‘தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம். சிலருக்கு நான் இறைவன், அரசன்.

1950 களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது.

ஆனால் , 1959 ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது. ’தலாய் லாமா தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

பிறகு , அவரே தொடர்கிறார். ‘ தலாய் என்பது கடல் என்று பொருள்படும் மங்கோலியச் சொல். லாமா என்றால் திபெத்திய மொழியில் , குரு.

சிலர் இரண்டையும் இணைத்து தலாய் லாமா என்றால் அறிவுக் கடல் என்று அர்த்தம் அளிக்கிறார்கள். ஆனால் இது சரியான அர்த்தம் இல்லை.

என்னைப் பொருத்தவரை ‘தலாய் லாமா ’ என்பது நான் வகிக்கும் ஒரு அலுவலகப் பதவிக்கான பெயர். நான் ஒரு சாதாரண மனிதன். திபெத்திய குடிமகன்.

பௌத்தத் துறவியாக வாழ முடிவெடுத்தவன். என்னை ‘ வாழும் புத்தர் ’ என்றும்கூட அழைக்கிறார்கள்.

திபெத்திய புத்த மதத்தில் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கு இடமில்லை. தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் மறுபிறவியை முடிவு செய்து கொள்ளும் உரிமை பெற்றவர்கள். அவ்வளவுதான்!

’திபெத்திய புத்த மதத்தின் குருவாகவும் , புத்தரின் அவதாரமாகவும் கருதப்படும் பதினான்காவது தலாய் லாமாவின் இயற்பெயர் டென்சின் கியாட்சோ.(Tenzin Gyatso)

பூர்வாசிரமப் பெயர் லாமா தொண்டூப். (Lhamo Thondup)  இவரது தாயார் , டேகி செரின். இயற்பெயர் , சோனம் சோமோ.

திபெத்தின் ஆம்தோ கிழக்குப் பகுதியில்  உள்ள சோங்கா சுர்க்கா   என்னும் குக்கிராமத்தில் உள்ள விவசாயக் குடும்பத்தில் 1901 ம் ஆண்டு டேகி செரின் பிறந்தார்.

எந்தக் குழந்தை பிறந்தாலும் அதன் எதிர்காலம் பற்றி ஆருடம் கேட்பது திபெத்தியர்கள் வழக்கம்.

குழந்தை பிறந்தவுடன் மடத்துக்குச் சென்று காட்டியபோது , எதிர்காலத்தில் மிகப் பெரிய பேரும் புகழும் உள்ள பிள்ளை இந்தப் பெண்ணுக்குப் பிறப்பான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

1905 ம் ஆண்டு குயாஹூ என்னும் இடத்துக்குக் குடிபெயர்ந்தார்கள். திபெத்தியப் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை என்பதால் சோனம் வீட்டிலேயே வளர்ந்தார்.

அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்வது , சமைப்பது , துணி துவைப்பது , பாத்திரம் கழுவுவது , வயல் வெளியில் வேலை செய்யும் அப்பாவுக்குச் சாப்பாடு எடுத்துச் செல்வது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

திபெத்தியர்களுக்கு தேநீர் குடிப்பதில் விருப்பம் அதிகம் என்பதால் ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாகச் சுவையான தேநீர் தயாரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சோனமும் தேநீர் மற்றும் ரொட்டி தயாரிக்கக் கற்றுக்கொண்டார்.

சோனமுக்கு பதின்மூன்று வயதானபோது சோக்யாங் செரின் என்பவருடன் திருமணம் நிச்சயமானது.

பிள்ளை வீட்டார் உடனே திருமணத்தை முடிக்க விரும்பினார்கள். ஆனால், சோனமின் தந்தையோ பதினாறு வயதான பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார்.

பதினாறு வயது முடிந்தவுடன் மடத்துக்குச் சென்று திருமண தேதியைக் குறித்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு முன் பிள்ளை வீட்டார் மணப்பெண் அணிவதற்கான துணிகளைக் கொடுத்தனர்.

பெண் வீட்டாரோ வீட்டில் இருந்த மணப்பெண்ணின் துணிகளை தீயிலிட்டுக் கொளுத்தி பெண் வீட்டை விட்டுப் போகும் சோகத்தை வெளிப்படுத்தினார்கள்.

