மாதவிடாய் குடிசைகள் – தீண்டதகாத நேபாள பெண்கள்!

மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை;
சப்ரிதா போகட்டிக்கு இன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்.

2_P10906001சப்ரிதா போகட்டிக்கு இன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்!

சப்ரிதா போகட்டிக்கு அன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்.

ஏறக்குறைய தனிமைக்குடித்தனத்திற்கு, குளிரும் பனியுமான அந்த மலைப்பிரதேசத்தில் இனி அவளுக்கு அடைக்கலம் தரப்போவது எது? 4X3 அளவேயுள்ள அறை தான்.

இது மாதவிடாய் குடிசை என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே ஒரு இந்து நாடு என்று பெயர்பெற்ற நேபாளத்தின் மத்திய மேற்கு மலைப்பகுதியில் உள்ள நிறைய கிராமங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ள ஒரு கொடூர நிகழ்வு.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ளது அச்சாம் மற்றும் தோட்டி மாவட்டங்கள்.

கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 3800 மீட்டர் உயரம் வரை அமைந்துள்ள இந்தப்பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் செல்வது அவ்வளவு எளிதல்ல.  வாகனங்களுக்கு என்ன நிலையோ அதை விட மோசமான நிலை தான் அறிவியலுக்கும்…என்னது டிஜிட்டல் யுகமாகிக்கொண்டிருக்கும் இந்தப் புவியில் அறிவியல் நுழையாத இடமா?

யார் இதற்குப் பொறுப்பு என்று பதற வேண்டாம்…. நமக்கு நன்கு அறிமுகமான அந்த ஒன்று தான் இதற்கும் மூலக்காரணம்.

குடாப்பில் அடைக்கப்பட்ட கோழி போல அமர்ந்திருக்கும் சப்ரிதாவுக்கு அவருடைய உறவினரான சிறுமி ஒருவர் உணவு தருகின்றார்.

சில சமயங்களில் இங்கே தான் பிரசவமும் நடக்குமாம்.

பிரசவிப்பதும் தீட்டாகக் கருதப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பால் மற்றும் மாமிச உணவுகள் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே ரொட்டி மட்டுமே தரப்படுகிறது. கொடுப்பவர் மிகவும் கவனமாகக் கொடுக்க வேண்டும், தப்பித்தவறி கைபட்டுவிட்டால் அது தீட்டாகிவிடும்.

இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த நடைமுறைக்கு எந்தச் சாதியும் விதிவிலக்கல்ல.

இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.

வீட்டிற்கு அருகில் செல்லக்கூடாது, கோவிலுக்குச் செல்லக்கூடாது.

பொதுவான தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.; தான் பெற்ற குழந்தைகளை மட்டுமே தொடலாம், ஆனால் மற்றவர்களைத் தொடக்கூடாது..

ஏன் இந்த அவல நிலை?? இது காலங்காலமாகத் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சாரமாகும்.

இதை “CHHAUPADI” – “சாவ்பாடி” என்கின்றனர். “சாவ்” என்றால் “தீண்டத்தகாதது”  ‘பாடி” என்றால் “இருத்தல் நிலை” – “BEING” என்று பொருள் படும்.

பூப்பெய்த பெண்ணிற்கு மாதவிடாய் வரும்போது இவர்களின் மரபுப்படி அவர் ”சாவ்பாடி” ஆகிறார்.  அதாவது தீண்டத்தகாதவராக….

2006-ம் ஆண்டில் நேபாள அரசு இந்த மூடப்பழக்க வழக்கத்தை ஒழிக்கும் வண்ணம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் இந்தப் பழக்கம் இன்னும் இந்தப் பகுதிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதால் இன்னும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது.

இந்த மாதவிடாய் குடிசை பெரும்பாலும் வீட்டிற்கு அருகில் அதாவது வீட்டிற்கு முன்புறம் அல்லது பின்புறம் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் மாட்டுக்கொட்டகை அருகில் அமைகிறது.

மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்தக் குகைக்குள் நுழைந்து காயம் படாமல் வருவது மிக மிக அரிது.

கூனிக் குறுகி தான் அமரமுடியும். இதில் கொடுமை என்னவென்றால் சில நேரங்களில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இங்கே தங்கவேண்டியிருக்கும்.

