சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 370,067 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடும் மழை,காற்று,  வெள்ளம், நிலச்சரிவு, மின்னல், போன்ற இயற்கை அனர்த்தங்களினால், 68 வீடுகள் முற்றாக அழிந்திருப்பதுடன், 1300 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சுமார் 160,000 பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி, கொழும்பு, காலி, குருநாகல, இரத்தினபுரி, கம்பகா, நுவரெலிய, மாத்தறை, களுத்துறை, புத்தளம், ஆகிய வெள்ளம் பாதித்த 10 மாவட்டங்களிலும், 208 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

அரநாயக்க பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் நிலத்தில் புதையுண்டன. இங்கிருந்த 450 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 16 பேர் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தனர். மீட்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்கா முழுவதிலும், வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வடக்கிலும், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மாவட்டங்களில் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பல கிராமங்களில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sri-Lanka-floods-1

Share.
Leave A Reply

Exit mobile version