14வது தலாய் லாமா (Dalai Lama) கண்டுபிடிக்கப்பட்டார்.
பரீட்சித்துப் பார்ப்பதற்கு சில வழிமுறைகள் இருந்தன. பதின்மூன்றாம் தலாய் லாமா வைத்திருந்த சில பொருள்களை ரெடிங் ரின்போசே தன்னுடன் எடுத்துச்சென்றார்.
அந்தப் பொருள்களைப் போலவே உருவாக்கப்பட்டிருந்த போலிகளையும் உடன் கொண்டு சென்றார்.
அவர் கொண்டு சென்றவை , தியானத்தின்போது பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் கருப்பு மணிகள் கொண்ட இரண்டு ஜெப மாலைகள் , இரண்டு கைத்தடிகள் , இரண்டு உடுக்கைகள்.
நீண்ட பயணத்துக்குப் பிறகு , குழுவினர் ஆம்தோ பகுதியை அடைந்தனர். அங்கே இருந்த பஞ்சன் லாமா (இவரைப் பற்றிப் பின்னால் பார்க்கப்போகிறோம்) இவரை வரவேற்று உபசரித்து , அம்தோ பகுதியில் உள்ள மூன்று குழந்தைகள் பெயரைச் சொல்லி அவர்களைப் பரிசோதிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
அவர்கள் அனைவருமே கும்பம் பௌத்த ஆலயம் அருகே வசித்தவர்கள். அடுத்த தலாய் லாமாவாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டவர்கள்.
ஆம்தோ , கும்பம் ஆகிய பெயர்களைக் கேட்டதும் ரெடிங் ரின்போசே (Reting Rinpoche) மகிழ்ச்சியில் துள்ளினார்.
ஏற்கெனவே கிடைத்த குறிப்புகளோடு ஒத்துப்போகும் பெயர்கள் என்பதால் விரைவில் தன் பணி முடிவடையும் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
ஆம்தோ பகுதியை நிர்வகிக்க சீனர்கள் மா ஃபூஃபெங் என்னும் முஸ்லிம் ஆளுநரை நியமித்திருந்தனர்.
ரெடிங் ரின்போசே , தங்கம் , பட்டு , பழங்கள் ஆகியவற்றை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து அவரிடம் கொடுத்து வணங்கி மரியாதை செலுத்தினார்.
தனது தேடல் பற்றி எடுத்துச் சொல்லி அவர் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டார். தேடல் தொடங்கியது. ஆரம்பிக்கும்போதே தடங்கல்.
பஞ்சன் லாமா குறிப்பிட்ட மூவரில் முதல் பையன் இறந்து போயிருந்தான். அடுத்த சிறுவனோ இவர்களைப் பார்த்ததுமே ஓட்டம் பிடித்தான்.
எனவே மூன்றாவது சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர். நம்பிக்கையுடன் முன்னேறிய குழு , ரின்போசேவின் குறிப்புகளின் அடிப்படையில் ஒவ்வொரு வீடாகச் சென்று தேடத் தொடங்கியது.
இறுதியில் , ஒரு வீட்டைக் கண்டுபிடித்தனர். கிராமப்புற வீடு , மழை நீர் இறங்கும் சார்புக் கால்வாய் , மலைப் பாதை , கொடிமரம் , வாசலிலே ஒரு நாய். ஒன்றுவிடாமல் அனைத்தும் பொருந்தியிருந்தன.
ரின்போசே தன்னை அடையாளம் தெரியாதவாறு உடைகளை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் அந்தச் சிறுவன் வீட்டுக்குள் நுழைந்தார். கடுமையான பனிப் பொழிவால் இரவு தங்கவேண்டும்
என்று அந்த வீட்டில் அனுமதி கோரினார். அனுமதி கிடைத்தது. அன்பான உபசரிப்புக் கிடைத்தது. சுவையான தேநீர் , யாக் இறைச்சி , ரொட்டி ஆகியவை அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.
அனைவரும் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது , டென்சின் கியாட்சோ திடீரென்று ஓடி வந்தான். ரின்போசே கையில் இருந்த ஜெபமாலை மணிகளை சில நிமிடம் உற்றுப் பார்த்தான்.
பிறகு , பரபரப்புடன் சொன்னான். ‘ இது என்னுடையது. இதை ஏன் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். எனக்குக் கொடுங்கள். ’ ரின்போசே தன் திகைப்பை மறைத்தபடி , சொன்னார். ‘ இது பழையது.