1917 ம் ஆண்டு சோனம் மற்றும் சோக்யாங் செரின் திருமணம் இனிதே நடந்தது. புதிய பெயரும் சூட்டப்பட்டது. டேகி செரின். திபெத்திலும் மாமியார் கொடுமை இருந்தது. ஏச்சும் பேச்சும் மட்டுமின்றி அடி உதையும் வாங்கிக்கொண்டே குடும்பத்தை நடத்தினார் டேகி செரின்.

தினசரி இருபது மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. குழந்தை பிறந்து , மாமியாரும் தளர்ந்துபோன பின்னரே டேகி செரின் வசம் வீட்டின் முழுப் பொறுப்பும் வந்து சேர்ந்தது.

கொஞ்சம் வசதி வந்தவுடன் வீட்டைப் பெரிதாகக் கட்டிக் கொண்டார்கள். மழை நீர் இறங்கும் சார்புக் கால்வாய் , தண்ணீர் கொட்டும் மலைப் பாதை , கொடிமரம் ஆகியவை கொண்ட ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டனர்.

பூஜை அறையில் ஓர் அழகிய புத்தர் சிலையையும் நிறுவினார்கள். அறையில் பூஜை செய்யும் போது கொடிமரம் மூலமாக அவர்களுடைய வேண்டுதல்கள் விண்ணுலகத்தை அடையும் என்பது நம்பிக்கை.

ஒருமுறை சீனாவில் கடும் பஞ்சம் நிலவியது. அங்கிருந்தவர்கள் பிழைக்கவும் உயிர் வாழவும் இவர்கள் வசிக்கும் ஊருக்கு வந்தனர். பசிக் கொடுமையால் இறந்துபோன குழந்தையைக் கைகளில் சுமந்துகொண்டு இவர்கள் வீட்டு வாசலில் வந்து பிச்சை கேட்டார்கள்.

அப்போது சோக்யாக் செரின் அவர்களை நோக்கி ‘ கையில் இருக்கும் குழந்தையை புதைக்கப் போகிறீர்களா , எரிக்கப் போகிறார்களா அல்லது பறவைகளுக்கு உணவாக்கப் போகிறீர்களா ?’ என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தம்பதியர் அழுதுகொண்டே ‘ நீண்ட நாட்களாக உண்ண உணவு இன்றி தவித்துக்கொண்டிருக்கிறோம். எனவே , இப்போது இறந்துபோன எங்கள் குழந்தையைத்தான் சமைத்து உண்ணப் போகிறோம் ’ என்று சொன்னதும் டேகியும் சோக்யாக் செரினும் அதிர்ந்துபோனார்கள்.

பெற்ற குழந்தையையே உண்ணும் நிலைக்கு வறுமை அவர்களை வாட்டி வதைத்து இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் துடித்துப் போனார்கள்.

அவர்களை அன்புடன் உள்ளே அழைத்து கைவசம் இருந்த உணவை அவர்களுக்கு வழங்கினார்கள். மிகப் பெரிய வசதி இல்லாவிட்டாலும்கூட ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் இருவருக்கும் இருந்தது.

இந்த அன்பும் அரவணைக்கும் குணங்களும்தான் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளிடம் காணப்பட்டது. சோக்யாங் செரின் பின்பற்றும் கும்பம் மடாலயத்தின் டாக்ஸ்டர் ரின்போசே ஒரு வகையில் அவருக்கு மாமா முறை.

அவர் திடீரென ஒருநாள் மரணமடையவே குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். தனது சகோதரன் மீண்டும் தங்கள் குடும்பத்திலேயே பிறக்கவேண்டும் என்று சோக்யாங் செரினின் தாய் ஆசைப்பட்டார்.

அப்போதைய பதின்மூன்றாவது தலாய் லாமாவைச் சந்தித்து ஆருடம் கேட்டார்கள். டேகி செரின் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது , செவிலியர்கள் யாரும் உடனில்லை.

தொப்புள்கொடியைக்கூடத் தானே அறுத்தெறியவேண்டிய நிலை. பிரசவம் முடிந்து சில தினங்களில் , வீட்டு வேலைகளையும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த அளவுக்கு அசாத்தியமான மன உறுதியும் திடமான மனநிலையும் கொண்டவர். இவருக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஏழு குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்தன.