ஏனென்றால் பலருக்கு இந்த மாதவிடாய் குடிசை கட்டும் அளவுக்கு வசதியில்லை. கடுங்குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி மாளாத துன்பங்கள் எத்தனை எத்தனை…மாதவிடாய் காலத்தில் வரும் மன அழுத்தம், சோர்வு, உடல்வலி  இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியில்லை.

21-ம் நூற்றாண்டிலும் இத்தனை பிற்போக்குத் தனங்களா? என்று வியக்க வேண்டாம்…பேமா லக்ரி என்று பெண்கள் நல ஆர்வலர் கூறுகிறார்… “மக்களுக்கு இங்கே மாதவிடாய் பற்றிய அறிவியல் புரிதல் வரவேண்டும்.

மாதவிடாய் என்றால் இங்கே அசிங்கமானது, அவலமானது என்ற ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது முதலில் உடைத்தெறியப்பட்டால் தான் இந்த அவல நிலையை அகற்ற முடியும்.பெரும்பாலான பெண்களிடம் மாதவிடாய் ஏன் வருகிறது  என்று கேட்டபோது  அவர்களில் ஒருவருக்கு கூட  இது குறித்து எதுவும் தெரியவில்லை” என்று கவலைப்படுகிறார்.


(பேமா லக்ரி – கடந்த 10 வருடங்களாக தன்னாட்டு மக்களிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை அகற்ற போராடும் சமூக ஆர்வலர்)

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி என்பவர் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பேச சம்மதித்தார். மற்றவர்களைப் போலவே இவரும் இந்தியாவில் வேலை செய்கிறார்.

விடுமுறையை முன்னிட்டு வந்திருக்கும் இவர் பேசுகையில் “இனி என்னுடைய குடும்பத்தினர், மாதவிடாய் குடிசைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக வீட்டிற்குள்ளேயே ஒரு மாதவிடாய் குடிசை (பதுங்கு குழி) போன்று ஒன்றை அமைத்துள்ளேன்.

( இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாகும்: படத்தில் காண்க). சில சமயங்களில் 3 முதல்  4பேர் வரை இதில் தங்க அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் அவரவர் வீட்டிலிருந்து தேவையான துணிமனிகளை எடுத்து வர வேண்டும்”.

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி

சரி ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று அவரிடம் கேட்டபோது “கடவுளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறோம். மாதவிடாயின் போது இரத்தப் போக்கு இருப்பதால் அது கடவுளுக்கு எதிரானது, எனவே வீட்டிற்குள் அனுமதிப்பது சரியல்ல” என்கிறார்.

இந்து மதத்தில் புரையோடிப்போன விழுமியங்கள் இன்னும் இங்கே நடைமுறையில் இருப்பதைத் தான் நாம் காண்கிறோம். மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராயாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதையே காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இவர்களின் இந்து மதம்.

இந்த ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது எதார்த்தமாக வயல்வெளிகளில் குறுக்கிட்டுச் சென்ற சில மாணவிகளைச் சந்திக்க நேர்ந்தது.

அவர்களில் ஒருவர் மட்டுமே தனிப்பாதையில் நடந்து சென்றார். என்னவென்று விசாரித்த போது தான் அவர் நடந்து சென்றது மாதவிடாய் வந்தவர்கள் உபயோகிப்பதற்கான தனிப்பாதை, மற்ற மாணவிகள் நடந்து சென்ற இடம் புனிதமான ஒன்றாகக் கருதப்படுவதால்  இவர்களுக்கென்று மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் பேச மறுத்து விட்ட நிலையில் பாக்கு குமாரி பிஸ்தா என்பவரையும் அவரது தாயையும் சந்திக்க நேர்ந்தது; நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பாக்கு குமாரி பிஸ்தா பெண்கள் நல ஆர்வலர் பேமாவிடம் பேச சம்மதித்தார்; மேலும் அவருடைய மாதவிடாய் குகையையும் காண்பித்தார்.

(பாக்கு குமாரி பிஸ்தா – பலர் பேச மறுத்தனர், இவர் சிறிது தயங்கிய பின்னர், நம்மிடம் பேச தொடங்கினார். அவருடைய மாதவிடாய் குடிசையை காட்டினார்.)