வேண்டுமானால் , வேறு தருகிறோம். ’டென்சின் கியாட்சோ ஒப்புக்கொள்ளவில்லை. ‘ புதுசு வேண்டாம். இதுதான் வேண்டும். ’ இதுதான் தருணம் என்று ரின்போசேவுக்குத் தெரிந்துபோனது. இனி தாமதிக்கக்கூடாது.
பரிசோதனைகளை ஆரம்பித்துவிட வேண்டியதுதான். பையில் இருந்த பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து மேஜையில் வைத்தார். இரண்டு ஜெபமாலைகள்.
இரண்டு கைத்தடிகள். இரண்டு உடுக்கைகள். சிறுவனை அருகில் அழைத்தார். ‘இந்தா, எல்லாமே உனக்காகக் கொண்டுவந்திருக்கிறோம்.
உனக்கு வேண்டியதை நீயே எடுத்துக் கொள்! ’ டென்சின் கியாட்சோ அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அசல் கருப்பு மற்றும் மஞ்சள் ஜெப மாலைகளை எடுத்துக்கொண்டான். கைத்தடியையும் உடுக்கையையும் எடுத்துக்கொண்டான்.
தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். ‘ இவை என்னுடையவை , எனக்குத்தான் சொந்தம். ’ ரின்போசே ஆராய்ந்தார்.
போலியான கைத்தடியை , போலியான ஜெப மாலைகளை , போலியான உடுக்கையை டென்சின் கியாட்சோ தொடவில்லை. பதின்மூன்றாம் தலாய் லாமா பயன்படுத்திய பொருள்களை மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்திருந்தான்.
போலியான பொருள்கள் மேஜை மீதே கிடந்தன. சிறிது நேரத்தில் , டென்சின் மேஜையை நெருங்கினான்.
‘ இவை எனக்கு வேண்டாம்! ’ போலியான பொருள்களை மேஜையில் இருந்து கீழே தள்ளிவிட்டான். ரின்போசேவுக்கு நம்பிக்கை பிறந்தது. இவன்தான்.
இல்லை , இல்லை , இவர்தான். அப்போது , டென்சின் கியாட்சோ , ‘ சேரா லாமா , சேரா லாமா ’ என்று தன்னை மறந்து உச்சரிக்க ஆரம்பித்தான்.
இது உள்ளூர் மடத்தில் இருந்து வந்து குழுவில் இணைந்துகொண்டவரின் பெயர். ரின்போசே இப்போது நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.
இன்னும் ஓரே ஒரு சோதனைதான் பாக்கி. சிறுவனின் உடலில் உள்ள அங்கத் தழும்புகளையும் மச்சங்களையும் உறுதி செய்துவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பரிசோதனை செய்தார்.
எதிர்பார்த்தபடி , கியாட்சோவுக்கு இரு பெரிய காதுகள் , தோள்பட்டையில் இரண்டு சிறிய வீக்கங்கள் இருந்தன. புருவங்கள் இறுதியில் வளைந்திருந்தன, கால்களில் புலிக்கு இருப்பது போன்ற வரிகள் காணப்பட்டன.
உள்ளங்கைகளில் சங்கு போன்ற வரிகள் இருந்தன. ரெடிங் ரின்போசே முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ‘ வந்த காரியம் நிறைவேறிவிட்டது.
இந்தச் சிறுவன் எல்லாப் பரிசோதனைகளிலும் வென்றுவிட்டான். இவன்தான் அடுத்த தலாய் லாமா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
’ஆனால் , ரின்போசேவால் அந்த ஆனந்தத்தை முழுவதுமாகக் கொண்டாட முடியவில்லை. பயம் தடுத்தாட்கொண்டது. ஆம்தோ பகுதியை மா ஃபூ ஃபெங் (1936 – Ma Bufang ) என்னும் முஸ்லிம் ஆளுநர் நிர்வகித்து வந்தார்.
பௌத்தத்தை வெறுப்பவர்.
தன் பகுதியில் அடுத்த தலாய் லாமா கண்டுபிடிக்கப்பட்டதை அவர் எப்படி எடுத்துக்கொள்வார் ? சிறுவனை அவர் கடத்திச் செல்லலாம். அல்லது சீன அரசிடம் ஒப்படைத்து , பணம் பெறலாம். கொல்லக்கூடத் துணியலாம்.
தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பது என்பது நீண்ட பயணத்தின் முதல்படி. அவரை (Lhasa) லாசாவுக்குப் பத்திரமாக அழைத்துச் சென்று தங்க சிம்மாசனத்தில் அமர வைத்தால்தான் இலக்கு நிறைவேறும் , முடிவடையும். அதை நினைக்கும்போதே அவர் மனம் படபடத்தது.
