வட பகுதியில் காணிகள் அற்ற நிலையில் வாழும் மக்களுக்கு பூமி தானம் செய்வதற்கு புலம்பெயர் மக்கள், ஆலய பரிபாலன சபைகள் மற்றும்  மக்கள்  பிரதிநிதிகள்  முன்வரவேண்டும் என்று அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தென்மராட்சியில் காணிகள் அற்ற பல குடும்பங்களுக்கு ‘சிவகுருநாதபீடம்’ எனப்படும் வேதாந்தமடம் காணிகள் வழங்கியுள்ளதைப் போன்று தங்கள் பொறுப்பில் இருக்கும் காணிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏனையோரும் முன்வரவேண்டும் என்று மேற்படி சபை கோரியுள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் வீடுகள் அற்ற மக்களுக்கு அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் வீட்டுத்திட்டங்களை வழங்கி வருகின்றன.

ஆனால், பல இடங்களிலும் மீள்குடியேறியுள்ளவர்கள், நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு காணிகள் இல்லாமையால் அவர்கள் வீட்டுத்திட்டத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கு அந்த இடங்களில்கூட சொந்தமாகக் காணி இல்லாமையால் அரசினால் வழங்கப்படும் இலவசத் திட்டங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பல ஆண்டு காலமாக எமது மக்கள் அனுபவித்து வந்த துயர வாழ்கையில் இருந்து அவர்களை விடுவிக்க மக்கள் பிரதிநிதிகள், புலம்பெயர்ந்தவர்கள், சமய பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புலம்பெயர்ந்தவர்கள், ஆலய பரிபாலன சபைகளுக்கு அதிகமான காணிகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முடிந்தளவு பூமி தானம் வழங்குவதற்கு அவர்கள் முன்வரவேண்டும்.

பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இதன்மூலம் வீட்டுத்திட்டத்தை பெற்று தமது வாழ்வை முன்னேற்றுவதற்கு இது பேருதவியாக இருக்கும்.

யாழ். குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் மற்றும் ஆலய அறக்கட்டளை நிறுவனங்களுக்கென பல ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. காணி இல்லாமல் பரிதவிக்கும் எமது மக்களுக்கு அவற்றை கொடுத்து உதவவேண்டும்.

குறிப்பாக சிவகுருநாதபீடத்தினர், தென்மராட்சியில் காணிகள் அற்ற பல குடும்பங்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்து உதவியுள்ளார்கள்.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டு சமய அமைப்புக்கள், ஆலயங்கள் தமக்கென அளவுக்கதிகமாக இருக்கும் காணிகளை தானம் செய்வதற்கு முன்வரவேண்டும்.

காணிகள் அற்ற மக்களின் விவரங்களை மக்கள் எமது சபையில் பதிவு செய்திருக்கின்றனர்.

எனவே, அந்த மக்களுக்கு காணி வழங்க விரும்புவோர், 0770204148 என்ற அலைபேசியினூடாக சைவ மகாசபையின் தலைவர் சிவதிரு எஸ்.சோதிமூர்த்தியுடன்  தொடர்புகொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version