கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார்.

இந்தப் பரபரப்பான சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை, சம்பூர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சம்பூர் மகாவித்தியாலத்தில், சிறிலங்கா கடற்படை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கப்பட்ட ஆய்வுகூடத் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நிகழ்வு அரங்கில் இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சரை, ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ மேடைக்கு அழைத்தார்.

வரிசையில் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டிருந்த மாணவர்களைத் தாண்டி வரமுயன்ற முதலமைச்சரை, அங்கேயே நிற்குமாறு சம்பூர் விதுர கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, கப்டன் ரஞ்சித் பிரேமரத்ன, சைகை காட்டினார்.

இதனால் ஆவேசமடைந்த முதலமைச்சர் நசீட் அகமட், மேடையில் ஏறி நின்று, சிறிலங்கா கடற்படை அதிகாரியை கண்டபடி திட்டினார்.

“நெறிமுறை என்னவென்று தெரியாவிட்டால் வெளியே போ முட்டாளே. என்னைத் தடுத்து நிறுத்த நீ யார்? நான் தூதுவரை அதிகம் மதிக்கிறேன். ஆனால் நெறிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.” என்று ஆவேசமாக அவர் திட்டினார்.

முதலமைச்சர் நசீரை ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ ஆசுவாசப்படுத்த முயன்ற போதும், அவர் திட்டிக் கொண்டிருந்தார். அமெரிக்கத் தூதுவரும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, கிழக்கு முதலமைச்சர் அவமானப்படுத்தி விட்டதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனர், தாம் முதலமைச்சரை சமாதானப்படுத்த முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கடற்படை அதிகாரி தவறிழைத்திருந்தால், அதுபற்றி சிறிலங்கா கடற்படைத் தளபதியிடம் முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முதலமைச்சர் தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்த போதும், கடற்படை அதிகாரி பதிலுக்கு எதையும் பேசாமல் மௌனமாக இருந்தாகவும், இது பாதுகாப்புப் படைகளின் ஒழுக்கத்தை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சம்பூரில் நடந்த நிகழ்வில் கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தமக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

(நைனா அஹமட் நஷீர் அதிகாரியை சிங்களத்தில் அல்லது தமிழில் திட்டாமல் ஏன் இங்கிலீசில் திட்டுகிறார் தெரியுமா?? வெள்ளைக்கார அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு படம் காட்டியிருக்கிறார். முதலமைச்சர் பேசுகின்ற லோக்கல் ஆங்கிலம் அமெரிக்க தூதருக்கு விளங்கியிருக்குமோ தெரியவில்லை??)

“நான் ஏன் கடற்படை அதிகாரியை திட்டினேன்?” : நடந்ததைக் கூறுகின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீர்

தான் கடற்படை அதிகாரியை திட்டியதாக கூறப்படும் விவகாரம் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீர் தெரிவிக்கின்றார்.

“அந்த நிகழ்வின் போது ஆளுனர் தன்னை மேடைக்கு அழைத்ததால் நானும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் மேடைக்கு சென்றோம். இதன் போது , அங்கிருந்த கடற் படை அதிகாரி ஒருவர் தன்னை தடுத்து நிறுத்தினார்.

அப்போது தான் யார் என்று குறித்த அதிகாரிக்கு தௌிவு படுத்தியதை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி தன்னிடம் மன்னிப்பு கேட்டார்.

எவ்வாறாயினும் , காணொளியில் பதிவாகியிருக்கும் சம்பவம் அதனை தொடர்ந்து இடம் பெற்றதாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தான் தனிப்பட்ட முறையில் கடற்படையை அல்லது குறித்த அதிகாரியை அவமானப்படுத்தும் நோக்கில் இதனை மேற்கொள்ள வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் கடற்படையை பாதித்திருந்தால் இது தொடர்பாக தாம் வருந்துவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அக்ஷமட் நஷீர் தெரிவித்துள்ளார்.

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதல்வர் திட்டித்தீர்த்த காணொளியொன்று இணையத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.

கடந்த 20 ம் திகதி திருகோணமலை – சாம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் முதலமைச்சர் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் இது தொடர்பில் நாம் அவரிடம் வினவியிருந்தோம்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

யாராக இருந்தாலும் மாகாணத்தின் நெறிமுறைகள் , கௌரவம் மதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றதென இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தனிப்பட்ட ரீதியான பிரச்சினை இல்லை என அவர் இதன்போது தெரிவித்த துடன், மாகாணத்தின் கௌரவத்தை காக்கவேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் , நான் பேசியதால் தனிப்பட்ட ரீதியாக புண்பட்டிருந்தால் மனம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அளித்த பதில்:

Share.
Leave A Reply

Exit mobile version