செரின் டோல்மா , துப்டீன் ஜிக்மே நோர்பூ , க்யாலோ தொண்டூப் , லோப்சங் சம்டீன் , லாமா தொண்டூப் , ஜெட்சுன் பெமா மற்றும் டெண்ட்ஜின் சோக்யால்.

முதல் குழந்தை பெண்ணாக அமைந்ததால் , குடும்பத்தில் அனைவரும் சோர்வடைந்தனர். விருப்பம் விரைவில் நிறைவேறியது. அடுத்து , ஆண் குழந்தை பிறந்தது. தலாய் லாமா சொன்ன குழந்தை இதுதான் புரிந்துகொண்டார்கள்.

துப்டீன் ஜிகே நோர்பூ என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்தார்கள். நேர்த்திக் கடனாக கும்பம் பௌத்த மடத்துக்கு ஆன்மிகப் பணிகளுக்காக அந்தக் குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் , டேகி செரினின் மாமியார் காலமானார். குடும்பத்தில் யாராவது மரணமடைந்தால் , அழக்கூடாது என்பது திபெத்திய வழக்கம்.

அதிகமாக அழுது , ஆர்ப்பாட்டம் செய்தால் , அந்த ஆத்மா மீண்டும் அதே குடும்பத்தில் பிறக்காது என்பது அவர்கள் நம்பிக்கை. தன் தாய் தங்கள் வீட்டிலேயே மீண்டும் பிறக்கவேண்டும் என்று சோக்யாங் செரின் விரும்பினார்.

புதைப்பது , எரிப்பது , ஆற்று நீரில் மிதக்கவிடுவது , கழுகுகளுக்கு இரையாக்குவது என நான்கு வழிகளில் இறந்தவரின் உடல் அப்புறப்படுத்தப்படும்.

இவற்றுள் கழுகு உள்ளிட்ட பறவைகளுக்கு இறந்த உடலை மலை உச்சியில் இருந்து வீசுவதைத்தான் திபெத்தியர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். ஆனால் சோக்யாங் செரின் தனது தாயின் உடலைத் தனது வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்தார்.

map-1024x682

·திபெத்தை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்.

வட மேற்கு சங்டாங் பகுதி முழுவதும் சுமார் 800 மைல்கள் பரப்பளவில் பாலவனம் படர்ந்திருந்தது. அங்கு விவசாயம் நடைபெறுவதில்லை. பழங்குடியினர் பரவலாக வசித்து வந்தனர்.

இதன் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்கள் யூ மற்றும் சாங். இவற்றின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் சங்கிலித் தொடர்போல் இமயமலை உள்ளது.

யூ சாங் கிழக்குப் பகுதியில் உள்ள மாகாணம் கம். மிகவும் செழிப்பான , அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி. இங்கிருந்து வடக்கே உள்ள ஆம்தோ மாகாணத்தின் ஒரு பகுதி , டக்ஸ்டர் கிராமம்.

கம் மற்றும் ஆம்தோ பகுதிகளுக்குக் கிழக்கே சீனாவின் எல்லை ஆரம்பமாகிறது. அவர்கள் வசித்தது மிகவும் பின் தங்கிய பகுதியில் என்பதால் பணப்புழக்கம் அதிகம் இல்லை. பண்டம் மாற்று வியாபாரம்தான் பிரதானம்.

தோட்டத்தில் அதிகமாக விளைவதைக் கொடுத்து , தேவையான தேயிலை , சர்க்கரை , பருத்தித் துணி , சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொள்வார்கள்.

உணவுப் பொருள்களுக்கு மாற்றாக , சில சமயம் , ஆடு மாடும் , குதிரையும் வாங்கி வருவார்கள். மலைப் பகுதிகளில் பயணம் செய்வதற்கு குதிரை  வசதியாக இருக்கும்.

வீட்டில் ஆடு , மாடு , கோழி , குதிரைகளுடன் கவரி எருமைகளையும் வளர்த்தனர். கவரி எருமை ( Yak ) கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடிகளுக்கு மேலும் உயிர் வாழும்.