லாசாவுக்கு நெடும் பயணம்
கண்டெடுக்கப்பட்ட புதிய லாமாவை ஆம்தோ பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமானால் முதலில் அங்கு அதிகாரத்தில் உள்ள மாஃபூ ஃபெங்கை ஏமாற்ற வேண்டும்.
எனவே , ரெடிங் ரின்போசே ஓர் உபாயம் செய்தார்.
தனியாக டென்சின் கியாட்சோவை மட்டும் அழைத்துச் செல்லாமல் ஏராளமான சிறுவர்களை ஒன்றாக அழைத்துச் சென்றார். மா ஃபூ ஃபெங் முன்பு அவர்களை நிறுத்தினார்.
‘ ஐயா , அடுத்த தலாய் லாமா உங்கள் பகுதியில் இருக்கிறாரா என்பதைக் கண்டறியப்போகிறோம். உங்கள் கண்முன் பரிசோதனைகள் நடத்திப் பார்க்கிறோம். ’ செய்தார். திட்டமிட்டபடி ஒருவரும் தேர்வாகவில்லை. மாஃபூஃபெங்கிடம் இதையே கூறினார்.
‘ஆம்தோ பகுதியில் அடுத்த தலாய் லாமா இருக்க வாய்ப்பில்லை , நாங்கள் கிளம்புகிறோம்.
’ ஆனால் , அவர் நினைத்தது நடக்கவில்லை. ‘ நீங்கள் என்ன பரிசோதிப்பது ? நானே சோதனை செய்கிறேன் ’ என்று சொல்லிக்கொண்டே , வந்திருந்த குழந்தைகள் அனைவரையும் மாஃபூஃபெங் தன்னருகே அழைத்தான். ரின்போசே நடுங்கினார்.
மாஃபூஃபெங் வைக்கும் சோதனையில் டென்சின் கியாட்சோ வெற்றி பெற்றால் , நிலைமை மோசமாகிவிடும். சிறுவனின் உயிருக்கு யாரும் உத்தரவாதம் அளிக்கமுடியாது.
ஒரு தேசத்தின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகிவிடும். அவ்வாறு நடைபெறாமல் இருக்க இறைவன்தான் காப்பாற்றவேண்டும். மனத்துக்குள் வேண்டிக்கொண்டார்.மாஃபூஃபெங் சிறுவர்களைத் தன்னருகே அழைத்தார்.
ஒரு பெட்டியை அவர்கள் முன் நகர்த்தினார். உள்ளே மிட்டாய்கள். ஆர்வத்துடன் ஓடிவந்த சிறுவர்கள் சிலர் மொத்தமாக அள்ளிக்கொண்டனர்.
இன்னும் சிலர் கூச்சத்துடன் ஒதுங்கிக்கொண்டனர். டென்சின் கியாட்சோ மெல்ல நகர்ந்து வந்து , ஒரே ஒரு மிட்டாயை எடுத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துகொண்டான்.
அவனது பேச்சு , நடவடிக்கை அனைத்தும் மற்ற சிறுவர்களிடம் இருந்து வேறுபட்டிருந்தது. ஒருவேளை இவன்தான் அடுத்த தலாய் லாமாவோ ? மாஃபூஃபெங் சந்தேகப்பட ஆரம்பித்தான். ரின்போசே அவசரமாகக் குறுக்கிட்டார்.
‘ஐயா , இந்தச் சிறுவனை எங்களுடன் லாசாவுக்கு அனுப்பிவைக்க முடியுமா ?’ மாஃபூஃபெங்கின் சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகிவிட்டது.
நிச்சயம் இவன் சாதாரணச் சிறுவனல்ல என்பதால்தான் ரின்போசே இவனை உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார்.
எனில் , அடுத்த தலாய் லாமா இவனாகத்தான் இருக்கவேண்டும். விடக்கூடாது. இப்படிப்பட்ட அற்புதமான வாய்ப்பு அரிதாகத்தான் கிடைக்கும்.
மாஃபூஃபெங் புன்னகை செய்தார். ‘ இந்தச் சிறுவனை அனுப்ப வேண்டுமானால் 1 லட்சம் சீன டாலர்கள் தர வேண்டும். ’ ரின்போசேவுக்குப் புரிந்துவிட்டது. இவன் கண்டுபிடித்துவிட்டான்.
ஆனால் , இவனோடு ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை. ‘ நீங்கள் சொல்வது போலவே செய்கிறோம். ’ உடனே , லாசாவைத் தொடர்பு கொண்டார்.