 

கேள்வி: உங்களின் வயது என்ன?
பதில்: 16

கே: பள்ளிக்குச் செல்கின்றீர்களா?
ப: இல்லை, 6 வயதிலிருந்து நின்றுவிட்டேன்

கே: ஏன் நின்றீர்கள்?
ப: ம்ம்ம்ம்ம்……..வீட்டு வேலை செய்ய வேண்டும்; எனவே நின்றுவிட்டேன்

கே: அம்மாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பள்ளிக்குச் செல்லவில்லையா?
ப: ஆம்

கே: சரி. என்ன வேலையெல்லாம் செய்கின்றீர்கள்
ப: புல் அறுப்பேன்; பாத்திரங்கள் கழுவுவேன், வீட்டைச் சுத்தம் செய்வேன்

கே: ஆக மாதவிடாய் காலங்களில் உன்னால் உன்னுடைய தாய்க்கு உதவ முடியாதில்லையா?
ப: ஆம்

கே: மாதவிடாய் காலங்களில் நீ வேலை செய்ய அனுமதிக்கப்படுவாயா?
ப: ஆம்

(பாக்கு குமாரி பிஸ்தாவின் மாதவிடாய் குடிசை)

கே: வீட்டில் நுழைய அனுமதி உண்டா?
ப: இல்லை

கே: இது உன்னுடைய வீடு; அங்கே நுழைய அனுமதி மறுக்கப்படுவது தவறுதானே?
ப: தவறு தான்

கே: பிறகு வீட்டுக்குள்ளே செல்ல வேண்டியது தானே?
ப: நான் உள்ளே சென்றால் கெட்டது நடக்கும்!

கே: என்ன விதமான கெட்டது நடக்கும்?
ப: பாம்பு வரும், மேலும் ஏதாவது ஒரு கெட்ட செயல் நடக்கும்

கே: மற்ற சிறுமிகளும் இதே போலத்தான் இருக்கின்றார்களா?
ப: ஆம்

கே: இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறாயா?
ப: ஆம்

பெரும்பாலான பெண்கள் இந்த மூடப்பழக்கவழக்கத்தை விரும்பவில்லை என்றாலும் இது தங்கள்மேல் திணிக்கப்பட்ட ஒன்று என்பதாலும் இதற்கு மூலக்காரணம் மதம் சம்பந்தப்பட்ட ஒரு வகையான புனிதக் கருத்து என்பதாலும், மேலும் இதை மீறும் பட்சத்தில் குடும்ப உறுப்பினருக்கோ, உடைமைகளுக்கோ, ஊருக்கோ, ஏன் நாட்டுக்கே கூட இழப்புக்கள் கடுமையாக இருக்கும் என்ற பயம் காரணமாகவும் இதை வெளிப்படையாக எதிர்க்கும்  மனநிலையில் இவர்கள் இல்லை.

(சமீலா புல் – மாதவிடாய் குடிசையில் மர்மமான முறையில் இறந்த சிறுமி)

இந்தப் பயத்திற்கான சாட்சியாக அந்தக் கிராமத்தில் வாழும் யாக்கியராஜ்  புல் என்பவரின் மூத்த மகளான சமீலா புல் என்ற சிறுமியின் மரணம் உள்ளது.

அவருடைய தாயார் இதுகுறித்துக் கூறுகையில் “ நாங்கள் மாதவிடாய் சமயங்களில் வீட்டிற்குள்ளேயே உறங்கினோம், இதனால் என் கணவர் ஊராரால் கடுமையாகத் தூற்றப்பட்டு குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

இதைக் கண்டு பயந்த என் மூத்த மகள் என்னிடம் “ அம்மா! நான் மாதவிடாய் காலங்களில் வெளியிலேயே படுத்துக்கொள்கிறேன்! இல்லாவிட்டால் ஊராரின் பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும்” என்று பிடிவாதமாகக் கூறி மாதவிடாய் குடிசைக்கு ஒரு நாள் இரவு சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை நான் அவளை எழுப்பச்சென்ற போது ஒரு கை வயிற்றைப் பிடித்தவண்ணம் குப்புறப் படுத்து கிடந்தாள்.  இன்னொரு கையைத் தலைமேல் வைத்திருந்ததைப் பார்த்த போது அமைதியான ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பது போன்று தோன்றியது,