பாரம் சுமக்கும் , பால் கொடுக்கும் நண்பன். ‘ உடலுக்குத் தேவைப்படும் சத்துப் பொருள்கள் நிரம்பிய இந்தப் பாலைக் குடித்து வளர்ந்ததால்தான் இந்த வயதிலும் இன்னும் சுறுசுறுப்புடன் என்னால் மலைப் பகுதிகளில் ஏறி இறங்க முடிகிறது ’ என்று தலாய் லாமா அடிக்கடி நினைவுகூர்வது வழக்கம்.

House where the 14th Dalai Lama was born

அப்போது திபெத் சுதந்தரமாக இருந்தது. 1935 ஜூலை 6 அன்று டக்ஸ்டர் என்னும் கிராமத்தில் வைக்கோல் பரப்பப்பட்ட அழுக்கான தரையில் டென்சின் கியாட்சோ பிறந்தார்.

அவரது இயற்பெயர் லாமோ தொண்டுப். இதன் பொருள் வேண்டியதைக் கொடுக்கும் தேவதை. வேண்டியதை அவர் கொடுத்தாரா ? அவர் ஆரம்ப வாழ்க்கையை ஆராய்ந்தால் ஆச்சரியங்களே காணக் கிடைக்கின்றன.

The Dalai Lama, about 4 years old, in 1939

டென்சின் கியாட்சோ (Tenzin Gyatso) பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்புவரை கடுமையான பஞ்சம். ஆனால் , இவர் பிறந்தவுடன் பலத்த மழை பெய்து வாய்க்கால் வரப்புகள் நிரம்பி வழிந்தன.

காய்ந்துபோன விளை நிலங்கள் முளைத்து எழும்பின. நீண்ட காலமாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு , படுத்த படுக்கையாக இருந்த தந்தை , குழந்தை பிறந்த சில தினங்களில் , எழுந்து நடமாடத் தொடங்கினார்.

அப்போதே குடும்பத்தினருக்குத் தெரிந்துவிட்டது. இது சாதாரண குழந்தை இல்லை.

 கடவுளைக் கண்டறிதல்

தலாய் லாமா தேர்வு செய்யப்படுவதில்லை, கண்டுபிடிக்கப்படுகிறார்.

இந்தத் தேடல் தியானத்தில் தொடங்குகிறது. திபெத்தில் உள்ள ஒரு புனித ஏரியின் பெயர் லாமோ லாட்சோ.

இந்த ஏரியை பால்டன் லாமோ என்னும் தேவதை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. தலாய் லாமாவைக் கண்டெடுக்கும் முன்பு , இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து ரீஜெண்ட்டுகள் தியானம் செய்வது வழக்கம். தியானம் செய்பவரின் கனவில் , தேவதை தோன்றுவார்.

அடுத்த தலாய் லாமாவை அடையாளம் காட்டுவார்.

இன்ன இடத்தில் அவர் வசிக்கிறார் என்று தேவதை கை காட்டுவதில்லை. மாறாக , சில குறிப்புகளைத் தேவதை அளிப்பார்.

சங்கேத வடிவில் அவை அமைந்திருக்கும். உதாரணத்துக்கு , ஏரிக்கு அருகில் ஒரு பள்ளம் தோன்றி அதற்கு மேலே மேகங்கள் பல வடிவங்களில் தோன்றும்.

இந்த வடிவங்கள் அனைத்தும் குறிப்புகள். அடுத்த தலாய் லாமா யார் என்பதற்கான விடை இதில் அடங்கியிருக்கும்.

இந்தக் குறிப்புகளைச் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டால் , விளக்கங்கள் கிடைக்கத் தொடங்கும்.

ஒவ்வொரு தலாய் லாமாவும் ஒவ்வொருவிதமாக அடையாளம் காட்டப்படுவார். பீடத்தில் இருக்கும் தலாய் லாமா இறந்துவிட்டால் , அவரை எரிக்கும் புகை எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் குறித்து வைத்துக்கொள்வார்கள்.

குறிப்பிட்ட திசையில் உள்ள பகுதிகளை ஆராய்வார்கள். அங்கே உள்ள குழந்தைகளை உன்னிப்பாகப் பார்வையிடுவார்கள். சோதனைகள் செய்வார்கள்.

