி லக்மாலைப் பற்றி ஏதாவது கூறி பண்டாவை லக்மாலிடம் இருந்து மனதளவில் தூரப்படுத்திய சரண்யா அவனை தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக உருவாக்கி வந்தாள்.
இந் நிலையில் தான் ஒரு நாள் சரண்யா அழகு சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென பண்டாவை நோக்கி ” பண்டா உனக்கு பேஸ் புக் கணக்கு இருக்கிறதா?” என வினவியுள்ளார்.
பண்டாவோ அதற்கு ” பேஸ் புக்கா?, ஐயோ எனக்கு அது என்னவென்றே தெரியாது மேடம்” என சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளான்.
இதனை தொடர்ந்து சரண்யா பண்டாவிடம் “நான் ஒரு விடயம் சொல்கிறேன். யாரிடமும் அதனை சொல்லக் கூடாது. விசேடமாக உன் எஜமானிடம் சொல்லக் கூடாது.
நீ தான் எனக்கு உள்ள மிக நம்பிக்கைக்குரிய உறவு. அதனாலேயே இதனை உனக்கு கூறுகிறேன்.” எனத் தெரிவித்து தனது இரகசியம் ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
“பண்டா, எனது பேஸ் புக் கணக்கின் நண்பர்கள் அதிகமாக உள்ளனர். அதில் இந்திய வாலிபர் ஒருவர் என்னுடன் மிக நெருக்கமான நண்பராக உள்ளார். ” என கதையை ஆரம்பித்துள்ளார்.
இந்த கதையானது கடந்த மார்ச் மாதமே பண்டாவுக்கு கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நாளும் குறித்த இந்திய வாலிபர் தொடர்பில் சரண்யா பண்டாவிடம் தகவல்களைக் கூறி அவனை உயர்த்தி பேச ஆரம்பித்துள்ளார்.
இந் நிலையில் ஒரு நாள் சரண்யா பண்டாவிடம் தனது இலக்கை நோக்கிய கோரிக்கையை முன் வைத்தாள். ” பண்டா, எனது இந்திய பேஸ் புக் நண்பர் இலங்கை வருகிறார்.
நீ எனக்கு அவரை தங்க வைக்க வெள்ளவத்தையில் நல்ல ஹோட்டல் அறை ஒன்றைத் தேடித் தர வேண்டும்’ என அவள் கோரியுள்ளாள். அத்துடன் அது குறித்து தனது கணவரான லக்மாலுக்கு தெரிய வேண்டாம் எனவும் அவள் பண்டாவுக்கு தெரிவித்துள்ளாள்.
எஜமானியின் கோரிக்கைக்கு அமைய பண்டா, டப்ளியூ. ஆர்.டி. சில்வா மாவத்தையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் 11 ஆயிரம் ரூபா நாள் வாடகை அடிப்படையில் ஒரு அறையை பெற்றுக் கொண்டுள்ளான்.
அது கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த யுவராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது பேஸ் புக் நண்பியான சரண்யாவை சந்திக்க இலங்கை வந்தான். கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு யுவராஜை வரவேற்க சரண்யாவே தனது சாரதியுடன் நேரில் சென்றாள்.
யுவராஜை வரவேற்று ஹோட்டல் அறைக்கு அழைத்து வரும் போது சரண்யாவும் யுவராஜும் அந்த காருக்குள் நடந்து கொண்ட விதம் பண்டாவை முகம் சுளிக்க செய்தது.
அவர்கள் ஏதோ புதிதாக திருமணமான ஜோடியைப் போன்று நடந்து கொண்டுள்ளனர். இதனையடுத்தே இவ்விடயத்தை எஜமானிடம் சொல்லலாம் என்ற எண்ணம் பண்டாவின் மனதில் உதித்துள்ளது.
லக்மால் வேலைக்கு சென்றதும் மகனும் பாடசாலை சென்று விடுவதால் சரண்யா தடையின்றி ஹோட்டல் அறைக்கு சென்று தனது கேரள நண்பரான யுவராஜுடன் நேரத்தை கழித்தாள்.
யுவராஜுக்கு 28 வயது இருக்கும். சரண்யாவை விட 19 வருடங்கள் இளையவன். இந்நிலையில் தான் ஒரு நாள் “இந்த ஹோட்டல் அறை எமக்கு வசதியற்றது. இங்கு நிறையப் பேர் வந்து போகின்றனர்.
