பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற இளைஞரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
தெற்கு பிரான்சிலுள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த புதன்கிழமை வெளியே சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.
அந்த பெண் லிப்டில் செல்லும் போது அவரிடம் குறித்த இளைஞர் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து தனது முழு பலத்தையும் காட்டி அந்த இளைஞரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார் அந்த பெண்.
ஆனால் இளைஞரின் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. பின்னர் இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என நினைத்த அப்பெண் சாமர்த்தியமாக அந்த நபரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்துள்ளார்.
இதனால் உற்சாகமடைந்த இளைஞர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் முத்தம் கொடுத்துள்ளார்.
இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பலம் முழுவதையும் திரட்டி இளைஞரின் நாக்கை பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார்.
வலியால் துடித்த இளைஞர் லிப்ட் நின்றதும் இரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்து, லிப்ட்டில் சோதனை செய்தபோது, அங்கு இளைஞரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பாதி நாக்குடன் தப்பிய நபரை அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் மீது பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.