பிறகு , முடிவெடுப்பார்கள். முன்னரே பார்த்தபடி , டென்சின் கியாட்சோ பிறந்தபோதே சில அடையாளங்கள் பளிச்சென்று வெளியில் தெரிந்துவிட்டன.

தந்தை குணமடைந்தது , மழை பொழிந்தது ஆகிய இரு சம்பவங்கள் போக மூன்றாவதாக ஓர் அதிசயமும் நடந்தது.

மறைந்த பதின்மூன்றாம் தலாய் லாமாவின் பூத உடல் தங்க சிம்மாசனத்தில் உட்காரும் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு நேரம் திடீரென்று அவர் தலை தெற்கில் இருந்து கிழக்கே திரும்பியது. சரி செய்தனர். மீண்டும்  , தலை கிழக்கில் திரும்பியபோது புரிந்துவிட்டது.

கிழக்கு திசையை நாம் கவனிக்கவேண்டும். டென்சின் கியாட்சோவின் ஊர் இருந்தது மிகச் சரியாக , கிழக்கில்.

பதினான்காம் தலாய் லாமாவைத் தேர்வு செய்ய திபெத் தேசிய பாராளுமன்றம் ரீஜெண்ட் ஒருவரை நியமித்து பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தது.

அவர்தான் புதிய தலாய் லாமாவைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். சரி , யார் இந்த ரீஜெண்ட்கள் ? இவர்கள் ஆன்மிக பௌத்த லாமாக்கள். அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள்.

 அனைத்துத் திறமைகளும் கொண்ட ரெடிங் ரின்போசே ( Reting Rinpoche ) இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

சம்பிரதாயப்படி , முதல் குறிப்பைப் பெற இவர் லாமோ லாட்சோ ஏரிக்குச் சென்றார். அங்கே அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார்.

அப்போது பலத்த காற்று வீசியது. நீல நிற தண்ணீர் வெள்ளை நிறமாக மாறியது.

அந்த வெள்ளைத் தண்ணீரில் கருப்பு நிறத்தில் பெரிய பள்ளம் தோன்றியது. அதன் மேலே கருமேகங்கள் பல வடிவங்களில் விரிந்தன. அவர் கண்களுக்கு மட்டும் தெரியும் வகையில் அ , க , ம என்னும் மூன்று திபெத்திய எழுத்துக்கள் தோன்றி மறைந்தன.

கூடவே , பல காட்சிகள் அடுத்தடுத்து கண்முன் விரிந்தன. மூன்று அடுக்குகள் கொண்ட பொற்கூரை வேய்ந்த பௌத்த மடாலயம். ஒரு கிராமப்புற வீடு. மழை நீர் இறங்கும் சார்புக் கால்வாய். மலைப் பாதை.

கொடிமரம். வீட்டு வாசலில் ஒரு கருப்பு , வெள்ளை நாய். ரெடிங் இந்தக் காட்சிகளைத் தொகுத்துக்கொண்டார். பதின்மூன்றாம் தலாய் லாமா இறந்தபோது அவர் தலை திரும்பிய கிழக்குத் திசையைக் குறித்துக்கொண்டார்.

அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்தார். சில விஷயங்கள் புரிந்தன. ‘ அ ’ என்பது ஆம்தோ என்ற பகுதியைக் குறிக்கும். ‘ க ’ என்பது மூன்றடுக்கு கொண்ட கும்பம் பௌத்த ஆலயம்.

‘ ம ’ என்பது கர்மா ரோல்பாய் தோர்ஜே என்னும் இடத்தைக் குறிக்கிறது.

இந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு தலாய் லாமாவைத் தேட ஆரம்பித்தார்கள். ஆம்தோ பகுதிக்கு மட்டுமே சென்றால் சீனர்களுக்குச் சந்தேகம் வரும் என்பதால் திபெத்தின் மற்ற மூன்று பகுதிகளுக்கும் ஒப்புக்குச் சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்புகளைக் கொண்டு சரியான குழந்தையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைதான் தலாய் லாமாவா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்.

தொடரும்…

https://en.wikipedia.org/wiki/14th_Dalai_Lama 14th Dalai Lama

Share.
Leave A Reply

Exit mobile version