ஆனால் நான் நீண்ட நேரம் அழைத்தும் அவள் எழுந்திருக்கவில்லை.  எனவே சிறிது பதட்டத்துடன் சென்று அவளைத் நேராகத் திருப்ப முயற்சித்த போதுவாயில் நுரை தள்ளியிருந்தது கண்டு மீள முடியாத அதிர்ச்சியில் நொறுங்கி விட்டேன்.”…

சமீலா புல்லின் மாதவிடாய் குடிசை

இதுவரை அவர் எதனால் இறந்தார் என்பது தெரியவில்லை என்றாலும் அவளின் பெற்றோர் கூற்றுப்படி மிகவும் குளிராக இருந்ததால், காற்று புக முடியாமல் அந்த அறையை முழுவதுமாக மூடிவிட்டதால் மூச்சுத்திணறி இறந்திருக்கவேண்டும் என்று நம்புகின்றனர்.

யாக்கியராஜ் இந்த முறை தெளிவாக உள்ளார். இனிமேல் யாரையும் வீட்டை விட்டு வெளியே தங்க அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்.  ஏனென்றால் அவருக்கு இன்னும் 6 பெண் குழந்தைகள் உள்ளன.

நேபாள தினசரி செய்திகளில் வந்துள்ள தகவல்களின்படி பெரும்பாலானவர்கள் கடுங்குளிரினாலோ அல்லது பாம்புகடித்தோ இறப்பதாகவும், மேலும் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் தெரிகிறது.

இதை முன்னிட்டே நேபாள அரசாங்கம் 2006ம் ஆண்டு “சாவ்பாடியை” ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றியது. நிறைய கிராமங்களில் “சாவ்பாடி” முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இன்னும் இந்த அவல நிலை தொடர்கிறது.

சில இடங்களில் மாதவிடாய் குடிசை இடித்து நொறுக்கப்பட்ட பிறகும் தொடர்கிறது; இந்த நிலையில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக மாறுகின்றது.

ஏனென்றால் உடைத்தெறியப்பட்ட மாதவிடாய் குடிசை மீண்டும் எழுப்பப்படவேண்டும் இல்லாவிடில் வெட்ட வெளியில் உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சரி! மீண்டும் சப்ரிதா போகட்டியிடம் வருவோம், தீண்டத்தகாதவராக அறியப்பட்டவர்,  எப்படி மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறார்.

இருக்கவே இருக்கின்றது இந்து மதத்தின் புனிதப்பசு…ஐந்தாம் நாள் முடிவில் சப்ரிதா குளிக்கவேண்டும், அதோடன்றி தான் பயன்படுத்திய அத்தனை துணிகளையும் தானே துவைக்க வேண்டும்.

பிறகு அவருடைய உறவினரோ அல்லது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னி கழியாத பெண் ஒருவர் இந்து மதத்தில் புனிதமாக ஒன்றாகக் கருதப்படும் பசுவின் மூத்திரத்தை ஒரு டப்பாவில் பிடித்து அதை சப்ரிதா கைகளில் ஊற்ற, சப்ரிதா அதைப் பருகிவிட்டு தலையில் தெளித்துக் கொள்கிறார்.

பிறகு அந்தச் சிறுமி அவள் வீட்டையும் அடுத்ததாக சப்ரிதா துவைத்து வைத்த துணிகளின் மீதும் புனித மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துகிறாள். இனி அவள் புனிதமடைந்து வீட்டிற்குள் அன்று முதல் அனுமதிக்கப்படுகிறாள், அடுத்த மாதவிடாய் வரும் வரை…..


5 நாட்களுக்கு பிறகு, திருமணமாகாத பெண்ணைக்கொண்டு எடுத்துவரப்படும் மாட்டு மூத்திரத்தை கொண்டு தூய்மைப்படுத்தும் முறை

மீண்டும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்யவதற்கு மாட்டு மூத்திரத்தை குடித்து புனிதமான பின்பே வீட்டிற்குள் நுழைய வேண்டும்

தொகுப்பு, தமிழாக்கம்: வரதன்.

தொடர்புடைய பதிவுகள்:

Share.
Leave A Reply

Exit mobile version