நாங்கள் தனிமையில் சுதந்திரமாக இருக்கும் வண்ணம் எமக்கு ஒரு தொடர்மாடி வீடொன்றை ஒழுங்கு செய்து தா” என பண்டாவிடம் சரண்யா கூறியுள்ளார்.
பண்டாவும் 7500 ரூபா நாள் வாடகையாக மாதம் ஒன்றுக்கு இராம கிருஷ்ணா வீதியில் தொடர்மாடி ஒன்றினை பெற்றுக்கொடுத்தான்.
இதன் போது பண்டா சரண்யாவின் லீலைகளை லக்மாலிடம் மனச்சாட்சி உறுத்தலினால் கூறியிருந்தான். இதன் போதே சரண்யா தனக்கு எஜமான் சாப்பிட கொடுக்க வேண்டாம் எனக் கூறியது எல்லாம் பொய் எனவும் அவை எஜமானிடம் இருந்து தன்னை தூரப்படுத்தும் சரண்யாவின் திட்டம் எனவும் தெரிந்து கொண்டான்.
எஜமான் லக்மாலின் திட்டப்படி, பண்டா ராமகிருஷ்ணா தொடர்மாடி வீட்டில் சரண்யாவும் யுவராஜும் இருப்பதையெல்லாம் கையடக்கத் தொலைபேசியில் இரகசியமாக பதிவு செய்தான்.
இந் நிலையில் ஒரு நாள் லக்மால் வேலைக்குச் சென்றதும் வழமை போன்றே யுவராஜை சந்திக்க இராமகிருஷ்ணா தொடர்மாடி வீட்டுக்கு செல்லும் போது பண்டாவிடம் சரண்யா இப்படி கூறியுள்ளார்.
“பண்டா, எனது கணவரை தீர்த்துக்கட்ட நினைக்கிறேன். நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். நீ எனது நம்பிக்கைக்கு உரியவன் என்ற வகையிலேயே இதனை சொல்கிறேன்.
இதனை யாரிடமும் கூறாதே” என சரண்யா தெரிவித்த நிலையில் அதனை பண்டா தனது தொலைபேசியில் பதிவு செய்துக் கொண்டான்.
இந் நிலையில் லக்மாலை கொலை செய்யும் திட்டத்தில் யுவராஜும் இணையவே அவர்கள் கொலை தொடர்பில் இப்படி பேசிக் கொண்டுள்ளனர்.
“ஏ.சி.யில் இரசாயனம் ஒன்றைக் கலந்து கொல்லலாம். அல்லது உணவில் விஷம் கலக்கலாம்” என சரண்யா ஆலோசனைக் கூற யுவராஜோ வாகன விபத்தொன்றின் ஊடாக கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது என தனது ஆலோசனையை முன்வைத்துள்ளான்.
இதன் போது திடீரென பண்டாவை நோக்கி சரண்யா, உன்னால் நல்ல பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை தேடித் தர முடியுமா என கேட்டுள்ளார்.
இந் நிலையில் தான் விடயம் பாரதூரமானது என்பதை உணர்ந்த பண்டா தனது தொலைபேசியில் பதிவான அத்தனை பதிவுகளையும் தனக்கு 16 வருடங்கள் வாழ்வளித்த எஜமான் லக்மாலுக்கு காட்டி எல்லாவற்றையும் விளக்கியுள்ளான்.
இதனையடுத்தே இவ்விடயம் பொலிஸ் வட்டாரத்துக்கு வருகிறது. அது கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி. புறக்கோட்டையில் உள்ள கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல்தெனியவை சந்தித்த லக்மால் எல்லாவற்றையும் அவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாகவே அவ்விடத்துக்கு வெள்ளவத்தை பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்சாவை வரவழைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல்தெனிய, இவ்விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்தே வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில ஜயமான்னவை அழைத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் விடயம் குறித்து ஆலோசனை வழங்கி விசாரணைத் திட்டம் தொடர்பில் கூறியுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில ஜயமான்னவின் ஆலோசனைக்கு அமைவாக, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை மையப்படுத்தி செயற்பட்டு வந்த சட்டத்தை அமுல் செய்யும் படையணிக்கு தலைமை தாங்கிய உபபொலிஸ் பரிசோதகர் ஜகத்சிறியை இத்திட்டத்துக்கு பயன்படுத்துவது என உயர் பொலிஸ் அதிகாரிகள் தீர்மானித்தனர்.
