ஹிரோஷிமா நகரின்மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நம்முடன் பேசுகின்றன என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

ஹிரோஷிமா நகரின்மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நம்முடன் பேசுகின்றன என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

இரண்டாம் உலகப்போரின்போது 6-8-1945 அன்று அந்நாள் அதிபர் ஹாரி ட்ருமேன் உத்தரவின்படி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீசப்பட்டது.

மானிட வரலாற்றின் கருப்பு ஏடாக அமைந்துவிட்ட இந்த தாக்குதலில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து ஜப்பானின் நாகாசாகி நகரில் மேலும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது.

இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி, பின்னர் இனம்புரியாத நோய்களின் விளைவாக இறந்தனர்.

இந்நிலையில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவிடத்தில் இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை புமியோ கிஷிடா ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முகமும் மனமும் மிகவும் இறுகிய நிலையில் காணப்பட்ட ஒபாமா, ஓரிரு நிமிடம் கண்களைமூடி மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு பேசிய ஒபாமா, 71 ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் இருந்து மரணம் விழுந்ததாகவும் அதனால் இந்த உலகமே மாறிப்போனதாகவும் குறிப்பிட்டார்.

நாம் ஏன் இங்கு வந்திருக்கிறோம்? என கேள்வி எழுப்பிய அவர், மனிதகுலத்தை மனிதகுலமே அழித்த பயங்கரமான கடந்தகாலத்தை நினைவுகூரவும், அந்த அழிவினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் இன்று இங்கு வந்துள்ளோம் என கூறினார்.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் நம்முடன் பேசுகின்றன. ஒரு மவுன அழுகையை நாம் கேட்கிறோம். நம்மை நாமே உள்நோக்கிப் பார்த்து, சீராய்வு செய்ய அவை கூறுகின்றன.

மனித முன்னேற்றத்தை மீறிய வகையிலான தொழில்நுட்ப முன்னேற்றம் நம்மை அழித்துவிடும். அணுவை பிளக்கக்கூடிய அறிவியல் புரட்சிக்கு இணையாக மனிதம்சார்ந்த பொதுப்புரட்சியும் ஏற்பட்டாக வேண்டும்.

அந்த குண்டு விழுந்த தருணத்தை கற்பனை செய்து பார்ப்பதற்காகதான், இந்த இடத்துக்கு வந்து, இந்த நகரத்தின் மத்தியில் இங்கே நின்றிருக்கிறோம் என்றும் ஒபாமா கூறினார்.

அணுகுண்டு வீச்சில் சிக்கி உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த குடிமக்கள் சிலரை சந்தித்த ஒபாமா அவர்களை தட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version