கேட்ட பணத்துக்கு ஏற்பாடு செய்தார். மாஃபூஃபெங் யோசித்தான். இதென்ன , கேட்டவுடன் கிடைக்கிறதே. எனில் , எதற்காகக் குறைவாகக் கேட்கவேண்டும் ?
‘ இந்தப் பணம் போதாது. கூடுதலாகத் தேவைப்படுகிறது. ’ ‘ எவ்வளவு ?’ ‘ ராணுவச் செலவுகளுக்கு 1 லட்சம் சீன டாலர். என்னுடைய பாதுகாவலர்கள் சீனாவிடம் உண்மையைச் சொல்லாமல் இருக்க 1 லட்சம்.
கும்பம் பௌத்த மடத்துக்கு 1 லட்சம். இந்தச் சிறுவன் லாசாவுக்குச் செல்ல பாதுகாப்புச் செலவுகளுக்கு 20,000. பிறகு சில்லரைச் செலவுகளுக்கு 10,000. மொத்தமாக , 3,30,000 சீன டாலர்.
’ரின்போசே திகைத்து நின்றார். ‘ இதற்குச் சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம். இல்லாவிட்டால் , சிறுவனை மறந்துவிடவேண்டியதுதான்.
’ பணத்தைப் புரட்ட பதினெட்டு மாதங்கள் ஆயின. மாஃபூஃபெங்குக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை உள்ளூர் முகமதியர்கள் மூலம் கொடுக்க ஏற்பாடு ஆனது.
அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு சீனப் பணத்தைவிட அதிகமாக இருந்ததால் , இந்திய ரூபாயில் பணத்தைக் கொடுக்கவேண்டும் என்று உள்ளூர் முகமதிய வர்த்தகர்கள் கோரினார்கள்.
இந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. தலாய் லாமாவை லாசா அழைத்துச் செல்ல எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார் ரின்போசே.
இறுதியில் , அனுமதி கிடைத்தது. 21 July 1939 பயணம் ஆரம்பமானது. டென்சின் கியாட்சோவின் பெற்றோர் , சகோதர சகோதரிகள் , உறவினர்கள் , நண்பர்கள் , பாதுகாப்பு வீரர்கள் என ஐம்பது நபர்கள் அடங்கிய குழு 1939 ஜூலை 21 அன்று லாசா புறப்படத் தயாரானது.
மூட்டை முடிச்சுகளைச் சுமக்க 350 கழுதைகளும் குதிரைகளும் தயாராயின. டென்சின் சகோதரி செரின் டோல்மா கருவுற்று இருந்ததால் அவர் பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
டென்சின் , குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பயணம் செய்தார். பெற்றோர் மற்றும் சகோதரர்கள் லோப்சங் சம்டீன், க்யாலோ தொண்டூப் ஆகியோருக்குத் தனி வண்டிகள்.
டென்சின் வழியெங்கும் சகோதரர்களுடன் சண்டை போட்டுக்கொண்டே சென்றான். நான்கு வயது சிறுவன் அல்லவா ? அதற்குள் வாய் வழிச் செய்திகள் பரவிவிட்டன.
புதிய தலாய் லாமா கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். அவர் லாசா நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். மலை வாழ் மக்கள் , உள்ளூர் மக்கள் என கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் , ஆசீர்வாதம் பெறவும் திரண்டனர்.
கம் , துல்கு , சைடம் என ஒவ்வொரு இடத்திலும் சாரி சாரியாகத் திரண்டு தரிசனம் செய்தனர். நல்ல வேளையாக சீன எல்லையைத் தாண்டும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை.
சீன எல்லையைத் தாண்டியதும் திபெத் தேசிய அரசுக்கு பதினான்காவது தலாய் லாமாவின் வருகை பற்றிய செய்தி அனுப்பப்பட்டது.
திபெத் அரசு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. லாசாவில் இருந்து மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்கக் குழுமினர்.
ரீஜெண்ட் , காபினெட் அமைச்சரவை , தேசியப் பாராளுமன்றம் ஆகியவை டென்சின் கியாட்சோவைப் பதினான்காவது தலாய் லாமாவாக அங்கீகரித்தன. கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வமான ஆவணத்தை நேரில் கொண்டு வந்து கொடுத்தனர்.
புதிய தலாய் லாமாவின் தாய்க்கு ‘ க்யாயும் ’ ( புனிதத் தாய்) என்றும் தந்தைக்கு ‘ க்யாயுப் ’ ( புனிதத் தந்தை) என்றும் பட்டங்கள் கொடுத்தனர்.
புத்தாடைகளையும் பரிசளித்தனர். தந்தை புத்தாடைகள் அணிந்துகொண்டு பவனி வந்தார். ஆனால் , தாய் புதிய பட்டு ஆடைகளை மறுத்துவிட்டார்.