பொலிஸாரின் திட்டப்படி உப பொலிஸ் பரிசோதகர் ஜகத் சிறி, இந்த விசாரணைகளை பொறுப்பேற்றதுடன், சரண்யா தேடும் பாதாள உலகக் குழு உறுப்பினராக நடிக்கவும் தீர்மானித்தான். அது உயர் பொலிஸ் அதிகாரிகளின் விசாரணைத் தந்திரமாகும்.
அதன்படி சாரதி பண்டாவுடன் வெள்ளவத்தை ராம கிருஷ்ணா வீதியில் உள்ள தொடர்மாடிக்கு தாதா வேடத்தில் இருந்த ஜகத் சிறி சென்றார்.
இதன் போது லக்மாலின் புகைப்படம் ஒன்றினை ஜகத் சிறியிடம் கொடுத்த சரண்யா கொலை தொடர்பில் 2 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில் அவரைக் கொலை செய்ய பேச்சு நடத்தினார்.
இந்த ஒப்பந்த பேச்சுக்கள் அனைத்தும் ஜகத் சிறியினால் சூட்சுமமாக கையடக்கத் தொலைபேசியில் படமாக்கப்பட்டது. ஜகத் சிறி அங்கிருந்து திரும்பும் போது 5000 ரூபா நோட்டொன்றை ஜகத் சிறியின் கையில் திணித்துள்ள யுவராஜ் அதனை செலவுக்கு வைத்துக்கொள் என கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி பண்டாவிடம் தாதாவை கூட்டி வருமாறு மீளவும் சரண்யா தெரிவித்துள்ளார். அதன்படி அன்றைய தினமும் அதே தொடர்மாடி வீட்டுக்கு ஜகத் சிறி சென்றுள்ளார்.
இதன் போது ” நீ இன்னும் எங்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை. இன்று எனது கணவர் குருநாகல் பகுதிக்கு நிறுவனக் காணி விவகாரம் ஒன்று தொடர்பில் செல்கிறார். அந்த காணி தொடர்பில் பிரச்சினை உள்ளது.
எனவே அங்கு வைத்து தீர்த்துக் கட்டினால் காணிப் பிரச்சினையில் அவரைக் கொன்றதாகவே அனைவரும் கருதுவர். எனவே வேலையை நடத்தி விடு” என தெரிவித்துள்ளார்.
அதற்கு ஒப்புக்கொண்ட ஜகத் சிறி நேரடியாக அங்கிருந்து திரும்பி தனது உயர் அதிகாரிகளான பொலிஸ் பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்ஸா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல்தெனிய ஆகியோரை சந்தித்து விடயத்தை தெரிவிக்கவே, அவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அந்த ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் சீருடையணிந்த உப பொலிஸ் பரிசோதகர் ஜகத் சிறியும் அவரது குழுவும் நேராக இராமகிருஷ்ணா வீதியில் உள்ள அந்த தொடர்மாடிக்கு சென்று சரண்யாவையும், யுவராஜையும் கொலை முயற்சி, கொலைக்கான சதி திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர். அப்போதே தாம் கொலைக்கான ஒப்பந்தத்தை பொலிஸாரிடமே வழங்கியுள்ளதை அவர்கள் உணர்ந்தனர்.
அவ்விருவரிடமும் விசாரணை செய்த போது, அவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக பேஸ் புக் ஊடாக காதலித்து வந்துள்ளதும், யுவராஜ் சவூதியில் வேலைபார்க்கும் போதே இந்த காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
அத்துடன் யுவராஜ் இலங்கைக்கு வருவதற்கு தேவையான வீசா உள்ளிட்ட அத்தனைச் செலவும் சரண்யாவினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காதல் கணவரையே தீர்த்துக்கட்ட முனைந்த சரண்யாவும் யுவராஜும் இன்று சிறைக் கம்பியை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். திருமணத்துக்கு அப்பாலான தவறான தொடர்புகள் நிரந்தரமில்லை. அது ஆபத்தானது. அழகான வாழ்வையும் அது அழித்து விடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
எம்.எப்.எம்.பஸீர்