யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் பலரையும் ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் தேடப்பட்ட யுவதி சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதான இவர் சொந்த முகவரியற்ற நிலையில் இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி பல இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை மோசடி செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இதனால் குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த யுவதி தலைமறைவாகியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நகரப் பகுதியில் உள்ள மற்றுமொரு இளைஞருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தி திருமணம் வரையில் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகமடைந்த குறித்த பெண்ணை காதலித்த நபர் அப்பெண்ணிடம் ஊடகங்களில் உங்கள் படம் அண்மையில் வந்ததாக குறிப்பிட்டார்.
அவ்வேளை அப்பெண் ஊடகங்கள் தவறாக தனதுபுகைப்படங்களை பிரசுரித்ததாக தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த அந்நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அப்பெண்ணை பலவந்தமாக அழைத்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பெண் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் மோசடியாக பெற்ற பணம், நகைகள், பொருட்கள் தொடர்பான சகல விடயங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.