திபெத்தியப் பெண்கள் உடுத்தும் எளிய ஆடைகளே போதும் என்று சொல்லிவிட்டார். டென்சின் கியாட்சோவைப் பொருத்தவரை இது பயணம் மாத்திரமல்ல , அவர் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கப்போகும் ஒரு திருப்புமுனை.
இனி சிறுவனாக அவர் பார்க்கப்பட மாட்டார். கருதப்பட மாட்டார். எனவே , அவரால் இனி ஒரு சிறுவனாக இருக்க முடியாது. நிறைய மாறவேண்டும்.
இனி குடும்பத்தினருக்கும் அவருக்கும் தொடர்புகள் இருக்காது. நினைத்த நேரத்தில் அவரது பெற்றோர்கள் வந்து பார்க்க முடியாது. ஒரு புதிய உலகம் அவருக்காகக் காத்திருந்தது.
அவரை உள்ளிழுத்துக்கொள்ளத் தயாராகயிருந்தது. டென்சின்னுக்கு மஞ்சள் ஆடைகளும் கம்பளித் தொப்பியும் அணிவிக்கப்பட்டது. தங்கப் பல்லக்கில் அவர் அமர வைக்கப்பட்டார்.
புத்த பிட்சுக்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கிக்கொண்டு முன்னே சென்றனர். இன்னொருவர் மயில் இறகுகளால் ஆன பெரிய குடையை அவரது பல்லக்குக்கு மேலே பிடித்துக்கொண்டு நடந்தார்.
தாரை , தம்பட்டம் , முரசொலிகள் காதைப் பிளந்தன. ஊதுபத்தியின் மணமும் புகையும் மேகங்களையே மறைக்கும் அளவுக்கு விண்ணில் மிதந்தன.
ஒவ்வோர் ஊரிலும் உள்ள பௌத்த மடாலயத்து லாமாக்கள் தங்கள் தலைமை லாமாவாகப் பதவியேற்க உள்ள புதிய தலாய் லாமாவைப் பார்க்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
1939 அக்டோபர் 6 ம் தேதி லாசாவில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்த ரிக்யா என்னும் இடத்தில் ஊர்வலமும் பல்லக்கும் நின்றன.
அங்கே தலாய் லாமாவாக பீடத்தில் அமர இருப்பவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற ‘ மிகப் பெரிய மயில் ’ என்று அழைக்கப்படும் கண்ணைக் கவரும் அழகிய சிம்மாசனம் காத்திருந்தது. அதில் அவர் அமர வைக்கப்பட்டார்.
இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டுதான் தலாய் லாமாவாக பீடம் ஏறப்போகும் குழந்தைகள் ஊர்வலத்தைப் பார்வையிடுவார்கள். விருந்தினர்களை வரவேற்பார்கள்.
எனவே , அந்த சிம்மாசனத்தில் டென்சின் அமர வைக்கப்பட்டார். வலது கையில் ஒரு பூச்செண்டுடன் , வருவோர்க்கு ஆசி வழங்கினார் டென்சின்.
அண்டை நாடுகளான பூடான் , நேபாளம் ஆகியவற்றில் இருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். பின்னர் தங்கப் பல்லக்கில் ஏறி லாசாவை நோக்கிப் பயணம் செய்தார்.
அந்தப் பல்லக்கை 16 நோபிள்கள் சிவப்பு தொப்பி , பச்சை ஆடைகளுடன் தூக்கி வந்தனர். பிரதமர் ரெடிங் ரின்போசே , அமைச்சர்கள் , தலாய் லாமாவின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் புடை சூழ வாத்திய முழக்கங்களுடன் லாசா நகருக்குள் அக்டோபர் 8 ம் தேதி ஊர்வலம் நுழைந்தது. தலாய் லாமாவை எல்லோரும் அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் என்பதால் மாடியில் இருந்த ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அங்கே இருந்த அனைவரும் கீழே வந்து குவிந்தனர். வழியெங்கும் கூடியிருந்த ஆயிரக் கணக்கானோர் ‘ இறைவா எங்கள் மன்னரைக் காப்பாற்று. ’ ‘ வாழ்க தலாய் லாமா ’ என்று கோஷங்களை எழுப்பினர். நோர்புலிங்கா அரண்மனையை நோக்கி ஊர்வலம் சென்றது.
தொடரும்
-ஜனனி ரமேஷ்-
தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும்: தலாய் லாமா யார் ? -(விறுவிறுப்பு தொடர்..(பாகம்-1)